வேலையில்லா பட்டதாரி



கடந்த சில படங்களில் கசப்பு மருந்து கொடுத்து கலங்க வைத்த தனுஷ்,  இதில் இனிப்பு மருந்து கொடுத்து கலக்கியிருக்கிறார். சிவில் எஞ்சினியரிங் முடித்த தனுஷ் படிப்புக்கு ஏற்ற வேலையில்தான் சேருவேன் என்று அடம்பிடித்து  நிற்கிறார்.  அதற்காக  வீட்டில் தண்டச்சோறு என்ற பட்டப் பெயர் கிடைக்கிறது. போதாக்குறைக்கு ‘தம்பியைப் பார் எவ்வளவு சம்பாதிக்கிறான்’ என்று குத்திக் காட்டி, மட்டம் தட்டுகிறார்கள். அடிமட்ட லெவலில் இருக்கும் தனுஷ் எப்படி நிமிர்ந்து நிற்கிறார் என்பதுதான் படம்.

கல்லூரிப் படிப்பை முடித்த மாணவன் ரோலுக்கு கச்சிதமாகப் பொருந்துகிறார் தனுஷ். வேலை இல்லாமல் தவிக்கும் இளைஞனின் மனநிலையை மிக அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார். மொத்தத்தில் ‘கண்ணு படப் போகுதய்யா......’ எனுமளவுக்கு சாமியாட்டம் ஆடியிருக்கிறார். குறிப்பாக வேலையில்லா பட்டதாரியின் கஷ்டத்தை நான்ஸ்டாப்பாக சொல்லும்போது விசில் சத்தத்தால் திரையரங்கம் அதிர்கிறது.

கல்யாண சந்தோஷத்தில்  இருந்தபோது நடித்த படம் என்பதாலோ என்னவோ தெரிய வில்லை, அநியாயத்துக்கு அழகு தேவதையாக வந்து போகிறார் அமலா பால். நடுத்தர அப்பா, அம்மா கேரக்டரில் சமுத்திரக்கனியும், சரண்யா பொன்வண்ணனும் வாழ்ந்திருக்கிறார்கள். விவேக் லேட்டாக வந்தாலும் சிரிப்புக்கு கியாரண்டி கொடுக்கிறார். ‘வாட் எ கருவாடு...’, ‘போ இன்று நீயாக...’ என ஒவ்வொரு பாடலிலும் அனிருத் வெற்றிக் கொடி பறக்கவிடுகிறார். இதுவரை ஒளிப்பதிவாளராகக் கலக்கி வந்த வேல்ராஜ்தான் படத்தின் இயக்குநர். முதல் படத்திலேயே பாக்ஸ் ஆபீஸை கதிகலங்க வைத்திருக்கிறார்.