பாட்டுச்சாலை 47
ராமச்சந்திர செட்டியாரின் மகனாக குளித்தலையில் பிறந்தவர் ஆர்.கோவர்த்தனம். அப்பா ராமச்சந்திரன் பெங்களூரில் ஒரு மளிகைக் கடையில் கணக்குப்பிள்ளையாக இருந்தார். சிறிது காலம் கழித்து குடும்பத்துடன் சென்னைக்கு வந்தார். கோவர்த்தனத்துக்கு இசை ஞானம் இருப்பதை அறிந்துகொண்ட ராமச்சந்திரன் வர்ணங்களையும் கீர்த்தனைகளையும் சொல்லிக் கொடுத்தார்.
நாதஸ்வர வித்வான் திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை பாடி, நடித்த ‘காளமேகம்’ படத்துக்கான பாடல் பதிவுக்கு தனது தம்பி கோவர்த்தனத்தை அழைத்துச் சென்றிருந்தார் ஆர்மோனியக்கலைஞர் சுதர்சனம். ராஜரத்தினம் பிள்ளையிடம் தம்பியை அறிமுகப்படுத்தி, ‘நீங்கள் எதுவேண்டுமானாலும் பாடுங்கள், என் தம்பி ஸ்வரங்களைச் சொல்லிவிடுவான்’ என்றார். அவரும் பரிசோதித்துப் பார்த்துவிட்டு, ‘இவன் ஸ்வரக்குட்டி’ என்று பாராட்டியிருக்கிறார்.
ஏவி.எம் தயாரிக்கும் படங்களுக்கு சுதர்சனம் இசையமைத்துக் கொண்டிருந்தார். ஏவி.எம்மின் சரஸ்வதி ஸ்டோர் கிராம போன் இசைக்குழுவுக்கு இசையமைப்பாளராக கோவர்த்தனத்தை நியமித்தார் ஏவி.மெய்யப்ப செட்டியார். அண்ணன் பணியாற்றும் படங்களில் உதவி இசை யமைப்பாளராக பங்கேற்றார் கோவர்த்தனம்.
ஏவி.எம்.மின் தலைமை மேலாளர் வாசுதேவமேனன் மூலம் 1959ல் கோவர்த்தனம் முதல் பட வாய்ப்பைப் பெற்றார். அவர் தயாரிப்பில் பிரேம் நஸீர் நடித்த ‘ஒரே வழி’ படம் கோவர்த்தனத்தை இசையமைப்பாளராக அடையாளம் காட்டியது.
‘ஒருவரை ஒருவர் உணர்ந்து கொண்டால் அவர் உள்ளங்கள் காண்பது ஒரே வழி...’ என்ற கண்ணதாசன் பாடலுக்கு அவர் அமைத்த மெட்டு பாராட்டுப் பெற்றது. வாசுதேவமேனன் அடுத்து தயாரித்த ‘கைராசி’ படத்துக்கும் கோவர்த்தனம் இசை யமைத்தார். கே.சங்கர் இயக்கத்தில், ஜெமினி கணேசன், சரோஜாதேவி நடித்த அந்தப்படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. ‘அன்புள்ள அத்தான் வணக்கம்...’, ‘கண்ணும் கண்ணும் பேசியதும் உன்னாலன்றோ...’, ‘காத்திருந்தேன் காத்திருந்தேன் காலமெல்லாம் காத்திருந்தேன்...’, ‘காதலென்னும் ஆற்றினிலே, கன்னியராம் ஓடத்திலே...’ ஆகிய பாடல்கள் ரசிகர்களைக் கவர்ந்தன.
‘பட்டணத்தில் பூதம்’ படத்தில் அவர் இசையமைத்த ‘அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி’ பாடல், பாட்டு ரசிகர்களிடம் பலத்த வரவேற்பைப்பெற்றது. காமராஜரின் தாயார் பெயர் சிவகாமி. காமராஜருக்கு தூது சொல்வதுபோல அந்தப் பாடலை கண்ணதாசன் எழுதியதாகச் சொல்வார்கள். ‘கண்ணிலே கண்டதெல்லாம் காட்சியா...‘, ‘உலகத்தில் சிறந்தது எது...‘ ஆகிய பாடல்களும் மக்கள் மனம் கவர்ந்தன.
படத்தில் ஒரு கஜல் பாடல் இடம்பெறவேண்டும் என்பது இயக்குனர் எம்.வி. ராமனின் விருப்பமாக இருந்தது. கோவர்த்தனம் அமைத்த மெட்டுக்கேற்ப கண்ணதாசன் பாடல் எழுதினார். வரிகள் அருமையாக அமைந்திருந்தும் மெட்டுடன் இணையாமல் இருந்தன. அதன்பிறகு, லைட் கிளாசிகல் முறையில் இசையமைத்து வெற்றிபெற்ற பாடல்தான் ‘அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி...’
‘பூவும் பொட்டும்’ படத்தில் டி.எம்.சௌந்தரராஜன் - பி.சுசீலா குரல்களில் ஒலித்த ‘நாதஸ்வர ஓசையிலே தேவன் வந்து பாடுகிறான்...’ மெல்லிசை ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்தது. அதே படத்தில் ‘உன்னழகைக் கண்டு கொண்டால்...’ பாடல் பி.பி.ஸ்ரீநிவாஸ் குரலில் ஜெயித்தது. ‘முதல் என்பது தொடக்கம்...’ என்கிற தத்துவப்பாடலும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. ‘பொற்சிலை’ படத்தில் ‘நாளைப் பொழுது உன்றன் நல்ல பொழுதாகும் என்று...’, ‘அழகைப் பாட வந்தேன், தமிழில் வார்த்தையில்லை...’ பாடல்கள் பாராட்டுப்பெற்றன.
‘பத்துப் பதினாறு முத்தம் முத்தம்...’, ‘திருமகள் என் வீட்டைத் தேடி வந்தாள்...’ ‘ஆதி மனிதன் காதலுக்குப்பின்...’ பாடல்கள், ‘அஞ்சல் பெட்டி 520’படத்திலும் ரசிகர்களின் மனதிலும் இடம்பிடித்தன. ‘வரப்ரசாதம்’ படத்தில் இடம்பெர்ற ‘கங்கை நதியோரம் ராமன் நடந்தான்...’ பாடல் அவருக்கு பெயர் வாங்கித் தந்தது. விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசைக்குழுவில் கண்டக்டராக இருந்த கோவர்த்தனம் பின்னர் இளையராஜா, விஜய் பாஸ்கர், சந்திரபோஸ், தேவா ஆகிய இசையமைப்பாளர்களிடம் அரேஞ்சர் பணியாற்றிப் பாராட்டுப் பெற்றிருக்கிறார்.
அடுத்த இதழில்...
பின்னணிப்பாடகி சித்ரா
நெல்லைபாரதி