ஹீரோயினை காணோம்! படப்பிடிப்பில் பரபரப்பு



“உலகிலேயே எந்த மொழிக்கும் இல்லாத பெருமைகள் செம்மொழியாம் தமிழுக்கு உண்டு. வார்த்தை உச்சரிப்பு, இலக்கணக்கட்டு என்று தமிழுக்குரிய தனித்தன்மைகளை வேறெந்த மொழியோடும் ஒப்பீடு செய்து பார்க்க முடியாது.

அத்தகைய மொழிக்கு பெருமை சேர்க்கும் படமாக ‘சொல்’ இருக்கும்” என்கிறார் நடிகரும் இயக்குநருமான பாவண்ணன். நல்ல தமிழில் உரையாடும் பாவண்ணனுடன் ஒரு சந்திப்பு.“தலைப்பே கதையை சொல்லிடுதே?”

“உண்மைதான். ஆனால், இதைவிட பொருத்தமான தலைப்பு வேறு கிடைக்கலை. கதையோட கருவை ஒரு தலைப்பு சொன்னா, அது படத்துக்கு கூடுதல் வலிமைதான்னு நினைக்கிறேன். காதலும் இல்லை, கல்யாணமும் இல்லை. ஆனா கணவன் - மனைவின்னு வித்தியாசமான ப்ளாட். காதலே இல்லாம இருவர் சேர்ந்துவாழ முடியுமான்னு அலசியிருக்கேன்.

கண்டதும் காதல் என்பதுதான் நம்ம சினிமாவோட கச்சா. எனினும் அதைத் தாண்டினதுதான் சராசரி தமிழனின் வாழ்க்கை. கை தொடாமல், கால் படாமல் மெய்ப்பட வாழும் வாழ்க்கையின் பக்கங்களை படம் பார்க்குற ஒவ்வொரு ரசிகனும் ‘சொல்’ மூலமா புரட்டிப் பார்ப்பான்.”
“இலக்கியவாதி என்பதால் இலக்கியத்தனமா பேசுறீங்க. இப்போ நடிகனாகவும், இயக்குநராகவும் ஆகியிருக்கீங்க. எப்படி ஃபீல் பண்ணுறீங்க?”

“அரசியலும், இலக்கியமும் பயிற்றுவிக்கும் பச்சையப்பா கல்லூரியில்தான் முதுகலை தமிழ் இலக்கியம் முடிச்சேன். அதுக்குப் பிறகு இலக்கியம் சார்ந்து என்னோட பணிகளை அமைச்சிக்கிட்டேன். கவிஞர் சொற்கோ மூலமாதான் சினிமா அறிமுகம்.

தொடர்ச்சியா இயக்குநர் வீ.சேகர் இயக்கிய படங்களில் வேலை பார்த்தேன். தயாரிப்பாளர் ‘செம்மொழி கலைக்குடில்’ விஜயா பாவண்ணன், இணை தயாரிப்பாளர் ‘சரண் கிருஷ்ணா பிக்சர்ஸ்’ சரஸ்வதி ஆகியோர் என்னை இந்தப் படம் மூலமா கதைநாயகனாகவும், இயக்குநராகவும் அடையாளப்படுத்துறாங்க.

இப்போதைய என்னோட மகிழ்ச்சியையும், மனநிறைவையும் வெளிப்படுத்த எனக்கு வார்த்தைகள் கிடைக்கலை. நம்மோடு ஆயிரம் பேர் பயணிக்கலாம். ஆனா, நம்ம லட்சியத்தை நிறைவேற்றும் காலகட்டத்தில் உடனிருப்பவர்கள் எந்நாளும் நினைவுகளில் கல்வெட்டாக பதிவார்கள்.”“இப்படி கமல் மாதிரி பேசுனீங்கன்னா ‘வண்ணத்திரை’ வாசகர்கள் தெறிச்சிடுவாங்க...”

“சரிங்க. அப்போன்னா கதைநாயகியை பத்திச் சொல்றேன். கூடலூர் பகுதியில் படப்பிடிப்பு நடந்தது. அங்கு ஒரு பெண்ணை புலி அடித்துக் கொன்றுவிட்டதாக பதட்டம். எங்களுடைய நாயகியை வேறு காணோம். ஒருவேளை புலிக்கு இரையானது இவரோ என்று அஞ்சி பதறிவிட்டோம். கேரளாவில் இருக்கும் நாயகியின் வீட்டை தொடர்பு கொண்டு அங்கு வந்திருக்காரா என்று கேட்டோம்.

அவர் அங்கும் இல்லை என்றதால் எங்களுக்கு அச்சம் அதிகரித்தது. வனத்துறை உதவியோடு காடு முழுக்க சல்லடை போட்டு அலசியபோது கண்டுபிடித்தோம். சும்மா உலா சென்றவர், வழி தெரியாமல் நடுக்காட்டில் மாட்டிக் கொண்டார். ஓர் இரவு முழுக்க வனத்தில் கழித்திருக்கிறார். மலங்க மலங்க விழித்துக் கொண்டிருந்தவரை சமாதானப்படுத்தி சமநிலைக்குக் கொண்டுவந்தோம்.

கவர்ச்சியை மட்டுமே நம்பும் கதாநாயகிகள் பலரும் கலாச்சாரத்தை பதிவு செய்யும் இந்த வேடத்தில் நடிக்க மறுத்தபோது, அஞ்சனாராஜ் தன்னை தமிழச்சியாக மாற்றிக்கொண்டு ஏற்ற வேடத்துக்கு பெரும் சிறப்பு செய்திருக்கிறார்.”“படத்தில் வேறென்ன விசேஷம்?”“தமிழின் 247 எழுத்துகளும் வருமாறு ஒரு பாடல் எழுதியிருக்கிறேன்.”

- சுரேஷ்ராஜா