சேர்த்து வைக்குது சாப்பாடு!



‘சினிமாவில் சம்பாதித்ததை சினிமாவில்தான் முதலீடு செய்வேன்’ என்று ‘உன் சமையலறையில்’ படத்தை தயாரித்து மீண்டும் சொல்லாமல் சொல்லியிருக்கிறார் பிரகாஷ்ராஜ். இந்த படத்துக்கு அவர்தான் இயக்குநர் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு இப்போதே எக்கச்சக்கமாக எகிறியுள்ளது.

இதன் நாயகி சிநேகா. இது தவிர தேஜஸ், சம்யுக்தா என்று இன்னொரு ஜோடியும் இருக்கிறார்கள். வசனம் விஜி, ஞானவேல், ஒளிப்பதிவு ப்ரீத்தா, இசை இளையராஜா. ஓல்ட் இஸ் கோல்ட் என்று நினைக்கக்கூடியவர் பிரகாஷ்ராஜ். நாகரீகத்தை நேசிக்கக்கூடியவர் சிநேகா. மனதாலும் சிந்தனையாலும் மாறுபட்டு நிற்கும் இவ்விருவரும் சாப்பாடு விஷயத்தில் ஒத்துப் போகிறார்கள். முழுக்க முழுக்க சமையலை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இதில் ரொமான்ஸுக்கும் முக்கியத்துவம் அளித்துள்ளார்களாம். 

‘‘இந்தப் படத்தின் அடையாளமே இளையராஜாதான். பாடல்களுக்கான வரிகளைக் கொடுத்ததும் சுடச்சுட டியூன் போட்டு கொடுத்தார். அவருடைய பரம ரசிகர்களில் நானும் ஒருவன் என்று சொல்வதில் எனக்கு எப்போதுமே மகிழ்ச்சி தான். ரிசல்ட்டுக்காக காத்திருக்கும் மாணவன் போல் மொத்தப் படத்தையும் முடித்துவிட்டு  இப்போது பின்னணி இசைக்காக படத்தை அவரிடம் கொடுத்துள்ளேன். அவருடைய பின்னணி இசைக்காகவே படத்தில் நிறைய ஸ்பேஸ் வைத்துள்ளேன்.

அடுத்து இந்தப் படத்தில் எனக்கு ஜோடியாக நடித்துள்ள சிநேகாவைப் பற்றியும் சொல்ல வேண்டும். ‘தோனி’ படம் ஆரம்பிக்கும் போது முதலில் அவரிடம்தான் கால்ஷீட் கேட்டேன். அப்போது அவர் பிஸியாக இருந்ததால் நடிக்க முடியவில்லை. அதேபோல் இந்தப் படத்தை ஆரம்பிக்கும் போதும் அவரிடம் கால்ஷீட் கேட்டேன். இந்தமுறை நான் நினைத்தது நடந்தது. சிநேகா என்றால் அவருடைய சிரிப்புதான் ஞாபகத்துக்கு வரும். ஆனால், இதுவரை பார்க்காத ஒரு சிநேகாவை இதில் பார்க்கலாம். அந்த அளவுக்கு பெர்பாமன்ஸில் பின்னியெடுத்துள்ளார்” என்று சிநேகா புராணம் பாடுகிறார் பிரகாஷ்.

-எஸ்