பாட்டு விஞ்ஞானி!



மதன் கார்க்கி, 1980ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10ஆம் நாளில், கவிப்பேரரசு வைரமுத்து - பொன்மணி தம்பதியின் தலைமகனாகப் பிறந்தார். இவர் பிறந்த நேரத்தில்தான் வைரமுத்து தனது முதல் திரைப்பாடலை எழுதினார். ‘அன்று இரட்டைப்பிரசவம்’ என்று குறிப்பிடுவார் கவிஞர்.

பாலர் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்புவரை லயோலா மெட்ரிகுலேஷன் பள்ளியில் படித்தார் கார்க்கி. பின்னாளில் அதே பள்ளியின் 40ஆம் ஆண்டுவிழாவுக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு கவுரவிக்கப்படும் அளவுக்கு அறிவியல் தமிழால் ஆகாயம் தொட்டிருக்கிறார்.

கிண்டி பொறியியல் கல்லூரியில் இளநிலை முடித்தவர், ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ்லேண்ட் பல்கலைக்கழகத்தில் முதுநிலைப்பட்டம் மற்றும் ஆராய்ச்சிப்பட்டம் பெற்றார். படிப்பு முடிந்து தாயகம் திரும்பி, என்ன தொழில் செய்யலாமென்று நீண்டதொரு பட்டியல் வைத்திருந்தார் கார்க்கி. அதில் ‘ஆசிரியர் தொழில்’ என்பதே ஆதியிடத்தைப் பிடித்திருந்தது.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் துறையில் ஐந்து ஆண்டுகள் துணைப்பேராசிரியராகப் பணியாற்றினார். பாட்டுத்துறைக்கு அதிக நேரம் ஒதுக்கவேண்டிய நிலை வந்தபோது, பணியைவிட்டு விலகினார். கற்றுக்கொள்ளும் ஆர்வமும், மற்றவர்களுக்குக் கற்றுக்கொடுக்கும் திறனும் உள்ள மாணவி நந்தினியை இவருக்கு ரொம்பவே பிடித்துப் போனது.

ஐந்து ஆண்டுகளாகப் பொத்திவைத்திருந்த காதலை, அவரிடம் வெளிப்படுத்தினார். பின்னர் இருவீட்டு ஒப்புதலுடன் திருமணம் நடந்தது. ஆண்குழந்தைக்கு ‘ஹைக்கூ’ என்று பெயர் சூட்டியிருக்கிறார் கார்க்கி.

புத்தகம் படிக்கும் பழக்கம் இல்லை. இதுவரை எழுதிய கவிதைகளின் அதிகபட்ச எண்ணிக்கை ஐந்தைத் தாண்டாது. ஆனால், அகிலமறிந்த பாடலாசிரியராகப் பதிந்துவிட்டார் கார்க்கி. புதிய வார்த்தைகளைத் தேடுவதும், தேவைப்படும்போது உருவாக்குவதும்தான் இவரது வெற்றி.

ஆஸ்திரேலியாவில் இருந்தபோது ஓய்வுநேரத்தில், நண்பர்களுக்கு ரிங்டோன் வடிவமைத்துக் கொடுத்தபோது கிடைத்த பாராட்டும், அதில் சுயமாக எழுதிய வரிகளுக்குக் கிடைத்த வரவேற்பும் கார்க்கியை சினிமாப்பாட்டின் பக்கம் திரும்ப வைத்தது. கல்லூரியில் பணியாற்றிக் கொண்டே வாய்ப்பு தேடினார். வித்யாசாகர் இசையில், ‘கண்டேன் காதலை’ படத்தில், ரேஷ்மி-லாவண்யா பாடிய ‘ஓடோடி போறேன்…’ மூலம் பயணத்தைத் தொடங்கினார் கார்க்கி.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், ரஜினியின் ‘எந்திரன்’ படத்தில் இடம்பெற்ற ‘இரும்பிலே ஒரு இருதயம் முளைத்ததே…’ மற்றும் ‘பூம் பூம் ரோபோ…’ பாடல்கள் உலக அளவில் கவனத்தை ஈர்த்தன. அந்தப் படத்துக்கு வசனம் எழுதிய இவரைப் பாராட்டினார் ரஜினி.ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் ‘கோ’ படத்தில் இவர் எழுதிய ‘என்னமோ ஏதோ…’ பாடல் தமிழ்த்திரை இசையில் பெரும்புகழைப் பெற்றுத் தந்தது. ஷரத் வாசுதேவன் இசையில் ‘180’ படத்தில் வந்த ‘நீ கோரினால்…’ பாடல் பண்பலை வானொலி தரவரிசையில் பலகாலமாக முதலிடத்தில் ஒலித்தது.

தமன் இசையில் ‘மெளன குரு’ படத்தில் ‘அனாமிகா…’, ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் ‘ஏழாம் அறிவு’ படத்தில் ‘த ரைஸ் ஆஃப் டேமோ…‘, ‘நண்பன்’ படத்தில் ‘அஸ்கு லஸ்கா…’, தமன் இசையில் ‘காதலில் சொதப்புவது எப்படி’ படத்தில் ‘அழைப்பாயா அழைப்பாயா…’, சித்தார்த் பாடிய ‘பார்வதி பார்வதி…’, மணிரத்னத்தின் ‘கடல்’ படத்தில் இசையமைத்து, ரஹ்மான் பாடிய ‘ஏலே கீச்சான்…’ ‘சொன்னா புரியாது’ படத்தில் ‘கேளு மகனே கேளு…’, சித்தார்த் விபின் இசையில் ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய்’ படத்தில் ‘எங்கே போனாலும் பிரே பண்ணுவோம்…’, அனிருத் இசையில் ‘வணக்கம் சென்னை’ படத்தில் ‘ஒசக்க ஒசக்க…’, ‘பாண்டியநாடு’ படத்தில் இமான் இசையில் ரம்யா நம்பீசன் பாடிய ‘ஃபை ஃபை ஃபை கலாச்சி ஃபை…’,

அனிருத் இசையமைத்து ‘மான்கராத்தே’ படத்தில் பாடிய ‘மாஞ்சா மாஞ்சா…’, ‘என்னமோ ஏதோ’ படத்தில் இடம்பெற்ற ‘நீ என்ன பெரிய அப்பா டக்கரா…’, ஜி.வி.பிரகாஷ் இசையில் ‘ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை’ படத்தில் ‘ஃபேஸ்புக் லாகின் பண்ணு…’, ‘கத்தி’ படத்தில் விஜய் பாடிய ‘செல்ஃபி புள்ள…’, யுவன் சங்கர் ராஜா இசையில் ‘அஞ்சான்’ படத்தில் ‘பேங் பேங் பேங்…’, ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ‘ஐ’ படத்தில் ‘பூக்களே சற்று ஓய்வெடுங்கள்…’,

 எஸ்.ஜே.சூர்யா இசையில் ‘இசை’ படத்தில் ‘இசை வீசி…’, ‘ரோமியோ ஜூலியட்’ படத்தில் இமான் இசையில் அனிருத் பாடிய ‘டண்டணக்கா ணக்கா…’, ‘வாலு’ படத்தில் தமன் இசையில் டி.ராஜேந்தர் பாடிய ‘தாறுமாறு…’, அதே படத்தில் சிலம்பரசன் பாடிய ‘இங்கி பிங்கி இங்கி போங்கி…’, ‘சிகரம் தொடு’ படத்தில் ‘டக்கு டக்கு டக்குனு…’, ‘துப்பாக்கி’ படத்தில் விஜய் பாடிய ‘கூகிள் கூகிள் தேடிப்பாத்தேன்…’, ‘கப்பல்’ படத்தில் ‘காதல் கசாட்டா…’, ‘லிங்கா’வில் ‘மோனா மோனா…’, ‘மாஸ்’ படத்தில் ‘தெறிக்குது தெறிக்குது மாஸு…’, ‘பாகுபலி’யில் ‘பச்சைத் தீ நீயடா…’,  என கார்க்கியின் கம்ப்யூட்டர் இறகுகள் இசை வேண்டும் காதுகளை இளைப்பாற்றி வருகின்றன.

சினிமாவில் பாட்டெழுதவேண்டும் என்று முடிவெடுத்தபோது கார்க்கி சந்தித்த முதல் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. ‘நாம் ஒரு பெரிய ப்ராஜக்டில் சந்திப்போம்’ என்று சொல்லியிருக்கிறார் யுவன். தேதியும் மாதமும் வருடங்களும் கடந்தன. தனது 100ஆவது படமான ‘பிரியாணி’யில் பாடல் எழுத அழைத்திருக்கிறார். வெங்கட்பிரபு இயக்கிய அந்தப்படத்துக்கு எழுதிய பாடலில் ‘பொன்மாலை ஒன்று மீண்டும் உண்டானது…

ஏதேதோ எண்ணம் பூக்கின்றதே…’ என்று வார்த்தைகளை அடுக்கினார் கார்க்கி. வரிகளின் அர்த்தம் புரிந்த யுவனும் வெங்கட்பிரபுவும் பாராட்டியிருக்கிறார்கள். ‘இது ஒரு பொன்மாலைப் பொழுது…’, பாடலில்தான் இளையராஜாவும் வைரமுத்துவும் இணைந்தார்கள். ‘புன்னகை மன்னன்’ படத்தில் இடம்பெற்ற ‘ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்…’, பாடலுடன் அவர்களது தொடர்பு முடிந்தது. அதை நினைவுபடுத்தவே அப்படி எழுதியிருந்தார் கார்க்கி.

‘எந்திரன்’, ‘நண்பன்’, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘வை ராஜா வை’, ‘மாஸ்’, ‘பாகுபலி’ படங்களுக்கு வசனம் எழுதியிருக்கிறார் கார்க்கி. பாட்டும் வசனமும் தண்டவாளமாக இணைந்திருக்கின்றன.

கார்க்கி ஆராய்ச்சி நிறுவனத்தின் மூலம் ‘லிரிக் எஞ்சினியரிங்’ என்ற புதுமையை உலகிலேயே முதன்முறையாக வடிவமைத்திருக்கிறார். பாடல்துறையினருக்கு உதவும் வகையில் ‘எமோனி’, ‘கிளி’, ‘டூபாடூ’ என நூற்றுக்கு மேற்பட்ட உருவாக்கங்கள் கார்க்கியின் கணினியில் உள்ளன. விரைவில் அவை அனைவருக்கும் பகிரப்படும்.

அடுத்த இதழில்

இசையமைப்பாளர் ஸ்ரீ சாய் தேவ்

நெல்லைபாரதி