அப்படி என்ன பிரச்னை?‘‘சினிமாவில் சுமார் 20 வருடங்களுக்கும் மேலாக இருக்கிறேன். சினிமாவில் நான் வெற்றியைவிட, தோல்வியைத்தான் அதிகம் பார்த்திருக்கிறேன். ஆனாலும் இந்த முறை ஜெயிப்போம் என்ற நம்பிக்கையில்தான் ஒவ்வொரு படத்திலும் மொட்டை அடிக்கச் சொன்னாலும் சரி, நிர்வாணமாக நிற்கச் சொன்னாலும் சரி என்னுடைய பங்களிப்பை கொடுத்துவருகிறேன். ஆனால் அப்படி நான் நம்பிய படங்கள் என்னை காயப்படுத்தியதுதான் மிச்சம். எனக்கு சினிமாதான் எல்லாம்.
எப்படியும் ஜெயிச்சே தீரவேண்டும் என்ற லட்சியத்துடன் ஆரம்பிக்கபட்ட படம்தான் ‘அவன் அவள்’. இந்தப் படத்துக்காக நான் சந்தித்த அவமானங்களும், வேதனைகளும் அதிகம். என்னுடைய மொத்த சேமிப்பையும் முதலீடாக போட்டுத்தான் இந்தப் படத்தை எடுத்திருக்கிறேன். என்னுடைய இந்த முடிவுக்கு மனைவியிடமிருந்து பலத்த எதிர்ப்பு கிளம்பியது. உச்ச கட்டமாக கடந்த சில மாதங்களாக எங்களுக்குள் எந்தவிதமான பேச்சுவார்த்தையும் இல்லை. சாப்பாடும் வெளியில்தான். உறங்குவதற்கு மட்டும்தான் வீட்டுக்குச் செல்கிறேன். மற்றபடி என்னுடைய குடியிருப்பு எடிட்டிங் ஸ்டுடியோவில்தான்.”
‘அவன் அவள்’ எப்படி?“இது சஸ்பென்ஸ் கலந்த த்ரில்லர் கதை. ஆனால் வழக்கமான கமர்ஷியல் கதையில் இருக்கும் லவ், டூயட், சென்டிமென்ட், ஆக்ஷன் என எல்லாம் இருக்கும். எனக்கு ஜோடியாக தேவிகா மாதவன். இன்னொரு ஹீரோயினாக சந்திரிகா. எனக்கு பாட்டியாக சச்சு நடித்திருக்கிறார். காமெடி ஏரியாவில் வடிவேலு மட்டும்தான் நடிக்கவில்லை. மற்றபடி அவருடைய டீமைச் சேர்ந்த பாவா லட்சுமணன், சுப்புராஜ் என நிறையப் பேர் இருக்கிறார்கள்.
குத்துப் பாடல், மெலடி என அற்புதமாக மூன்று பாடல்கள் போட்டிருக்கிறார் கார்த்திக் ராஜா. வேலுபிரபாகரின் உதவியாளர் ரவி சீனிவாசன்தான் கேமராமேன். இந்தப் படத்துல எனக்கு கிடைத்த ஒரே ஆறுதல் இயக்குநர் ராம்கிருஷ் மிரினாளி. ஏன்னா, அவர்தான் எனக்கு பக்கபலமாக இருந்து படம் சிறப்பாக வருவதற்கு ஊக்கம் கொடுத்தார். என்னுடைய ஒட்டுமொத்த வாழ்க்கையே இந்தப் படத்தோட வெற்றியில்தான் இருக்கிறது. ரசிகர்கள் நல்ல முடிவெடுப்பார்கள் என்று நம்புகிறேன்.”
- சுரேஷ் ராஜா