சிக்ஸ்பேக் ஹீரோக்கள் ஃபெயில் ஆயிட்டாங்க!



‘ஆவி குமார்’ உதயா அதிரடி!!

முகத்திலும் சரி, அகத்திலும் சரி, கள்ளம் கபடமே இல்லாதவர் என்று பெயர் வாங்கியவர் உதயா. இயக்குனர் ஏ.எல்.விஜய்யின் அண்ணன், பழம்பெரும் தயாரிப்பாளர் அழகப்பனின் மகன் என்றெல்லாம் பேக்கிரவுண்டு வெயிட்டுதான்.

ஆனாலும், சரியான பிரேக்குக்காக இத்தனை ஆண்டுகளாக போராடிக் கொண்டிருக்கிறார். ஆனால் பேச்சில் தன்னம்பிக்கை தாண்டவமாடுகிறது. பின்விளைவுகள் எதைப் பற்றியும் கவலைப்படாமல் அதிரடியாக அவர் நம்மிடம் பேசினார்.“ரொம்பநாள் கழிச்சி ஆவிகுமாரா உங்களை மீண்டும் பார்க்க மகிழ்ச்சி!”

“ஏன் ‘தலைவா’ படத்தில்கூட சின்ன கேரக்டரில் பார்த்திருப்பீங்களே? ‘ஆவிகுமார்’ படம் ஜஸ்ட் பாஸ் ஆனா போதும்னு இருந்தேன். நல்ல ரிசல்ட். ரிலீசுக்கு 150 ஸ்க்ரீன் கொடுக்குறதா சொன்னவங்க 90 மட்டுமே கொடுத்தாங்க. ஆனா படத்துக்கு நல்ல வரவேற்புன்னு தெரிஞ்சப்புறம் மூணாவது நாளே 140 ஸ்க்ரீன் ஆயிடிச்சி. பட்ட கஷ்டத்துக்கு பலன் இல்லாமப் போகாது.”

“அப்புறமென்ன, சக்சஸ் மீட்டிங் வைக்க வேண்டியதுதானே?”“இப்போ சக்சஸ் மீட்டுன்னாலே காமெடி ஆயிடிச்சிங்க. நான் காமெடியன் கிடையாது. ஹீரோ!”
“அமலாபால் படம் பார்த்தாங்களா?”“ரிலீஸ் ஆனப்போ அவங்க ஊர்லே இல்லை. நிச்சயமா பார்ப்பாங்க.”“ஆவிக்கு அடுத்து?”“‘உத்தரவு மகாராஜா’. மென்டலி சைக்கோ த்ரில்லர் காமெடி படம். என்ன ஜானருன்னு சட்டுன்னு புரியலையா? இப்போவெல்லாம் இப்படித்தான். புரியாதமாதிரி இங்கிலீஷ்லே நாலு வார்த்தை சேர்த்து சொன்னோமுன்னா, என்னமோ ஏதோன்னு அலறியடிச்சிக்கிட்டு ஜனங்க தியேட்டருக்கு வந்துடறாங்க.”

“உங்க கூட வந்தவங்க, உங்களுக்கு அப்புறமா வந்தவங்கன்னு எல்லாரும் எங்கேயோ போயிட்டாங்களே?”“யாரும் எங்கேயும் போயிடலை. எல்லாரும் இங்கேதான் இருக்காங்க. கடவுள் என்னை இந்த நிலைமையிலாவது வெச்சிருக்கிறாரேன்னு சந்தோஷப்படுறேன். பாரதிராஜா சாரோட பையன் மனோஜ்,

பழைய ஹீரோ ரவிச்சந்திரனோட மகன் ஹம்சவர்தன், தயாரிப்பாளர் திருப்பூர் மணியோட பையன்னு ஒரு ஆறு பேர் ஒரே சமயத்தில் அறிமுகமானோம். ‘மில்லெனியம் ஹீரோஸ்’னு ஒரு பத்திரிகையில் நாங்க எல்லாரும் சேர்ந்து பேட்டிகூட கொடுத்தோம்.

 அது ஒரு நிலாக்காலம். எல்லாரும் நல்லா வந்திருக்கணும். ஏதோ இந்த அளவுக்காவது இருக்கோமேன்னு திருப்திப்பட்டுக்க வேண்டியதுதான்.”“விக்கிபீடியாவில் உங்க பேஜ் ரொம்ப வீக்கா இருக்கே?”“எப்படி இருக்கும்? வருஷத்துக்கு ஒரு படமாவது ரிலீஸ் ஆனாதானே கெத்தா இருக்கும்? உண்மையைச் சொல்லணும்னா, நான் வருஷம் முழுக்க பிஸியாதான் இருக்கேன். ‘காதல் ஜாதி’,

‘ஆசாமி’, ‘கோட்சே’, ‘பூங்குயிலே’ன்னு எத்தனையோ படங்கள் முடிச்சி, எதுவுமே ரிலீஸ் ஆகாம பெட்டிக்குள்ளேயே முடங்கிப் போயிருக்கு. இந்தப் படமெல்லாம் ரிலீஸ் ஆகியிருந்தா நானும் 50 படங்களைத் தொட்டிருப்பேன். பரபரப்பாவும் பேசப்பட்டுக்கிட்டு இருந்திருப்பேன்.”

“சரத்குமார் vs விஷால். யாருக்கு ஓட்டு போடப்போறீங்க?”“நமக்கெதுக்கு அரசியல்? அதெல்லாம் எங்க அப்பாவோட ஏரியா. சரத்குமார் தலைமையில் விஷாலின் இளமைப்பட்டாளம் இயங்கணும். அல்லது சரத்குமாரை கவுரவ ஆலோசகரா வெச்சிக்கிட்டு இவங்க வேலை பார்க்கணும். ஸ்மூத்தா போவோம் பாஸ்.”
“உங்களை ஏன் ஸ்டார் கிரிக்கெட்டில் சேர்த்துக்கலை?”

“லைட்டா தொப்பை விழுந்தது ஒரு காரணமா இருக்கலாம். ஆனா கூப்பிட்டாங்க. எனக்கு கிரிக்கெட்டில் அவ்வளவு இன்ட்ரஸ்ட் இல்லை.”“நடிக்கத் தெரிந்த உங்களுக்கு டைரக்ஷனும் வருமா?”“எனக்கு நடிக்கத் தெரியும்னு ஒத்துக்கிட்ட உங்களுக்கு ஏதாவது பெருசா பண்ணணும் ஜி. டைரக்‌ஷன்லாம் ரொம்ப பெரிய விஷயம்.

அதையெல்லாம் தம்பி விஜய் பார்த்துப்பாரு.”“மணிரத்னம், ஷங்கர், பாலா - மூணு பேரும் ஒரே நேரத்தில் உங்களைக் கூப்பிட்டா?”“மறைந்த பாரத ரத்னா மேதகு கலாம் கனவு காணச் சொன்னமாதிரி நானும் இதெல்லாம் நடக்காதான்னு கண்டுக்கிட்டுதான் இருக்கேன். ஒருமுறை கனவுலே இதே சிச்சுவேஷன் வந்தது. அப்போ, முதலில் வந்தவருக்கு முன்னுரிமை கொடுத்தது மாதிரி ஞாபகம்.”

“வருஷத்துக்கு ஐந்து படம் ஹீரோவா பண்ணுவேன்னு பேட்டி கொடுத்திருக்கீங்க! உங்களுக்கே ஓவரா இல்லை?”“உங்களை மாதிரி யாரோ ஒரு பத்திரிகை நண்பர் உணர்ச்சிவசப்பட்டு அப்படி எழுதிட்டாரு. வருஷத்துக்கு ரெண்டு படம்னுதான் நான் சொன்னேன்.”“உங்க தம்பி விஜய் உங்களை இயக்குவாரா?”“விஜய், அஜித், ஆர்யான்னு பிசியா இருக்குற அவரை எதுக்கு தொந்தரவு பண்ணணும்? அவர் கதைக்கு நான் தேவைப்படுறேன்னு நெனைச்சி கேட்டாருன்னா நடிச்சிட்டுப் போறேன். வாட்ஸ் த ப்ராப்ளம்?”

“உங்களைப் பற்றி வந்த மோசமான விமர்சனம்?”“அப்படி ஏதாவது இருக்கா என்ன? என்னை எல்லாரும் நெக்ஸ்ட் டோர் பாய்னு இல்லை சொல்றாங்க!”“சிக்ஸ் பேக் ட்ரை பண்ணலையா?”“எனக்கு அதுலே உடன்பாடு இல்லை. சிக்ஸ் பேக் வெச்ச ஹீரோக்களோட படங்கள் ஃபெயில் ஆகுது, கவனிச்சீங்களா?”“எவ்வளவு காலம் இப்படி நடிச்சிக்கிட்டே இருக்கப் போறீங்க?”

“இந்த  கேள்விக்கு எவ்வளவோ அர்த்தம் இருக்கு. கடைசிவரைக்கும் சினிமாதான். இங்கே  நிறைய அவமானப்பட்டிருக்கேன். ஏகப்பட்ட விஷயங்களை இழந்திருக்கிறேன். என்னை  மறக்காம வந்து பேசுற உங்களை மாதிரி சில நண்பர்கள்தான் நான் பெற்றிருக்கும்  ஒரே விஷயம். என்னை எப்பவும் சிங்கிளா பார்க்க முடியாது. சுற்றி எப்பவுமே  உங்களை மாதிரி நாலு பேரு இருந்துக்கிட்டே இருப்பாங்க.

என் குடும்பம் எனக்குப்  பின்னாடி எல்லா சாதனை சோதனைகளிலும் நிக்குது. மனைவி கீர்த்திகா  எல்லாத்தையும் பொறுத்துக்கிட்டு அமைதியா என்னை கவனிச்சுக்கறாங்க. இதெல்லாம்  இப்படியே இருக்குறவரைக்கும் நடிச்சிக்கிட்டே இருக்க வேண்டியதுதான்.”

-சுரேஷ் ராஜா