வடசென்னை விஜய் வசந்த்!



“நான் நடித்து வெளிவரவுள்ள ‘என்னமோ நடக்குது’ படத்துக்கு காரணகர்த்தா என்னுடைய தம்பி வினோத்குமார்தான்” என்று மெல்லிய புன்னகையை தவழவிடுகிறார் விஜய் வசந்த்.
‘என்னமோ நடக்குது’ என்ன மாதிரியான படம்?

‘‘இது ஆக்ஷன், காமெடி கலந்த ரொமான்ஸ் திரில்லர் படம். வடசென்னையில்  வசிக்கிற சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த பையனா வர்றேன். இந்த கேரக்டருக்காகவே சென்னை லோக்கல் பாஷையை அந்த மக்களோடு மக்களாக வாழ்ந்து கற்றுக் கொண்டேன். துளியும் சினிமாத்தனம் இல்லாத கேரக்டர் என்று சொல்லலாம். நாயகி மகிமாவுக்கு நர்ஸ் கேரக்டர். இந்தப் படத்துல எனக்கு ஆக்ஷன் காட்சி இருக்கு. அந்தக் காட்சியில் நான் எந்தவித டென்ஷனும் இல்லாமல் நடித்தேன். தேசிய விருது பெற்ற சரண்யா பொன்வண்ணன்,

தம்பிராமையா ஆகியோருடன் சேர்ந்து நடிக்கும்போதுதான் கொஞ்சம் நெர்வஸானேன். ஒவ்வொரு ஷாட்டிலும் முடிந்தளவுக்கு என்னுடைய தி பெஸ்ட் என்று சொல்லக் கூடியளவுக்கு நடித்திருக்கிறேன். அரசியல்வாதியாக வரும் ரகுமானுடைய கேரக்டரும், பிசினஸ்மேனாக வரும் பிரபு வின் கேரக்டரும் ஸ்டைலிஷாக இருக்கும். என்னுடைய நண்பன் பிரேம்ஜி எனக்கே எனக்கு எனுமளவுக்கு அனைத்து பாடல்களையும் ஸ்பெஷலாக கொடுத்திருக்கிறார்.

ஒளிப்பதிவாளர் ஏ.வெங்கடேஷ் சென்னையை எந்தளவுக்கு அழகாக காண்பிக்க முடியுமோ அந்தளவுக்கு அழகாக காண்பித்துள்ளார். இயக்குநர் ராஜ பாண்டி இந்தியாவே அண்ணாந்து பார்க்கும் மணிரத்னத்தின் மாணவர். அந்தவகையில் படத்தின் மேக்கிங் எப்படி இருக்கும் என்று சொல்லத் தேவையில்லை” என்கிறார் விஜய் வசந்த்.


-எஸ்