பாமரனைப் பாடிய பாட்டுக்கோட்டை!



திண்ணைப்பள்ளிக்கூடத் தில் இரண்டாண்டுகள் அரிச்சுவடி படித்த தமிழ் அறிவை வைத்துக்கொண்டு, பாட்டுத்துறையில் தனியாசனம் பிடித்தவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். தஞ்சை மாவட்டத்தில் பட்டுக்கோட்டையை அடுத்த செங்கப்படுத்தான்காடு கிராமத்தில், அருணாசலம் -விசாலாட்சி தம்பதியின் மகனாகப் பிறந்தார் கல்யாணசுந்தரம்.

பள்ளிக்கூடம் போகவேண்டிய வேலை இல்லை என்பதால், நாடகம் பார்ப்பதும், சினிமா பார்ப்பதும் பொழுதுபோக்கானது. அப்பாவும், அண்ணனும் பாட்டுக்கட்டு பவர்கள் என்பதால் கல்யாணசுந்தரத்துக்கு சுதந்திரம் கிடைத்தது. கேட்ட பாடல்களை வார்த்தை பிசகாமல் பாடிக்காட்டியதில் குடும்பத்திலும், சுற்றுவட்டத்திலும் கவனிக்கப்பட்டார்.

அண்ணன் கணபதியுடன் சென்னைக்கு வந்து இரண்டு பேருக்கும் பாட்டு வாய்ப்பு கேட்க முடிவுசெய்தார்கள். அவர்கள் வந்த நேரத்தில் காந்தி படுகொலை காரணமாக சென்னை நகரம் கலவரத்தால் சூழப்பட்டிருந்தது. திக்குத்தெரியாத சகோதரர்கள் ஊருக்குத் திரும்பினார்கள். சினிமா ஆசையைஒதுக்கிவிட்டு, சம்பாதிப்பதற்காக பினாங்கு பூமிக்குப் போய்விட்டார் அண்ணன். ஆனால், கல்யாணசுந்தரத்தின் ஆசை மட்டும் அகல மறுத்து, அகலமாக விரிந்தது.

உள்ளூரில் ஆரம்பித்து, வெளியூர்களிலும் விலாசம் பெற்ற நாடக அனுபவத்துடன்,சேலம் மாடர்ன் தியேட்டர்ஸில் சினிமா வாய்ப்பு கேட்டு நின்றார் கல்யாணசுந்தரம். நாடக வாய்ப்பு கிடைத்தது. சிலநாட்களில் அங்கிருந்து விலகி, நண்பரின் பரிந்துரையில் மதுரை சக்தி நாடக சபாவில் சேர்ந்தார். பாட்டெழுதவும் வாய்ப்பு இல்லை, வேஷமும் கிடைக்கவில்லை. ஓடியாடி எடுபிடி வேலை பார்த்த உழைப்புக்கு ஊதியம் கிடைத்தது. ‘கவியின் கனவு’ நாடகத்தில் ராஜகுருவாக நடித்து, பாராட்டுக்களை அள்ளினார்.

பாண்டிச்சேரி நாடக நண்பர்களின் பரிந்துரைக் கடிதங்களோடு பாரதிதாசனைச் சந்திக்கச் சென்றார் கல்யாணசுந்தரம். அவரது கவிதைகளைக்கண்ட பாரதிதாசன், தனது ‘குயில்’ பத்திரிகைக்கு உதவியாளராகச் சேர்த்துக்கொண்டார்.

 பணித்திறனால் பாவேந்தரிடம் பாராட்டு வாங்கினாலும், பாட்டெழுதும் ஆசை குறையவே இல்லை . அவரது ஆசியுடன் சென்னைக்கு வந்த கல்யாணசுந்தரம்,  ராயப்பேட்டை பொன்னுசாமி நாயக்கர் தெரு, 10ஆம் எண் வீட்டின் முன்புறத்தில்  மாதம் பத்து ரூபாய் வாடகையில் சிறிய அறை பிடித்துத் தங்கினார். அவரது அறைத்தோழராக நடிகர் ஓ.ஏ.கே.தேவர் இருந்தார்.

தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றுவிட்டு, அறைக்குத் திரும்பிய கல்யாணசுந்தரம், பாட்டெழுதி வைத்திருந்த காகித மூட்டைகளைக் காணாமல் கவலையடைந்தார். ‘‘உன்னோட பாடல்களை ஒரு கம்பெனிக்காரனும் வாங்கிக்க மாட்டேங்கிறான். பழைய பேப்பர்காரன் மூணு ரூபா கொடுத்தான்’’ என்று சொன்னார் ஓ.ஏ.கே. சோகத்தை மறைத்துக் கொண்டார் கல்யாணசுந்தரம்.

பக்கத்து அறையில் இருந்த நடிகர் நம்பிராஜன் மூலமாக 1954ல் ‘படித்த பெண்’ படத்துக்குப் பாட்டெழுதும் வாய்ப்பு கிடைத்தது. அந்தப் படத்தில் இரண்டு பாடல்கள் எழுதினார். ஒரு பாட்டுக்கு  நூற்றைம்பது ரூபாய் சன்மானம் என்று பேசப்பட்டது. சம்பளம் தராமல் இழுத்தடித்தார்  தயாரிப்பாளர். பலமுறை கேட்டும் பலன் இல்லை. பொறுத்துப் பார்த்த கல்யாணசுந்தரம், தயாரிப்பாளரின்  வீட்டுக்குச் சென்றார்.

வெளியிலேயே நிற்கச் சொல்லிவிட்டார் அவர். கொதித்துப்போன கல்யாணசுந்தரம், ‘தாயால் வளர்ந்தேன், தமிழால் அறிவு பெற்றேன். நாயே நேற்றுன்னை நடுத்தெருவில் சந்தித்தேன், நீ யார் என்னை நில்லென்று சொல்ல?’  என்று ஒரு காகிதத்தில் எழுதி கதவிடுக்கில் செருகி வைத்துவிட்டுத் திரும்பி வந்து விட்டார். படித்துப் பார்த்துப்  பதறிய தயாரிப்பாளர், கவிஞனின் கோபம் நம்மைச் சும்மா விடாது  என்று பயந்து, ஆள் மூலமாக கவிஞரின் இருப்பிடம் தேடி பணத்தைக் கொடுத்தனுப்பியிருக்கிறார்.

‘படித்த பெண்’ படம் வெளியீட்டுக்குத் தாமதமாக, கல்யாணசுந்தரம் பாடல் எழுதிய இரண்டாவது படமான ‘மகேஸ்வரி’ முந்திக்கொண்டு, கல்யாணசுந்தரத்தின் பாட்டுப்பயணத்தைத் துவக்கி வைத்தது.  ‘அறம் காத்த தேவியே, குலம் காத்த தேவியே! நல் அறிவின் உருவமான சோதியே! கண் பார்த்து அருள்வாயே அன்னையே! அன்னையே…’ என்பது அந்தப்பாடல். தொடர்ந்து ‘ரங்கோன் ராதா’, ‘மர்மவீரன்’ படங்களில் வாய்ப்பு கிடைத்தது.

 மாடர்ன் தியேட்டர்ஸ் மேனேஜர் சுலைமான் பரிந்துரையில் எம்.எஸ்.விஸ்வநாதனைச் சந்திக்க எடுத்த எல்லா முயற்சிகளிலும் தோல்வி கண்டாலும் உறுதியில் குறைந்துவிடாத கல்யாணசுந்தரம், தொடர்ந்து அவரைப் பார்க்கப்போனார். சுலைமானின் பிடிவாதத்தால், அரைகுறை மனதோடு, கல்யாணசுந்தரம் எழுதிய வரிகளைப் படித்துப் பார்த்த எம்.எஸ்.வியின் உள்மனம் உறுத்த, வெளிமனம் வெட்கப்பட்டது.

‘குட்டி ஆடு தப்பி வந்தா குள்ளநரிக்குச் சொந்தம்/ குள்ளநரி மாட்டிக்கிட்டா கொறவனுக்குச் சொந்தம்/ தட்டுக்கெட்ட மனிதர் கண்ணில் பட்டதெல்லாம் சொந்தம்/ சட்டப்படி பார்க்கப்போனா எட்டடிதான் சொந்தம்…’ என்ற வரிகள் அவரைக் கவர்ந்தன. ‘ இப்படி ஒரு கவிஞனா? உடனே அவனை வரச்சொல்லுங்க’ என்று சுலைமானிடம் சொல்ல, சில நொடிகளில் எதிரில் வந்து நின்ற கல்யாணசுந்தரத்தைக் கட்டிப்பிடித்துப் பாராட்டி, பத்தே  நிமிடத்தில் அந்த பாட்டுக்கு டியூன் போட்டிருக்கிறார்.

அது ‘பாசவலை’ படத்தில் பயன்படுத்தப்பட்டது. அந்தப்படத்தின் வெற்றிக்கு, கல்யாணசுந்தரத்தின் பாடலும் ஒரு காரணமாக இருந்தது.
இயக்குனர் கே.சுப்பிரமணியம் அறிமுகத்தால், வி.என்.ஜானகி மூலமாக ‘நாடோடி மன்னன்’  படத்துக்கு பாடல்கள் எழுதினார் கல்யாணசுந்தரம். ‘தூங்காதே தம்பி தூங்காதே…’  பாடல் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. புகழ் உச்சியில் கல்யாணசுந்தரத்தின் கொடி பறந்தது.

எம்.ஜி.ஆர். நடித்த ‘அரசிளங்குமரி’, ‘கலைஅரசி’, ‘சக்கரவர்த்தித் திருமகள்’, ‘மகாதேவி’, ‘விக்கிரமாதித்தன்’, ‘திருடாதே’ படங்களுக்கும், சிவாஜிகணேசன் நடித்த ‘மக்களைப் பெற்ற மகராசி’, ‘அம்பிகாபதி’, ‘இரும்புத்திரை’, ‘உத்தமபுத்திரன்’, ‘தங்கப்பதுமை’, ‘பதிபக்தி’, ‘பாகப்பிரிவினை’, ‘புனர்ஜென்மம்’ படங்களுக்கும் பாடல்கள் எழுதி, பாட்டுக்கொடி தொடர்ந்து பறந்திட வழியமைத்துக்கொண்டார் கல்யாணசுந்தரம்.

‘அமுதவல்லி’ படத்தில் ‘ஆடை கட்டி வந்த நிலவோ...’, ‘பாகப்பரிவினை’யில் ‘பிள்ளையாரு கோயிலுக்கு பொழுதிருக்க வந்திருக்கும்…’, ‘அரசிளங்குமரி’யில் ‘சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா…’, ‘ஆளுக்கொரு வீடு’ படத்தில் ‘செய்யும் தொழிலே தெய்வம்…’, ‘தங்கப்பதுமை’யில் ‘ஆரம்பமாவது பெண்ணுக்குள்ளே…’, ‘இன்று நமதுள்ளமே…’, ‘முகத்தில் முகம் பார்க்கலாம்…’,  ‘கல்யாணப்பரிசு’ படத்தில் ‘ஆசையினாலே மனம்…’, ‘வாடிக்கை மறந்ததும் ஏனோ…’, ‘காதலிலே தோல்வியுற்றான் காளை ஒருவன்…’, ‘காதலிலே தோல்வியுற்றாள் கன்னியொருத்தி…’,

‘துள்ளாத மனமும் துள்ளும்…’,  ‘பதி பக்தி’யில் ‘கொக்கரக் கொக்கரக்கோ சேவலே…’, ‘புதையல்’ படத்தில் ‘சின்னச்சின்ன இழை பின்னிப்பின்னி வரும் சித்திரக் கைத்தறிச் சேலையடி…’, சந்திரபாபு குரலில் ‘உனக்காக எல்லாம் உனக்காக…’,  ‘எல்லோரும் இந்நாட்டு மன்னர்’ படத்தில் ‘என்னருமை காதலிக்கு வெண்ணிலாவே…’, ‘நாடோடி மன்னன்’ படத்தில் ‘கண்ணில் வந்து மின்னல்போல்…’, ‘மானைத்தேடி மச்சான் வரப் போறான்…’, ‘சும்மா கிடந்த நெலத்தக் கொத்தி…’, ‘திருடாதே’ படத்தில்‘திருடாதே பாப்பா திருடாதே…’,  ‘மகாதேவி’யில் ‘குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் திருட்டு உலகமடா…’,

 கல்யாணசுந்தரம் வரிகளுக்கு ஏ.எம்.ராஜா இசையமைத்து பி.சுசீலாவுடன் பாடிய ‘உன்னைக்கண்டு நான் ஆட என்னைக்கண்டு நீ ஆட’ மற்றும் ஏ.எம்.ராஜா தனித்துப் பாடிய ‘உன்னைக்கண்டு நான் வாட, என்னைக்கண்டு நீ வாட…’ என்கிற ‘கல்யாணப் பரிசு’ படப்பாடல்கள், தீபாவளித் திருநாட்களில் பாட்டாளித் தோழர்களின் ஆறுதலாய் அமைந்தவை.

நம் நாடு விடுதலை அடைந்து 25 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி 1972ஆம் ஆண்டில், மத்திய அரசு வெளியிட்ட விழா மலரில், ‘இருபதாம் நூற்றாண்டின் தமிழ்க் கவிஞர்கள்’ என்ற தலைப்பில் பாரதி, பாரதிதாசன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் என்று குறிப்பிட்டுப் பெருமைப்படுத்தியது. 1959ஆம் ஆண்டு கோயம்புத்தூர் தொழிலாளர் சங்கம் அவருக்கு ‘மக்கள் கவிஞர்’ என்ற பொருத்தமான பட்டத்தைக் கொடுத்துக் கவுரவப்படுத்தியது.

புகழின் உச்சியில் இருக்கும்போதே, 29ஆம் வயதில் நோயின் பிடியில் சிக்கி, மரணமடைந்தார். பாமரருக்காக அவர் எழுதிய பாடல்கள், அவரது பெயரை உச்சரித்துக்கொண்டே இருக்கும்.2000ல் பட்டுக்கோட்டையில் மக்கள் கவிஞருக்கு மணி மண்டபம்  அமைத்து, அவரது புகைப்படங்கள், மற்றும் கையெழுத்துப் பிரதிகள் ஆகியவற்றை மக்கள் பார்வைக்குக் கொண்டுவந்தார் அப்போதைய முதலமைச்சர் கலைஞர்.

நெல்லைபாரதி

அடுத்த இதழில்
இசையமைப்பாளர் டி.ஆர்.பாப்பா