வெற்றியை நோக்கி வெறி!
‘திமிரு’ படத்தையும் தருண்கோபியையும் சில காலத்துக்கு பிரிக்க முடியாது. ‘திமிரு’ என்ற சூப்பர் டூப்பர் படத்தைக் கொடுத்த தருண்கோபி சில பல காலம் நடிகராக அவதாரம் எடுத்து, டைரக்ஷனுக்கு லீவு விட்டிருந்தார்.
இப்போது மீண்டும் டைரக்டர் கம் நடிகராக ‘வெறி’ (திமிரு-2) படத்தின் மூலம் விஸ்வரூபம் எடுத்திருக்கிறார்.‘‘நான் இயக்கி நடித்திருக்கும் ‘திமிரு’ படத்தின் இரண்டாவது பாகமான ‘வெறி’ படம் கண்டிப்பாக அனைத்து தரப்பையும் திருப்திப்படுத்தும்.
அப்படி திருப்திப்படுத்தவில்லை என்றால் தாராளமாக என்னை செருப்பால் அடியுங்கள். வீறாப்புக்காக பேசுகிறேன் என்று நினைக்க வேண்டாம். இது சத்தியம்’’ - அனல் பறக்க பேச ஆரம்பித்தார் தருண்கோபி.
இந்தப் படத்தை கோயம்பேடு மார்க்கெட் மு.வெள்ளைப் பாண்டியன் ஆசியுடன் எஸ்.எஸ்.புரொடக்ஷன் சார்பில் எஸ்.சரவணன் தயாரிக்கிறார். தருண்கோபி ஜோடியாக சந்தியா நடிக்கிறார். இன்னொரு நாயகனாக ரமணா நடிக்கிறார். இவர்களோடு முக்கிய வேடத்தில் 40 பாட்டிகள் நடித்திருக்கிறார்கள். இசை காந்த்தேவா. ‘‘இந்தப் படத்தின் தயாரிப்பாளர் சரவணன் நான் நடித்துள்ள ‘பேச்சியக்கா மருமகன்’ படத்தைத் தயாரித்தவர். சில சூழ்நிலைகளால் அந்தப் படம் சில வருடங்களாக வெளியாகாமல் இருக்கிறது. அதேபோல் என்னுடைய சினிமா கேரியரிலும் சில வருடங்களாக பெரிய கேப் விழுந்துவிட்டது.
நான் ஜெயிக்க வேண்டும் என்று அவரும், அவர் ஜெயிக்க வேண்டும் என்று நானும் சேர்ந்து வெறித்தனமாக எடுத்த படம்தான் இது. படத்துல மோதலுக்கும் எமோஷனுக்கும் பஞ்சமே இருக்காது. ரசிகர்கள் நம்ப வேண்டும் என்று சொல்லவில்லை. இந்த ‘வெறி’ நிச்சயம் வெற்றிப் படமாக அமையும்’’- நம்பிக்கை தருகிறார் தருண்கோபி.
-எஸ்
|