ரஜினியை சந்தித்தேன்!



ரஜினி - ரஞ்சித் கூட்டணியின் கேமிராமேன் முரளி  சிலிர்க்கிறார்...

கொட்டுவது என்று முடிவெடுத்துவிட்டால் அதிர்ஷ்டம் கூரையைப் பிய்த்துக்கொண்டு கொட்டும். ‘அட்டக்கத்தி’ இயக்கும்போது ரஞ்சித் கற்பனையாவது செய்து பார்த்திருப்பாரா, இவ்வளவு சீக்கிரம் சூப்பர் ஸ்டாரையே இயக்குவோம் என்று. முரளிக்கும் அப்படித்தான். சினிமாவுக்கு வந்த குறுகிய காலத்திலேயே இப்படியொரு வாய்ப்பு அமைவது கோடைமழை மாதிரி அரிது. ரஞ்சித்தோடு தீவிரமான டிஸ்கஷனில் இருந்தவருக்கு ‘மிஸ்டுகால்’ கொடுத்தோம். உடனே அழைத்தவரிடம், “பார்க்கணுமே” என்றோம். தயங்காமல் ‘ஓகே’ சொன்னார்.

“உங்களைப் பற்றி நீங்களே ஒன்றரை பக்கங்களுக்கு மிகாமல் ஒப்பிக்கவும்!”“சொந்த ஊர் கிருஷ்ணகிரி. அப்பா கோவிந்தராஜ். அம்மா சரோஜா. ரெண்டு பேருமே ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள். எங்க பரம்பரையிலேயே முதல் தலைமுறை பட்டதாரிகள் அவங்கதான். அண்ணன் சரவணன் மருத்துவத் துறையில் மார்க்கெட்டிங் பிரிவில் இருக்காரு.”“கல்யாணம்?”

“அவசரப்படாதீங்க. (வெட்கப்படுகிறார்) ஆயிடிச்சி.வாத்தியார் குடும்பம் என்பதால் வீட்டுலே என்னை டாக்டராகவோ, என்ஜினியராகவோ ஆக்கி அழகு பார்க்க நினைச்சாங்க. ஆனால்- பத்தாவது படிக்கறப்பவே ஆர்ட்ஸ் மேலே இன்ட்ரெஸ்ட் வந்தது. வீட்டுலேயும் பெரிய எதிர்ப்பு இல்லைங்கிறதாலே கலைத்துறை சார்ந்த படிப்பை தேர்ந்தெடுத்தேன்.

மியூசிக் காலேஜில் சேர்ந்தேன். கர்நாடக சங்கீதம் கத்துக்கிறதுக்குள்ளே தாவு தீர்ந்துடிச்சி. இதென்னடா வம்பாப் போச்சின்னு சொல்லிட்டு கும்பகோணம் ஃபைன் ஆர்ட்ஸ் காலேஜில் போய் சேர்ந்தேன்.

சித்திரமும் கைப்பழக்கம்னு ஓவியம் நல்லா வரைய கத்துக்கிட்டேன். காலேஜ் முடிஞ்சப்புறம் கொஞ்சநாள் வேலை கீலைன்னு போகாம காரணமே இல்லாம சுத்திக்கிட்டிருந்தேன். வீட்டுலே இதையும் கண்டுக்கலை. நம்பளை சீரியஸா பார்க்காம சிரிப்பா பார்க்குறாங்களோன்னு டவுட்டு. அவங்க எதிர்க்கிற லெவலுக்கு ஏதாவது பெருசா செய்யணும்னு வெறியே வந்துடிச்சி.

இந்தக் காலகட்டத்துலே ஓவியத்தோட அடுத்த வெர்ஷனா சினிமாவைப் பார்க்க ஆரம்பிச்சேன். சினிமாவில் சேரப்போறேன்னு சொன்னா எப்படியும் வீட்டுலே டென்ஷன் ஆவாங்க, யாருகிட்டேன்னு எனக்குள்ளேயே நினைச்சிக்கிட்டு போய் சொன்னேன். “நல்லபடியா போயிட்டு வா ராசா”ன்னு ராக்கிங்தான் பண்ணாங்க.

அவங்களை என்னாலே எப்பவுமே வெறுப்பேத்த முடியாதுன்னு புரிஞ்சி போச்சி. உண்மை என்னன்னா நான் உருப்பட எனக்கே வழி தெரியும்னு அவங்க நம்பினாங்க. எப்பவுமே என்னோட குடும்பம்தான் என்னோட பலம்.

பாலுமகேந்திரா சாரை வந்து பார்த்தேன். அவர் படிச்ச புனே பிலிம் இன்ஸ்டிட்யூட் பற்றி சொன்னாரு. மொத்தமே பதினான்கு சீட்டுதான். இந்தியா முழுக்க இருந்து மோதுவாங்க. நான் எதை அடைய விரும்புறேனோ, அது சிரமமில்லாம ஈஸியா அடையுற மாதிரி என் தலையெழுத்தில் எழுதியிருக்குன்னு நெனைக்கிறேன்.

எனக்கு சீட்டு கிடைச்சது. அங்கேதான் நிஜமான சினிமாவை கத்துக்க ஆரம்பிச்சேன். அதுநாள் வரை நான் எதையெல்லாம் சினிமான்னு நெனைச்சேனோ, அந்த கற்பிதமெல்லாம் சுக்குநூறா உடைஞ்சது. படிக்கிறப்பவே ’Shyam Raat Seher’ என்கிற குறும்படத்துக்கு nonfeature film கேட்டகிரியிலே சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருதை வென்றேன். அந்த படம் ஸ்டூடண்ட் ஆஸ்கருக்கும் பரிந்துரைக்கப்பட்டது.

இதுதான் என்னோட முன்கதைச் சுருக்கம். ஒண்ணரை பக்கத்துக்கு மேலேயே போயிருக்கும் பாஸ்.”“ஓக்கே ஓக்கே, ரிலாக்ஸ். உங்களுக்கு புடிச்ச கேமிராமேன்?”“எல்லாரையுமே  பிடிக்கும்னுதான் சொல்லுவேன். ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு வகை ஸ்டைல்  இருக்கு. ‘பருத்தி வீரன்’ படத்தோட கேமிரா ஒர்க் இன்டர்நேஷனல் லெவல்லே இருக்கு.

ஒரு காலத்தில் நடிகர்கள் பெயர் திரையில் வரும்போது மட்டும்தான்  விசில் அடிப்பாங்க. அப்புறம் இயக்குனர், இசையமைப்பாளர்னு விசில் அடிக்க  ரசிகர்கள் தங்கள் பெருந்தன்மை எல்லையை விரிவாக்க ஆரம்பிச்சாங்க. முதல்  தடவையா ஒரு கேமிராமேனோட பேரைப் பார்த்து விசில் அடிச்சாங்கன்னா, அது  பி.சி.ராமுக்குத்தான். ஒளிப்பதிவாளர்களுக்கு எல்லாம் பெருமை சேர்த்த  பி.சி. சாரோட ஒர்க் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்.”“முதல் சினிமா?”

“தெலுங்கில்தான் பண்ணினேன். ‘அந்தாலு ராட்சஸி’. நல்லா பேசப்பட்ட படம். ‘பாகுபலி’ இயக்குனர் ராஜமவுலி தயாரிச்ச படம்.”“ஆந்திராவிலிருந்து தமிழ்நாட்டுக்கு எந்த ட்ரெயின்லே வந்தீங்க?”“அட்டக்கத்தி’ ஆரம்பிச்சப்போ ரஞ்சித் கூப்பிட்டிருந்தாருன்னு வந்தேன். அப்போ வேற சில கமிட்மென்டில் இருந்ததால், அந்தப் படத்துலே அவரோட வேலை பார்க்க முடியலை.

என் தம்பியும், ரஞ்சித்தும் சென்னை ஓவியக் கல்லூரியில் காலேஜ்மேட்ஸ். நானும் ஓவியர் என்பதால் ரெண்டு பேரும் ரசனைரீதியா ஏற்கனவே நல்ல நண்பர்களா இருந்தோம். சோ, ‘மெட்ராஸ்’ படத்துலே வெளிப்பட்ட கெமிஸ்ட்ரியிலேயே நீங்க எங்க நட்பை உணரலாம்.”
“சூப்பர்ஸ்டாரை சந்தித்தீர்களாமே?”

“மெய்சிலிர்த்துட்டேன். ரொம்ப எனெர்ஜெடிக்கான மீட்டிங் அது. ‘மெட்ராஸ்’ படத்தோட ஒவ்வொரு சீன், கேரக்டர், கேமிரா ஆங்கிள்னு எல்லாத்தையுமே ரொம்ப நுணுக்கமா கவனிச்சிருந்து விரிவா பேசினார். அடுத்த படம் பத்தி பேசுறப்போ அவ்வளவு உற்சாகம் ஆகிறாரு.

ஒரு புதுமுகத்துக்கு இருக்கக்கூடிய ஆர்வம், இவ்வளவு உயரத்துக்கு போனவரிடம் இன்னமும் இருக்கிறது ரொம்ப அரிதான மனப்பான்மை. அந்த சந்திப்புக்குப் பிறகு ரஜினிசார் எனக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன் ஆகிட்டாரு. இவரை மாதிரியே அர்ப்பணிப்பு, ஈடுபாடு, தொழில்பக்தியோடவே கடைசிவரை வேலை பார்க்கணும்னு ஆசைப்படுறேன்.”
“ரஜினியை இயக்குவோம் என்று கனவாவது கண்டதுண்டா?”

“நாம சினிமாவுக்கு வந்ததே ஆக்சிடெண்ட் மாதிரி. அப்படி இருக்குறப்போ தமிழ் சினிமாவின் உச்சநட்சத்திரத்தை படம் பிடிப்போமுன்னு கற்பனை கூட பண்ணிப் பார்த்ததில்லை. எல்லாரையும் மாதிரி நானும் அவருக்கு ரசிகன்தான். அவரோட வேலை பார்க்குறது ரொம்ப அரிதான வாய்ப்பு.ரஜினி சாரோட இமேஜை கரெக்டா புரொஜெக்ட் பண்ணணுங்கிற கவனத்துலேயே வேலை பார்ப்பேன். இது சவாலான வேலைதான். சர்வதேச அளவுலே லேட்டஸ்டா பயன்படுத்துற கேமிராவை யூஸ் பண்ண ப்ளான் பண்ணியிருக்கோம்.”“ரஞ்சித் எப்படியிருக்காரு?”

“நாங்க பேசிக்கறப்போ சரியான அண்டர்ஸ்டேண்டிங்குக்கு வர முடியலைன்னா, ரெண்டு பேரும் ஓவியங்கள் வழியா பேசிப்போம். அதுக்கப்புறம்தான் அவருக்கு என்ன வேணும், என்னால என்ன பண்ண முடியும்னு பரஸ்பரம் ரெண்டு பேருக்கும் புரியும்.தனிப்பட்ட ரஞ்சித் ஒரு திறந்த புத்தகம்னு சொல்லலாம். பெரிய டெக்னீஷியனில் தொடங்கி, கடைசி ஊழியர் வரைக்கும் ஒரே மாதிரிதான் பழகுவார். எல்லாரிடமும் சுமுகமா இருக்கணும்னு நெனைக்கிறவரு.”“படப்பிடிப்பு தொடங்கியாச்சா?”

“ஒரு படம் தொடங்குறதுக்கு முன்னாடி ஆர்ட்டிஸ்ட்டுகளை சம்பந்தப்பட்ட லொக்கேஷனுக்கே அழைச்சிக்கிட்டுப் போய் ஒர்க்‌ஷாப் நடத்தியபிறகுதான் ஷூட்டிங்குக்கே போவாரு ரஞ்சித். ரஜினி சார் படத்தைப் பொறுத்தவரை இன்னும் ஆர்ட்டிஸ்ட்டுகள் ஃபைனலைஸ் ஆகலை. அந்த கட்டத்துக்கு வந்ததும் முதல்லே ஒர்க்‌ஷாப்தான். அதுக்கப்புறம்தான் படப்பிடிப்பு வேலை தொடங்கும்.

நைசா படம் பத்தி ஸ்கூப் கிடைக்குமான்னு போட்டு வாங்கறீங்க. படம் வளர்றப்ப உங்களுக்கு எதுவெல்லாம் கிடைக்கணுமோ, அதுவெல்லாம் ஆட்டோமேடிக்கா சம்பந்தப்பட்டவங்க கொடுப்பாங்க. என்னை ஆளை விடுங்க.”

-சுரேஷ்ராஜா