நீங்க எதிர்பார்க்குற விஷயம் எங்கிட்டே இருக்கு!



அருந்ததி சஸ்பென்ஸ்

பத்மாவதியாக கன்னடத்தில் அறிமுகமானபோது அருந்ததிக்கு வயசு பதினெட்டு. ‘வெளுத்துக்கட்டு’ மூலம் அப்ஸராவாக அப்ஸரஸ் மாதிரி தமிழுக்கு வந்தார். ‘போடிநாயக்கனூர் கணேசன்’, ‘சுண்டாட்டம்’, ‘நேற்று இன்று’, ‘நாய்கள் ஜாக்கிரதை’, ‘தொட்டால் தொடரும்’ என்று அருந்ததியாக மாறி தொடர்ச்சியாக நடித்துக் கொண்டிருப்பவர் இன்னமும் தனக்கு சரியான பிரேக் அமையாமல் போராடிக் கொண்டிருக்கிறார்.

‘அர்த்தநாரி’, ‘டக்கர்’, ‘சரவணப்பொய்கை’ என்று அடுத்தடுத்து நடிப்பவர், “வில்லேஜ் கேரக்டர், மாடர்ன் கேரக்டர் என்றெல்லாம் பிரித்துப் பார்த்து நடிப்பதில்லை” என்கிறார். இன்னமும் முன்னணி நாயகர்களின் கடைக்கண் பார்வை படவில்லை என்றாலும் நம்பிக்கையோடு நடித்துக் கொண்டிருக்கும் அருந்ததியோடு காஃபி ஷாப்பில் சின்ன அரட்டை.

“அடிக்கடி பேரு மாத்திக்கறீங்களே? இது மூணாவது பேரு...”“நல்ல பேரு எடுக்கணும்னுதான். அருந்ததியையே பர்மனென்டா ஃபிக்ஸ் பண்ணிடலாம். இந்தப் பேரு நல்லாதான் இருக்கு.”“க்யூட்டான அருந்ததி, கரடுமுரடான போலீஸ் கேரக்டரில்?”“யெஸ். ‘அர்த்தநாரி’, உண்மை சம்பவங்களை அடிப்படையா வெச்சி எடுக்கப்பட்ட ஆக்‌ஷன் படம்.

என்னோட ஏழு வருஷ கேரியரில் இந்தப் படத்துக்குதான் ரொம்ப கஷ்டப்பட்டிருக்கேன். பிடிச்சி நடிச்ச படம்னும் சொல்லலாம். சின்ன வயசுலே ‘வைஜெயந்தி ஐ.பி.எஸ்’ பார்த்திருக்கேன். விஜயசாந்தி மாதிரி நானும் மிடுக்கா போலீஸ் யூனிஃபார்ம் போட்டு நடிக்கணும்னு ரொம்ப நாள் கனவு.

படத்துலே எனக்கு ஹீரோ ராம். ஹீரோயினுக்கு நல்ல லீட் கொடுக்குற கேரக்டர். மொத்தக் கதையையுமே என் தோளில் சுமக்க வெச்சிருக்காங்க. விமன் போலீஸோட வொர்க்கிங் ஸ்டைல், பாடிலேங்குவேஜ் என்று பர்ஃபெக்டா நான் செய்யுறமாதிரி நானே நம்பமுடியாத அளவுக்கு என்னை மாத்தியிருக்கார் டைரக்டர் சுந்தர இளங்கோவன்.”“துப்பாக்கி சுடுற காட்சிகளில் திணறிட்டீங்களாமே?”

“துப்பாக்கியை எப்படி பிடிக்கணும், ட்ரிக்கரை எப்படி அழுத்தணும்னு எல்லாம் ஒரு போலீஸ் அதிகாரி கிட்டே டிரைனிங் எடுத்துக்கிட்டேன். சண்டைக் காட்சிகளில் குற்றவாளிகளைத் துரத்துறது, எகிறிக் குதிச்சி உதைக்கிறது எல்லாம் ரியலா இருக்கணும்னு ஸ்டண்ட் பிராக்டிஸும் பண்ணினேன்.

காட்சி இயல்பா இருக்கணும் என்பதால் ஒரிஜினல் துப்பாக்கி என்ன எடை இருக்குமோ, அதே எடையில்தான் டம்மி துப்பாக்கியை டைரக்டர் ரெடி பண்ணியிருந்தார். என்னதான் டம்மியான துப்பாக்கியா இருந்தாலும் சுடுற சீனில் நடிக்கிறப்போ என்னை அறியாம பீதி அடைஞ்சிட்டேன். அப்போவெல்லாம் டைரக்டர்தான் தைரியம் கொடுத்து நடிக்க வெச்சார். ‘தி ப்ளூ ஸ்டில்’, ‘போன் கலெக்டர்’ போன்ற படங்களை ரெஃபரன்ஸுக்காக பார்க்க வெச்சாரு.  ஷூட்டிங்கின் போது காலில் பலமா காயம் பட்டுச்சி.

ஆனா, படப்பிடிப்பைப் பார்த்து என்னோட துணிச்சலான நடிப்பை தயாரிப்பாளர் முத்தமிழ்ச் செல்வன் பாராட்டினப்போ, அத்தனை வலியும் போயே போச்சி.”“போலீஸ் படம்னா ரெகுலர் அருந்ததியை நாங்க எதிர்பார்க்க முடியாது இல்லையா?”“அப்படியில்லை. நீங்க எதிர்பார்க்கிற விஷயமும் என்னிடம் இருக்கிறது. படத்தோட ஸ்க்ரிப்ட் அப்படி...”“கேள்வியை கரெக்டா புரிஞ்சுக்கிட்டீங்க. அருந்ததின்னா கிளாமர்னு எடுத்துக்கலாமா?”

“கிளாமருக்கு ஒரு எல்லை இருக்கு, வரையறை இருக்குன்னுல்லாம் அளந்துவிட நான் தயாரா இல்லை. கதைக்கு தேவைப்பட்டா கிளாமர் ஓக்கே. ஒரு நடிகையாக எனக்கு சவால் கொடுக்கக்கூடிய எந்த கேரக்டரையும் எடுத்துப்பேன். நிஜத்தில் நான் எந்த உடை உடுத்த வேண்டும் என்பதை நான்தான் முடிவு செய்வேன். ஆனால், சினிமாவைப் பொறுத்தவரை திரையில் நான் எந்த உடையில் வரவேண்டும் என்பதை இயக்குநர்தான் முடிவு செய்வார்.”
“அழகா இருக்கீங்க. கிளாமர் ரோலிலும் செட் ஆகுறீங்க. ஆனா, அடிக்கடி பெரிய கேப் விழுதே?”

“தமிழுக்கு வந்த புதுசுலே ‘வெளுத்துக்கட்டு’ படத்தில் நல்லா கவனிக்கப்பட்டேன். அடுத்து வெளியான ‘போடிநாயக்கனூர் கணேசன்’, ‘சுண்டாட்டம்’ படங்கள் நல்ல அடையாளம் ஏற்படுத்திக் கொடுத்தன. ‘நாய்கள் ஜாக்கிரதை’ நல்ல ரீச். இப்போ ‘அர்த்தநாரி’, ‘டக்கர்’, ‘சரவணப்பொய்கை’ன்னு போய்க்கிட்டிருக்கு. அதுக்காக நான் 24 மணி நேரமும் பிஸியா நடிக்கிற நடிகைன்னு சமாளிக்க விரும்பலை. அப்பப்போ இடைவெளி ஏற்படுறது இயல்புதான். மீடியா மற்றும் சினிமா நிகழ்ச்சிகளில் நான் முகம் காட்டாமல் இருப்பதாலும் அதுமாதிரி தோன்றுது.”

“ஏழு வருஷமா ஃபீல்டில் நிக்கறீங்க. ஆனா, போனவருஷம் அறிமுகமான ஹீரோயின் இன்னைக்கு அவுட் ஆஃப் பீல்டு ஆகுற நிலைமை இருக்கே?”“திறமையும், அர்ப்பணிப்பும் இந்தத் துறைக்கு ரொம்ப முக்கியம். ஒவ்வொரு நடிகைக்குமே ஒரு தனித்துவம் இருக்கும். அதை கண்டுபிடிச்சி அவங்க அவங்களுக்கு செட் ஆகிற கதை, கேரக்டரை செலக்ட் பண்ணினா தொடர்ச்சியா படம் பண்ணிக்கிட்டே இருக்கலாம்.”
“அருந்ததிக்கு போட்டி யார்?”

“என்னோட சினிமா கிராஃப் சரியான விகிதத்தில் வளர்ந்துக்கிட்டே இருக்கு. போட்டி போட இது விளையாட்டு இல்லை. அப்படியே போட்டின்னு நீங்க எடுத்துக்கிட்டாலும் எனக்கு நானேதான் போட்டி.”“இப்போவெல்லாம் சினிமாவைத் தாண்டி ஹோட்டல், துணிக்கடைன்னு பிசினஸில் ஈடுபடுறாங்க ஹீரோயின்ஸ். நீங்க?”

“பேசிக்காவே நாங்க பிசினஸ் ஃபேமிலிதான். நேரம் கிடைக்கிறப்போ அப்பாவுக்கும், அண்ணனுக்கும் தொழிலில் உதவுறேன். ஆனா, என்னோட தொழில் சினிமாதான். அதை சிறப்பா, நிறைவா செய்யணுங்கிறதுதான் என்னோட ஆசை.”

- சுரேஷ் ராஜா