பாட்டு பாடும் நட்சத்திரங்கள்!



சினிமாவில் எது செய்தாலும், அது புதுமைதான். சுவாரஸ்யம்தான். அந்தக்காலத்தில் சரீர வளம் மட்டுமின்றி, நல்ல சாரீர வளமும் இருந்தால்தான் நடிக்கவே அழைப்பார்கள். இப்போது அப்படியில்லை. எல்லாமே தலைகீழ். டப்பிங் பேசவே தெரியாதவர்கள் கூட நடிகராகி விடலாம். அதிநவீன டெக்னாலஜி, அவர்களைக் காப்பாற்றிக் கரை சேர்த்துவிடும்.

இன்றைய விளம்பர யுகத்தில், ஒரு படத்தை அடித்தட்டு மக்களுக்கும் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டிய பொறுப்பு தயாரிப்பு மற்றும் இயக்குனர் தரப்புக்கு இருக்கிறது. அதனால், எதைச் செய்தால் படத்துக்கு நல்ல பப்ளிசிட்டி கிடைக்கும் என்று யோசித்து, அதைச்செய்ய ஆர்வம் காட்டுகிறார்கள். அதில் ஒன்றுதான், படத்தில் நடிப்பவர்களையே பாட வைப்பது.

‘தேவர் மகன்’ படத்தில் சிவாஜி, ‘மன்னன்’ படத்தில் ரஜினிகாந்த், எழுபத்தைந்துக்கும் மேற்பட்ட படங்களில் கமல்ஹாசன், ‘அமரன்’ படத்தில் கார்த்திக், ஓரிரு படங்களில் சரத்குமார் மற்றும் நெப்போலியன், கிட்டத்தட்ட இருபத்தைந்து படங்களில் விஜய்... இவர்கள் தவிர்த்து விக்ரம், சிம்பு, தனுஷ், சித்தார்த், நகுல், விஜய் ஆண்டனி என்று பல நட்சத்திரங்களும் சொந்தக்குரலில் பாடியிருக்கின்றனர்.

இவர்களில் கமல்ஹாசன், சிம்பு, தனுஷ் ஆகிய மூவருக்கும் பாட்டு எழுதும் தனித்திறனும் உண்டு. எஸ்.பி.பாலசுப்பிரமணியம், எஸ்.பி.பி.சரண், கிரிஷ், காந்த் தேவா போன்றவர்கள், பின்னணி பாடுவது மற்றும் இசைத்துறையில் இருந்தாலும், அவ்வப்போது சினிமாவிலும் நடித்து வருகிறார்கள்.   

ஓரிரு படத்தில் மட்டும் சூர்யா, அருண் விஜய், சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, விமல், ராம கிருஷ்ணன், சசிகுமார், விஜய் சேதுபதி, சினேகன் போன்றோர் பாடினர்.
காமெடி நடிகர்களில் விவேக், வடிவேலு, தம்பி ராமையா, சூரி, பிரேம்ஜி அமரன், எம்.எஸ்.பாஸ்கர், கஞ்சா கருப்பு, ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் ஆகியோரும், இயக்குனர் பிளஸ் நடிகர்களில் பாரதிராஜா, கே.பாக்யராஜ், டி.ராஜேந்தர், ஆர்.பாண்டியராஜன், வெங்கட் பிரபு, மிஷ்கின், அமீர் போன்றோரும் சில படங்களில் பாடியிருக்கின்றனர்.

இவர்களில் விவேக், தம்பி ராமையா, டி.ராஜேந்தர் ஆகியோர் பாட்டு எழுதும் தனித்திறமை பெற்றவர்கள். கானா உலகநாதன், மரண கானா விஜி, கானா பாலா போன்றவர்கள், கானா பாட்டு எழுதுகிறார்கள்... பாடுகிறார்கள்... தேவைப்பட்டால் நடிக்கிறார்கள்.

நடிகைகளில் குஷ்பு, சுகன்யா, மீனா, சந்தியா, மம்தா மோகன்தாஸ், ஸ்ருதி ஹாசன், ரம்யா நம்பீசன், நித்யா மேனன், மீரா நந்தன், லட்சுமி மேனன் போன்றோர் சொந்தக்குரலில் பாடியிருக்கின்றனர். இவர்களில் ஸ்ருதிஹாசன் பாட்டு எழுதுவார், இசையமைப்பார். ‘அழகு’ என்ற தனி ஆல்பத்தை சுகன்யா பாடி வெளியிட்டுள்ளார்.
‘தற்போதுள்ள சினிமாவில், தொழில்முறை பாடகர்கள் மட்டுமே பாட வேண்டும் என்ற நிலை மாறிவிட்டது.

ஆர்வமும், தகுதியும் உள்ள யார் வேண்டுமானாலும் பாடலாம் என்ற நிலைக்கு அதி நவீன தொழில்நுட்ப வசதிகள் உதவுகின்றன. நட்சத்திரங்களைப் பாட வைப்பது தவறான விஷயம் இல்லை. ஒரு படத்தின் விளம்பரத்துக்கு சைடு அட்ராக்ஷன் மாதிரி இதுபோன்ற விஷயங்கள் அமைகின்றன’ என்று சொல்கிறார், முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான தமன்.

- தேவராஜ்