தமிழ் நடிகைகள் புறக்கணிப்பு



ஸ்ரீப்ரியங்கா போர்க்கொடி

மேடை கிடைத்தால் போதும், மழையாக தன் ஆதங்கத்தை கொட்டுகிறார் ‘வந்தா மல’ ஸ்ரீப்ரியங்கா. சமீபத்தில் அவர் நாயகியாக நடித்த ‘சாரல்’ படத்தின் ஆடியோ விழாவிலும் சாரல்மழையாக சரமாரியாகக் கொட்டினார். என்னதான் பிரச்சினை என்று மேடையில் இருந்து இறங்கியவரைப் பிடித்துக் கேட்டோம்.

“என்னோட குடும்பம் ரொம்ப எளிமையான குடும்பம். என் ஊரு பாண்டிச்சேரி. சினிமாவை நம்பி ஸ்கூலை ஏரக்கட்டிட்டு வந்திருக்கேன். நான் இண்டஸ்ட்ரிக்கு வந்து நான்கைந்து வருஷம் ஆயிடிச்சி. அப்பவும் சரி, இப்பவும் சரி, படப்பிடிப்பில் ஹீரோயின் என்றெல்லாம் நான் எந்த பந்தாவும் காட்டியதில்லை. கேரவன் வேணும், நட்சத்திர ஓட்டலில்தான் தங்க வைக்கணும்னு எல்லாம் தயாரிப்பாளருக்கு செலவு வெச்சதில்லை. நல்ல தமிழ் பேசுவேன், நல்லா நடிக்கத் தெரியும்னு ஊடகங்களில் பாராட்டறீங்க.

இவ்வளவு தகுதி இருந்தும் தெற்கு தேய்கிறது, வடக்கு வாழ்கிறது நிலைமைதான் சினிமாவில் இருக்கு. வடநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுபவர்களுக்கு இருக்கும் மரியாதை, இங்கே பிறந்து வளர்ந்து சினிமாவுக்கு வந்த தமிழ் நடிகைகளுக்கு இல்லை” என்று கொந்தளித்தார் ஸ்ரீப்ரியங்கா.அவரை கூல் செய்யும் விதமாக ‘சாரல்’ பற்றி கேட்டோம்.

“என்னுடைய கேரியரில் இது முக்கியமான படமாக இருக்கும். ஒவ்வொரு படம் நடிக்கும்போதும் இப்படித்தான் சொல்லுகிறேன். ஆனால், நிஜமாகவே ‘சாரல்’ எனக்கு ஸ்பெஷல். இது ஒரு ரோட் மூவி. இம்மாதிரி பயணக் கதைகளுக்கு ரசிகர்களிடம் எப்போதுமே வரவேற்பு உண்டு. இயக்குநர் DRL ரொம்ப திறமைசாலி. அவர் எங்ககிட்டே வேலை வாங்கின விதத்துலேயே இந்தப் படம் சூப்பர்ஹிட்டுன்னு எங்களுக்கு தோணிடிச்சி. எனக்கு ஜோடியாக அசார் நடிக்கிறார்.

பவர்ஸ்டார் சிரிப்பு வில்லனா வர்றார். இந்தப் படத்தோட பாட்டுகளை விஜய்சேதுபதி, விவேக்குன்னு ஜாம்பவான்கள் பாராட்டி இருக்காங்க. இஷான் தேவ் இசையில் எல்லா பாட்டும் நல்லா வந்திருக்கு” என்றார் ஸ்ரீப்ரியங்கா.தமிழ் இயக்குநர்களே! தமிழ் நடிகைகளுக்கும் அப்பப்போ கொஞ்சம் இடஒதுக்கீடு கொடுங்க. அவங்களோட கோரிக்கையிலும் நியாயம் இருக்கத்தானே செய்யுது.

- எஸ்