சிதம்பரத்துச் சிங்கக்குட்டி!
தனித்துவக்குரல் கொண்ட தமிழ்ப்பாடகர்களில் சிதம்பரம் சுந்தரம்பிள்ளை ஜெயராமன் என்கிற சி.எஸ்.ஜெயராமனுக்கு சிறப்பிடம் உண்டு. அவரது அப்பா பாடக சுந்தரம் பிள்ளை வட மொழியில் அமைந்த தீட்சிதரின் உருப்படிகளைத் திறம்படக் கற்றவர்.
தெலுங்கு கீர்த்தனைகளையும் கைகண்டவர். சங்கீதத்தில் ‘சிதம்பரத்துச் சிங்கக்குட்டி’ என்று பெயரெடுத்த ஜெயராமன், ஜகந்நாத அய்யரின் ‘பால மீனரஞ்சனி சங்கீத சபா’, பக்கிரிராஜாவின் ‘மதுரை பால வினோத சங்கீத சபா’, மற்றும் நவாப் ராஜமாணிக்கம் நடத்திய ‘மதுரை தேவி பாலவினோத சங்கீத சபா’க்களில் நடிகராக ஜொலித்தார்.
ராஜபார்ட் அந்தஸ்து இருந்ததால், குடும்பத்துடன் தனியாகத் தங்கும் வசதி ஜெயராமனுக்குக் கிடைத்தது. மகன் செல்லும் ஊருக்கெல்லாம் சென்று சுந்தரம் பிள்ளை இசைப் பயிற்சி அளிப்பார்.1934ல் ஜெயராமனுக்கு சினிமாப்பட வாய்ப்பு வந்தது. கல்கத்தாவில் ஒலிப்பதிவு நடந்தது. அந்தப்படம் ‘கிருஷ்ண லீலா’. 60 பாடல்கள் நிறைந்த படத்தில் கண்ணன் வேடம் ஏற்று நடித்திருந்தார் ஜெயராமன். 52 பாடல்கள் நிறைந்த ‘பக்த துருவா’வில், சி.எஸ்.ஜெயராமன் 16 பாடல்களைப் பாடி பாராட்டுகளைக் குவித்தார்.
‘‘சி.எஸ். ஜெயராமனின் கான மழை எனும் கர்ணாம்ருதப் பாடல்களால் களிப்படைவீர்” என்று விளம்பரம் செய்து பாடகருக்குப் பெருமை சேர்த்தது ‘நல்லதங்காள்’ படம். அவர் பங்கேற்ற ‘லீலாவதி சுலோசனா’ படத்தில் 45 பாடல்கள் இடம்பெற்று ரசிகர்களைக் கொண்டாட வைத்தன.. 1945 ஆம் ஆண்டு ஜெயராமன் வாழ்வில் ஒரு திருப்புமுனை ஏற்பட்டது. இசை அமைப்பாளராக உருவெடுத்தார்.
படம் ஏ.எஸ்.ஏ. சாமி இயக்கிய ‘உதயணன் - வாசவதத்தை’. ஜூபிடரின் ‘விஜயகுமாரி’ படத்தில் இவரும் சி.ஆர்.சுப்பராமனும் சரிசமமாக ஏழு பாடல்களுக்கு இசையமைத்தார்கள். பாபனாசம் சிவன், எஸ்.எம். சுப்பையா நாயுடு ஆகியோருடன் இணைந்து ‘கிருஷ்ண விஜயம்’ படத்துக்கு இசையமைத்திருந்தார் ஜெயராமன். இசையமைப்புப்பணியைவிட்டு முழுநேரப் பாடகராக மாறியபிறகு, ‘மணமகள்’, ‘வேலைக்காரன்’ படங்களில் பாடினார்.
அந்த நேரத்தில்தான் ஜெயராமன் ஜெயக்கொடி நாட்டும் படம் கிடைத்தது. கலைஞரின் கைவண்ணத்தில் உருவான சமூகக்காவியம் ‘பராசக்தி’ படத்தில் சிவாஜிகணேசனுக்காக பாடிய ‘கா... கா... கா...’ பாடல், அவரது பெயரை அனைத்துத் தரப்பு ரசிகர்களிடமும் கொண்டுபோய்ச் சேர்த்தது. சிவாஜிக்குப் பொருத்தமான குரலாளர் டி.எம்.எஸ்தான் என்ற கருத்து அனைவராலும் ஆமோதிக்கப்பட்ட நிலையில், ‘குறவஞ்சி’யில் ‘நீ சொல்லாவிடில் யார் சொல்லுவார்...’;
‘தங்கப் பதுமை’ படத்தில் ‘ஆரம்பமாவது பெண்ணுக்குள்ளே ‘தெய்வப் பிறவி’யில் ‘அன்பாலே தேடிய என் அறிவுச் செல்வம்....’; ‘புதையல்’படத்தில் ‘விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே....’; ‘பாவை விளக்கு’படத்தில் ‘காவியமா நெஞ்சின் ஓவியமா....’, ‘வண்ணத்தமிழ்ப் பெண்ணொருத்தி....’ ஆகிய பாடல்கள் ஜெயராமனின் குரல், சிவாஜிக்குச் செழுமையாகப் பொருந்தியது என்பதற்கான எடுத்துக்காட்டுகள்.
சிறிய இடைவெளிக்குப்பிறகு அவர் இசையமைத்த ‘ரத்தக் கண்ணீர்’ படம் மாபெரும் வெற்றியைப் பெற்றது. அதில், ஜெயராமன் பாடிய ‘குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி....’ இன்றைய இளைஞர்களாலும் ரசித்துப் பாராட்டப்படுகிறது. ‘ஜெயராமனுக்குக் கிடைத்த ‘இசைச்சித்தர்’ பட்டம் மிகுதகுதியானது என்பதை ‘பராசக்தி’யின் ‘தேசம் ஞானம் கல்வி....’, ‘பாச வலை’யில் ‘அன்பினாலே உண்டாகும் இன்ப நிலை...’, ‘களத்தூர் கண்ணம்மா’வில் ‘சிரித்தாலும் அழுதாலும் நிலை ஒன்றுதான்....’, ‘தெய்வப்பிறவி’யில் ‘தன்னைத் தானே நம்பாதது சந்தேகம்....’ ஆகிய பாடல்கள் எடுத்தியம்புகின்றன.
ஒருகட்டத்தில் பாடல் வாய்ப்புகள் குறையத்தொடங்கியதும், யாரிடமும் கையேந்தாமல், தமிழ் இசை நிகழ்ச்சிகளைத் திறம்பட நடத்தினார். தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியின் இயக்குனர் பொறுப்பு இரண்டுமுறை இவரைத்தேடிவந்து அலங்கரித்திருக்கிறது. தன்மானம் மிகுந்த தமிழ்ப்பாடகர் என்ற பெருமையைப் பெற்றிருந்த ஜெயராமன் 1993ல் மரணமடைந்தார்.
அடுத்த இதழில் அஷ்டாவதானி டி.ராஜேந்தர்
நெல்லைபாரதி
|