வாலிக்கு வாட்ச் கொடுத்த (சங்கர்) கணேஷ்!



பாட்டுச்சாலை

மதிஒளி சண்முகம் கதை, வசனம் எழுத பஞ்சு அருணாசலத்தின் பாடல்களுடன் அரங்கேறியது 'பாடிப்பறந்த குயில்' நாடகம். அதற்கு இசையமைத்த சங்கர்-கணேஷ் இரட்டையர் பற்றி விசாரித்தார் கண்ணதாசன். Êசங்கர் என்கிற சங்கர்ராமன் இசைமேதை சி.ஆர்.சுப்பராமனின் தம்பி என்பதுடன், கணேஷ் சென்னையைச் சேர்ந்தவர், இருவரும் விஸ்வநாதன்-ராமமூர்த்தியிடம் இசை உதவியாளர்களாக இருக்கிறார்கள் என்கிற தகவல் கவிஞருக்கு வருகிறது.

அவர்களின் திறமைக்குப் பரிசாக சினிமாப் படத்துக்கு இசையமைக்கும் வாய்ப்பு வழங்க முடிவு செய்கிறார் கவிஞர். அவரும் ஒரு தயாரிப்பாளராக இருந்த ஜே.எல். பிலிம்ஸ் உருவாக்கத்தில், 'நகரத்தில் திருடர்கள்' படத்துக்கு இசையமைப்பாளர்கள் ஆனார்கள் இரட்டையர். ஜெய்சங்கர் நாயகனாக நடிக்க, ஜி.ஆர்.நாதன் ஒளிப்பதிவு, இயக்கத்தில் இரண்டு பாடல்கள் மற்றும் ஐந்தாயிரம் அடி படக்காட்சிகளுடன் படம் வெளிவர வாய்ப்பு இல்லாமல் நின்றுபோனது.

இரட்டையரை விட்டுவிட மனம் வராத கவிஞர், சின்னப்ப தேவர் முன் அவர்களைக் கொண்டு போய் நிறுத்தினார். 'இந்தப் பசங்களாவது இசையமைப்பதாவது?' என்று பார்வையாலே பரிகாசம் செய்த தேவருக்கு, இரட்டையரின் மெட்டுகளைக் கேட்டதும் நம்பிக்கை வந்தது. ஜெயலலிதா- ரவிச்சந்திரன் நடித்த 'மகராசி' படத்தின் மூலம் சங்கர்- கணேஷ் இசையமைப்பாளர்கள் ஆனார்கள். 'கவிஞர் வழங்கிய தேவரின் சங்கர்-கணேஷ்' என்ற டைட்டிலுக்கு சொந்தக்காரர்கள் ஆனார்கள்.

'வாழ்வில் புது மணம்' என்று பஞ்சு அருணாசலம் எழுதிய மெலடியும், 'மச்சான பாத்துட்டு மான்குட்டி மயங்குது...' என்ற கண்ணதாசனின் அதிரடியும் ரசிகர்களை எட்டியது. அடுத்து 'நான் யார் தெரியுமா?', 'சிரித்த முகம்' என படங்கள் தொடர்ந்தன. இரட்டையரின் முதல் நூறு நாள் படமாக 'அக்கா தங்கை' அமைந்தது. கவிஞர் குமாரதேவன் எழுதி, 'தேன் கிண்ணம்' படத்தில் இடம்பெற்ற 'தேன் கிண்ணம் தேன் கிண்ணம்...' பாடல் பெரிய வரவேற்பைப் பெற்றது.

தமிழ் சினிமாவை விட்டு விலகியிருந்த ஏ.எம்.ராஜாவை 'புகுந்தவீடு' படத்தின் மூலம் மறுபிரவேசம் செய்ய வைத்து இசையமைத்த, 'செந்தாமரையே... செந்தேன் இதழே...' பாடல் மெலடி ரசிகர்களை மட்டுமல்லாமல், குத்துவகையறா விரும்பிகளையும் குறிவைத்துத் தாக்கியது. Êசங்கர்- கணேஷ் இரட்டையரில் கணேஷின் மாமனார் ஜி.என். வேலுமணி தயாரிப்பில் எம்.ஜி.ஆர் நடித்த படம் 'நான் ஏன் பிறந்தேன்'. அதுவரைக்கும் வேலுமணி தயாரிப்பில் வந்த அத்தனை படங்களுக்கும் விஸ்வநாதன்-ராமமூர்த்தி இசைதான்.

அவர்களிடம் வேலை பார்த்த இரட்டையர், இந்தப்படத்துக்கு இசையமைத்தார்கள். எம்.ஜி.ஆரின் பரிந்துரை பலமாக இருந்ததுதான் காரணம். 'நான் ஏன் பிறந்தேன்...', 'நான் பாடும் பாடல்...', 'தம்பிக்கு ஒரு பாட்டு, 'உனது விழியில் எனது பார்வை...', 'சித்திரச்சோலைகளே... என அத்தனை  பாடல்களும் அனைத்துத் தரப்பையும் ஈர்த்தன.

 தேவரின் 'வெள்ளிக்கிழமை விரதம்' படத்தில் இடம்பெற்ற 'தேவியின் திருமுகம்...' ரசிகர்களால் தரிசிக்கப்பட்டது. 'ஆட்டுக்கார அலமேலு' படத்தில் இரட்டையர் வழங்கிய 'பருத்தி எடுக்கையிலே...' பாட்டு மட்டுமல்ல, அதில் ஆடு ராமு வரும் காட்சிகளில் பின்னணியில் ஒலிக்கும் இசைகூட ரசிகர்களால் பாடப்பட்டது. தேவர் தயாரித்த கடைசிப்படம் 'தாய் மீது சத்தியம்'. 'நேரம் வந்தாச்சு நல்ல யோகம் வந்தாச்சு...' என்று பாடல் அமைந் தாலும், படம் வெளிவருவதற்குள் தேவர் காலமானார். இரட்டையர் மனவேதனை அடைந்தனர்.

'உயர்ந்தவர்கள்' படத்தில் வாணி ஜெயராம் குரலில், 'இறைவன் இரண்டு பொம்மைகள் செய்தான்...', அதே குரலில் 'பாலைவனச்சோலை'யில் 'மேகமே மேகமே...', 'வாங்க சம்பந்தி வாங்க' படத்தில் டி.கே.எஸ்.நடராஜன் குரலில் 'என்னடி முனியம்மா உன் கண்ணுல மையி...', 'நீயா?'

வில் 'ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்...', 'உன்னை எத்தனைமுறை பார்த்தாலும் சலிப்பதில்லை...', 'நான் கட்டில்மேலே கண்டேன்...', 'சிவப்பு மல்லி'யில்  'ரெண்டு கன்னம் சந்தனக் கிண்ணம்...',  'இதய வீணை'யில் 'காஷ்மீர் பியூட்டிஃபுல் காஷ்மீர்...', 'பொன்னந்தி மாலைப்பொழுது...',

'கன்னிப்பருவத்திலே'யில் 'பட்டுவண்ண ரோசாவாம்...' என இந்த இரட்டையர்களின் வெகுஜன ரசனைப்பாடல்கள் நூற்றுக்கணக்கில் இருக்கின்றன. 'பணம் பெண் பாசம்' படத்துக்காக தமிழக அரசின் சிறந்த இசையமைப்பாளருக்கான விருது, கலைமாமணி, டாக்டர் பட்டம் வாங்கியவர் (சங்கர்)கணேஷ் - 'ஒத்தையடிப்பாதையிலே' ஆரம்பித்து 7 படங்களில் நாயகனாக நடித்தவர்.

ஏவி.எம்மில் 'கண்போன போக்கிலே கால்போகலாமா? என்ற பாடலை எழுதி முடித்து, வெளியே வந்து உட்கார்ந்த கவிஞர் வாலிக்கு தனது கடிகாரத்தை அணிவித்து அழகுபார்த்தவர் கணேஷ்.

உடம்பை ஒட்டிய சட்டை அணிவதும், சரம்சரமாய் நகைகளைத் தொங்கவிட்டுக் கொள்வதும் ஒரு ஈர்ப்புக்காகவே என்று சொல்லும் கணேஷ் தனது நண்பன் சங்கரின் மறைவுக்குப்பின்னும் சங்கர்-கணேஷாகவே பெயரைப் பயன்படுத்துவதில் பெருமை இருக்கிறது என்கிறார்.

நெல்லைபாரதி