நான் சிகப்பு மனிதன்



சத்தம் கேட்டால் தூக்கம் வந்து கீழே விழுந்துவிடும் CATALEPSY நோயாளி விஷால். நடுரோட்டில் விழுந்துகிடக்கும் அவரை அனாதைப் பிணம் என்று சொல்லி வசூலிக்கிறார் மயில்சாமி. ஆளாளுக்கு சில்லறைகளை அள்ளிவீச, அடக்கச் செலவு எவ்வளவு எனக்கேட்டு, மொத்தமாக கருணைத் தொகை வழங்குகிறார் லட்சுமி மேனன். இறந்தவர் என்று சொல்லப்பட்ட விஷாலை ஒருநாள் எதிர்கொள்ள நேரிடும்போது, விசாரிக்கிறார். தூக்கக்கதையை ரொம்ப விழிப்புடன் சொல்கிறார் விஷால். அதன்பிறகு அவர்மீது காதல் வசப்படுகிறார் லட்சுமி மேனன்.

“தூங்கி விழும் இவனால் குழந்தையைத் தரமுடியாது. எனக்கு ஜாதி, பணம். அந்தஸ்து முக்கியமில்ல, வாரிசு முக்கியம்“ என்று காதலனை அறிமுகப் படுத்தும் மகளிடம் கூறி ரிஜெக்ட் செய்கிறார் ஜெயப்ரகாஷ்.அதைத்தொடர்ந்து லட்சுமி மேனன் செய்வது கொஞ்கம் அதிர்ச்சியான ட்ரீட்மென்ட். லட்சுமி மேனனை ஒருகட்டத்தில் நான்கு பேர் வன்புணர்ச்சி செய்கிறார்கள். தூக்க வியாதியில் இருந்ததால் விஷால் எதுவும் செய்ய முடியவில்லை.

தூக்கத்தால் மயங்கி விழும் வியாதி இருந்தாலும், அந்த சூழ்நிலையில், சுற்றிலும் நடக்கும் உரையாடலைக் கேட்கும் சக்தி விஷாலுக்கு இருக்கிறது. அதை வைத்து வில்லன்களை வேட்டை யாடுகிறார். தனது வினோத நோய் குறித்து வருத்தப்படும் போதும், லட்சுமிமேனன் நிலையறிந்து கதறும்போதும் நடித்துக் காட்டுகிறார் விஷால்.

மற்றவர்கள் ஏற்கத்தயங்கும் கேரக்டரை ஏற்று, தைரியமான நடிகை என நிரூபித்திருக்கிறார் லட்சுமி மேனன். லிப்லாக், நீச்சல் குளத்துக்குள் முதலுறவு என அவரது கேரக்டர் போகிறது.
இனியாவுக்கு  மோசமான கேரக்டரில் நல்ல நடிப்பு. அவரது கணவராக வரும் சுந்தர்ராமு ஒரு அல்ட்ரா மாடர்ன் மாமாவாக அசத்துகிறார். ஜி.வி.பிரகாஷ்குமார், நா. முத்துக்குமார், ஒளிப்பதிவாளர் ரிச்சர்டு எம்.நாதன் ஆகியோரின் பங்களிப்பு களிப்பு. முதல்பாதியின் கலகல விறுவிறு பின்னில் இல்லை. அதனால் அவ்வப்போது நமக்கும் CATALEPSY வந்துபோகிறது. திரு தைரியமாக ஒரு கதைக்களத்தை கையிலெடுத்து இயக்கியிருக்கிறார். ஆனாலும் ஓவர்.