இன்னொருவர் வேதனை இவர்களுக்கு வேடிக்கை!



“திரைக்கதையை தொய்வில்லாமலும் ஆடியன்ஸின் கவனத்தை திரையை விட்டு பிரியாமலும் பார்த்துக்கொள்ளும் அனைத்தும் கமர்ஷியல் சினிமாதான். அந்த வரிசையில் நான் இயக்கும் ‘மெல்லிசை’ படமும் இருக்கும்...’’ - வார்த்தையை கச்சிதமாக அளந்து பேசுகிறார் டைரக்டர் ரஞ்சித். இவர் ‘கற்றது தமிழ்’ ராமின் சீடர்!

‘மெல்லிசை’ எப்படியிருக்கும்?

‘‘இதை ஆக்ஷன் படம், திகில் படம்னு வகைப்படுத்த முடியாது. ஆனால், இசைக்கும் ரொமான்ஸுக்கும் முக்கியத்துவம் இருக்கும். ஒருவருடைய கஷ்டம் இன்னொருவருக்கு மகிழ்ச்சியாகத் தெரியலாம். ஒருவரின் மகிழ்ச்சி இன்னொருவருக்கு கஷ்டமாகத் தெரிய லாம். நகர வாழ்க்கையின் அடையாளமாக இருக்கும் இதையே சுவாரஸ்யமாக சொல்லியுள்ளேன்.  மியூசிக் ஆல்பத்துக்கு இசை யமைக்கும் இசையமைப்பாளராக விஜய் சேதுபதி. அவருக்கு இந்த கேரக்டர் புதுமுயற்சி என்று சொல்லலாம். அதேபோல் பாடிலேங்வேஜும் பிற படங்களில் இருந்து வித்தியாசமாக இருக்கும். வயலின் டீச்சராக காயத்ரி. இருவரும் சினிமாவை புரபஷனலாக பார்க்கக்கூடியவர்கள் என்பதால் சிறப்பாக ஒத்துழைப்பு கொடுத்தார்கள்.

இவர்களோடு ‘ஆதலால் காதல் செய்வீர்’ படத்தில் நடித்த அர்ஜுன், ‘அலை அலை’ படத்தில் ஹீரோவாக நடித்துள்ள ரஞ்சித் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். ‘சூது கவ்வும்’, ‘தெகிடி’ படங்களின் கேமராமேன் தினேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். பல இசையமைப்பாளர்களிடம் கீ-போர்ட்  ப்ளேயராக வேலை செய்த சி.எஸ். ஷாம் இசையமைத்துள்ளார். பாடல்கள் மதன் கார்க்கி. 90 சதவீத படப் பிடிப்பை 48 நாட்களில் நான் ஸ்டாப்பாக படமாக்கியதை ஹைலைட் என்று சொல்லலாம். வேகமாக படப்பிடிப்பு நடக்க காரணம், இந்தப் படத்தின் ஸ்க்ரிப்ட் என் மனதில் ஆழமான பதிவாக இருந்தது...’’

- சுரேஷ் ராஜா