வேடிக்கை பார்த்தவர் வேஷம் போட்டார்!



‘ஆத்தா உன் கோவிலிலே’, ‘மிட்டா மிராசு’, ‘மாங்கல்யம் தந்துனானே’, ‘பொல்லாங்கு’, ‘தமிழ் பொண்ணு’ படங்களில் ஹீரோவாக நடித்தவர் ரவிராகுல். இப்போது கே.ர.ராகுல் என்று பெயரை மாற்றிக் கொண்டு இயக்குனர் அவதாரம் எடுத்து, இயக்கிவரும் படம் ‘கலர் கண்ணாடிகள்’. முக்கால்வாசி படத்தை மலேசியாவில் எடுத்து விட்டு மீதியை சென்னையில் உருவாக்கி வருகிறார். பொன்னேரி கரையில் நடந்த ஹீரோ ஓப்பனிங் சாங் ஷூட்டிங் பார்க்க அழைத்திருந்தார்...


நாம் சென்றபோது பொன்னேரி கரை திருவிழா கோலத்தில் இருந்தது. நடன அழகிகள் கெட்ட ஆட்டம் போட்டுக் கொண்டிருக்க, அவர்களுக்கு நடுவில் புதுமுக ஹீரோ அஸ்வின் கொஞ்சம் வெட்கத்துடன் ஆடிக்கொண்டிருந்தார். அவரைப் பார்த்து சுற்றி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சில இளைஞர்கள், ‘‘டேய் மாப்ளே நல்லா ஆடுடா, டேய் உனக்கு மச்சம்டா... அடுத்த சூப்பர் ஸ்டார் நீ தான்டா...’’ என்று கத்திக் கொண்டே இருந்தார்கள். அஸ்வினை அவர்கள் கிண்டல் செய்கிறார்கள் என்றுதான் முதலில் நினைத்தோம். அதன் பிறகுதான் அவர்கள் அனைவரும் அஸ்வினின் நண்பர்கள் என்பதும் அஸ்வினுக்கு பொன்னேரி தான் சொந்த ஊர் என்பதும் தெரிந்தது.

பாடல் காட்சியை நடன இயக்குனர் ராம்சிவா கவனித்துக் கொள்ள நம்மிடம் வந்தார் இயக்குனர் கே.ர.ராகுல். ‘ஹீரோ இந்த ஏரியா பையனாமே’ என்றோம். ‘‘ஆமா, அது ஒரு சுவாரஸ்யமான கதை. சில நாட்களுக்கு முன்பு இதே பொன்னேரி கரையில சில டான்சர்ஸை மட்டும் வைத்து டெஸ்ட் ஷூட் பண்ணினேன். படத்துக்கு ஒரு ஹீரோவை பிக்ஸ் பண்ணியிருந்தேன். ஆனாலும் அவர் மேல எனக்கு திருப்தி இல்லை. அன்னிக்கு ஷூட்டிங் பண்றப்போ இதே மாதிரி வேடிக்கை பார்க்க வந்தவர்தான் அஸ்வின். பார்த்தவுடனேயே என் மனசுல இருந்த கேரக்டர் மாதிரியே இருந்தார். ‘நடிக்கிறியா தம்பி’ன்னு கேட்டேன். ஓகேன்னார். இரண்டு மாசம் நல்லா டிரெய்ன் பண்ணி மலேசியா கூட்டிட்டு போயி, அங்கும் ஷூட்டிங்கை முடிச்சிட்டு மறுபடியும் இங்கே ஓப்பனிங் சாங்குக்கு வந்திருக்கேன்...’’ என்றார்.

‘மலேசியா வரைக்கும் எதுக்கு போனீங்க’ என்றால் ‘‘கதையின் களமே அதுதான். சென்னை பாடகன் ஒருத்தன் மலேசியா பப்புல பாடுற டீமோட மலேசியா போறான். அங்கு வாடிக்கையாளரா வர்ற மலேசிய பெண்ணோட அறிமுகம் கிடைக்குது. அதனால ஒரு பெரிய பிரச்னையும் வருது. அதை எப்படி சமாளிச்சு வெளிய வர்றான்ங்கறது தான் கதை. சிங்கப்பூர் பப்புல நான் பார்த்த ஒருவரின் நிஜக்கதைதான். சும்மா மலேசியாவின் பிரமாண்ட பாலம், அழகான தெருக்கள்னு மலேசியாவை சுற்றிக் காட்டாமல் அதோட உண்மை முகத்தை காட்டப்போறேன்...’’

‘ஹீரோயின் சிண்டியன் இனத்து பொண்ணாமே?’ ‘‘ஆமாம். தமிழ் வாலிபன், மலேசிய பெண் காதல் என்பதால் அந்த வித்தியாசம் தெரியணும் என்பதால் சிண்டியன் இன பெண் திவ்யாஸ்ரீ நடிக்கிறார். தமிழ் தந்தைக்கும் சீன தாய்க்கும் பிறந்தவர்களை மலேசியாவில் சிண்டியன் என்கிறார்கள். பாடல் வெளியீட்டு விழாவுக்கு இங்கு வருகிறார்...’’

‘மலேசியா ஷூட்டிங் பார்க்க முடியலை. நீங்களாவது சொல்லுங்க’ என்றோம். ‘‘27 நாள் எந்த பிரச்னையும் இல்லாம ஷூட் பண்ணினோம். நாங்கல்லாம் ஒர்க்கிங் விசால போயிருந்தோம். ஹீரோ கடைசி நிமிஷத்தில் முடிவானதால அவர் மட்டும் டூரிஸ்ட் விசாவுல வந்திருந்தார். அதனால ஷூட்டிங் நடந்துகிட்டிருக்கும்போது போலீஸ் வந்தால் ஹீரோ அஸ்வின் ஓடிப்போய் ஷூட்டிங்கை வேடிக்கை பார்க்க வந்தவர் மாதிரி நின்னுக்குவார். படத்தை விட நிஜத்தில் சூப்பரா நடிச்சார். இப்படியேதான் ஷூட்டிங் முழுக்க நடந்தது...’’

பேசிக் கொண்டிருக்கும்போதே உதவியாளர் ஒருவர் வந்தார். ‘சார் ஹீரோவோட பிரண்டுங்கல்லாம் ஹீரோயினை காட்டுங்க காட்டுங்கன்னு கூச்சல் போடுறாங்க சார். சமாளிக்க முடியல’ என்றார். ‘‘இருங்க சார் வந்துடுறேன்’’னு எழுந்து நேராக அந்த இளைஞர்களிடம் சென்றார். ‘‘ஆளுக்கு 50 ஆயிரம் எடுத்துக்கிட்டு நாளைக்கு எங்க ஆபீஸ் வந்துடுங்க. மலேசியாவுக்கு போகலாம். உங்களுக்கு ஹீரோயினைக் காட்டுறேன்’’ என்று சொல்லி விட்டு வந்தார். கூச்சல்போட்ட இளைஞர்கள் கப்சிப் ஆகிவிட படப்பிடிப்பு தொடர்ந்தது.

- மீரான்