நாலு போலீஸுசும் நாசமாப்போன ஊரும்!



நாலு போலீஸும் நல்ல இருந்த ஊரும்

பொற்பந்தல் என்றொரு நல்ல ஊர். இந்த ஊரில் இருக்கும் அத்தனை பேருமே அப்துல்கலாம் மாதிரி அநியாயத்துக்கு நல்லவர்கள். பத்து சவரன் தங்கநகை ரோட்டில் விழுந்து கிடந்தால்கூட அதை யாரும் எடுக்க மாட்டார்கள். தொலைத்தவரே எத்தனை நாள் கழித்து வந்து தேடினாலும் அப்படியே இருக்கும். அப்படிப்பட்ட ஊர்.

 யாருக்கும் எந்த கெட்டபழக்கமும் இல்லை. ஊருக்கு திருடவருபவனையே விருந்தினராக உபசரித்து மகிழும் ஊர். இந்தியாவிலேயே மிகச்சிறந்த கிராமம் என்று அடுத்தடுத்து ஜனாதிபதி பதக்கத்தை தொடர்ச்சியாகப் பெறும் ஊர்.

இப்படிப்பட்ட ஊரில் போலீஸ் ஸ்டேஷனுக்கும், போலீஸ்காரர்களுக்கும் என்ன வேலை?எனவே டிவியில் கிரிக்கெட் பார்த்துக் கொண்டும், ஸ்டேஷனில் கேரம்போர்டு, செஸ் ஆடிக்கொண்டும் பொழுதைப் போக்கும் நாலு போலீஸ்காரர்களையும் டெர்ரரான வேறு ஸ்டேஷனுக்கு டிரான்ஸ்பர் செய்துவிட்டு, ஸ்டேஷனை இழுத்துமூட அரசாங்கம் முடிவெடுக்கிறது. அதை தடுக்க ஊருக்குள்ளே சில குற்றச்செயல்களை போலீஸாரே நிகழ்த்தி, தங்கள் ஸ்டேஷனைக் காத்துக்கொள்ள சில செயல்களைச் செய்கிறார்கள். அந்த சிறு செயல்களின் விளைவால் ஊரே எப்படி மாறிப்போனது என்பதுதான் கதை.

கதையைக் கேட்க சூப்பராக இருந்தாலும் ரொம்ப சுமாரான திரைக்கதை மற்றும் வசனத்தால் ரசிக்க முடியாத அளவுக்கு நல்லா இருந்த ஊர் நாசமாகி விட்டது. படத்தில் ஹீரோ அருள்நிதியைவிட, காமெடியன் சிங்கம்புலிக்குத்தான் காட்சிகள் அதிகம். அருள்நிதிக்கு ஹீரோயினாக ரம்யா நம்பீசன் இருக்கிறார் என்பதாலேயே அவரை ஹீரோவாகக் கருத வேண்டியிருக்கிறது. பழைய பாடல்களின் பாணியில் எழுதப்பட்ட ‘காதல் கனிரசம்’ பாட்டுதான் படத்தின் ஆகப் பெரிய ஆறுதல். ‘பன்னிமூஞ்சி வாயனாக’ ஃபன்னியாக நம் மனதில் பதிந்துவிட்ட யோகிபாபுவை வில்லனாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

படத்தை சீரியஸாக சொல்ல நினைக்கிறார்களா அல்லது ‘சிரி’யஸான முயற்சியா என்பதை கிளைமேக்ஸ் வரை ரசிகர்கள் கண்டறிந்துகொள்ள முடியாத குழப்பத்துக்கு ஆளாவதே இப்படத்தின் மிகப்பெரிய பலவீனம். அதிலும் ஆன்ட்டி சென்டிமென்டான இறுதிக்காட்சியை தேர்வு செய்ததற்கு படத்தின் டிஸ்கஷனில் இடம்பெற்ற அனைவரின் தலையிலுமே நங்குநங்கென்று கொட்டலாம்.