என்னுள் ஆயிரம்



கல்யாணமான பெண்ணுடன் கசமுசா

நடிகர் டெல்லி கணேஷ், தன் மகன் மஹாவையும் நடிகராக்கி அழகு பார்த்திருக்கும் படம்.ஹோட்டலில் வேலை செய்துகொண்டு ஆதரவற்ற நிலையில் இருக்கிறார் மஹா. ஒரு மழைநாளில் கணவனைப் பிரிந்து வாழும் ஸ்ருதியுகல்லுடன் கசமுசா நடந்து விடுகிறது.

அந்நிகழ்வுக்குப் பிறகு இருவரும் இருவேறு திசையில் பயணிக்கிறார்கள். பின்னர் மரீனா மைக்கேலைச் சந்திக்கும் மஹா, அவரை துரத்தித்  துரத்தி லவ்வுகிறார். வீட்டை விட்டு ஓடிப்போய் திருமணம் செய்துகொள்ள இவர்கள் நினைக்கும் வேளையில் முளைக்கிறது பிரச்சினை.

அப்பாவுக்கு பெருமை சேர்க்கும் பிள்ளையாகவே மஹா அறிமுகமாகி இருக்கிறார். குறிப்பாக கிளைமேக்ஸ் காட்சியில் அவரது நடிப்பு பிரமாதம். ஸ்ருதியுகல்லுக்கு கிளாமர்தான் கை கொடுத்திருக்கிறது. வின்சென்ட் அசோகன், சிறிய வேடத்தில் வந்தாலும் பிரமாதமாக நடித்திருக்கிறார்.கோபிசுந்தர் இசையில் பாடல்கள் சுமார்தான். அதிசயராஜின் ஒளிப்பதிவு அபாரம்.

படத்தின் பெரிய மைனஸ் முன்பாதி. கதை எதை நோக்கிச் செல்கிறது என்று புரியாமல் அலைபாய்கிறது ரசிகர் மனம். இருந்தாலும் இயக்குநர் கிருஷ்ணகுமார் இரண்டாம் பாதியில் தன் வித்தையை இறக்கிவைத்து ஓரளவுக்கு சமாளித்திருக்கிறார்.