மாசு



சூர்யாவும் பிரேம்ஜியும் உள்ளூர்த் திருடர்கள். சில்லரைத் திருட்டில் அதிக லாபம் இல்லை என்று கணக்குப் போடும் இருவரும் ‘லம்ப்’ அமவுண்ட்டை ஒரு தாதாவிடமிருந்து ‘லபக்’குகிறார்கள். தாதா தன் அடியாட்களுடன் சூர்யாவைத் துரத்தும்போது சூர்யாவும், பிரேம்ஜியும் விபத்தில் சிக்குகிறார்கள்.

ஆஸ்பத்திரியில் கண் விழிக்கும் சூர்யாவின் கண்களுக்கு செத்துப் போனவர்கள் தெரிகிறார்கள். அப்படி செத்துப் போனவர்கள் தங்கள் நிறைவேறாத ஆசையை சூர்யாவிடம் சொல்கிறார்கள். அதில் ஒருவர் சூர்யாவின் தந்தை. அப்பாவின் ஆசையை மகன் நிறைவேற்றுவதுதான் கதை.

சூர்யாவிடமிருந்து எதிர்பார்க்கும் அதே சுறு சுறு, துறு துறு நடிப்பு இதிலும் டபுள் மடங்கு. அந்த வகையில் ஊதாரி கேரக்டரை ஊதித் தள்ளூகிறார். அப்பா சூர்யா லேட்டாக வந்தாலும் சூட், கோட் என கெட்-அப்களில் அசத்துகிறார்.

நயன்தாராவின் வலம் சற்றே கம்மி என்பதால் ரசிகரின் மன உளைச்சலைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை. ஊறுகாய் எப்படி பயன்படுமோ அப்படித்தான் இதில் ப்ரணிதாவின் ரோல். பார்த்திபன், சமுத்திரக்கனி, பிரேம்ஜி மூவரும் காலரைத் தூக்கிவிட்டுக் கொள்ளலாம்.

யுவன்ஷங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் உற்சாகம். ஆர்.டி,ராஜசேகரின் கேமரா கதைக்கு பெரிதும் துணை புரிந்துள்ளது. எவ்வளவு பெரிய ஹீரோவாக இருந்தாலும் அவர்களை அசால்ட்டாக டீல் பண்ணி ஹிட் கொடுப்பதுதான் வெங்கட்பிரபுவின் கெத்து! அதுக்காகவே ஒரு பூங்கொத்து!