சர்வானந்தும் நித்யா மேனனும் திக் ஃப்ரெண்ட்ஸ். படிப்பு முடிந்து நண்பர்களுடன் ஜாலியாக பொழுதைக் கழிக்கும் சர்வானந்த் ஒரு சம்பவத்துக்குப் பிறகு ஓடி ஓடி உழைக்கிறார். ஒரு கட்டத்தில் பெரிய தொழில் அதிபரான பிரகாஷ்ராஜுக்கு டஃப் கொடுக்குமளவுக்கு பிசினஸில் உச்சம் தொடுகிறார். தான் சம்பாதித்த பணம் முழுவதையும் தன் குடும்பத்துக்கு மட்டும் செலவு செய்யாமல் நண்பனின் குடும்பத்துக்கும் சேர்த்து செலவு செய்கிறார்.
தான் ஆசையாக உருவாக்கிய கம்பெனியை நித்யா மேனனுக்கு எழுதி வைத்துவிட்டு வெளிநாட்டுக்குப் பறக்கிறார். நண்பன் போன இடம் திரும்பி வரமுடியாத இடம் என்பது நித்யாவுக்கு மட்டும்தான் தெரியும். சர்வானந்த் எங்கே போனார்? என்பது மனதை திடுக்கிடச் செய்யும் முடிவு.
சேரன் படத்தில் எப்போதும் தன்னம்பிக்கை காட்சிகளுக்குப் பஞ்சம் இருக்காது என்பதை படம் முழுக்க வரும் காட்சிகள் சொல்லாமல் சொல்கின்றன. அதுவும் வாய் பேச முடியாத மனோபாலா கையில் பெயிண்டிங் வரையும் காட்சி மாஸ்டர்பீஸ்.சர்வானந்த், நித்யா மேனன் இருவரும் கேரக்டரை எந்த அளவுக்கு உள்வாங்க முடியுமோ அந்தளவுக்கு உள்வாங்கி நடித்திருக்கிறார்கள். கடைசிக் காட்சியில் இரண்டு பேரும் ஆழமான நடிப்பால் அழ வைக்கிறார்கள்.
இந்தப் படத்தில் சந்தானமும் இருக்கிறார் என்று சொன்னால்தான் தெரியும். அந்தளவுக்கு அடக்கி வாசித்திருக்கிறார். மனோபாலாவுக்கு டயலாக் இல்லையென்றாலும் நெகிழ வைக்கிறார்.
கிரிஸ்டல் கிளியர் எனுமளவுக்கு நேர்த்தியாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார் சித்தார்த். மற்ற டெக்னீசியன்களின் உழைப்போடு ஒப்பிடும்போது மியூசிக் டைரக்டர் ஜி.வி.பிரகாஷின் உழைப்பு சற்று குறைவுதான். ‘உணர்வுகளின் அருமை பெருமையை மிக அற்புதமாக சொல்லியிருக்கும் சேரனுக்கு ஆயிரம் பாராட்டு!