ஜானி டெப்பின் புதிய அவதாரம்



‘பைரேட்ஸ் ஆப் தி கரீபியன்’ படங்களில் கேப்டன் ஜாக் ஸ்பேரோ கேரக்டரில் அமர்க்களப்படுத்திய ஜானி டெப் நடிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் படம், ‘டிரான்செண்டன்ஸ்’.

இயக்குனர் கிறிஸ்டோபர் நோலனின் ‘இன்செப்ஷன்’ படத்துக்கு பிரமிக்கும் வகையில் ஒளிப்பதிவு செய்து ஆஸ்கர் விருதை அள்ளிய வால்லி பிஸ்டர் முதல் முறையாக இயக்கி இருக்கிறார். கடல் கொள்ளையனாக ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளையடித்த ஜானி டெப்புக்கு இதில் ஹைடெக் ஆய்வாளர், டாக்டர் வில் காஸ்ட்டர் வேடம்.

‘இந்த புது டெக்னாலஜி எல்லாம் நமக்கு ரொம்பவே அலர்ஜி. இப்போ சின்னப் பசங்க கூட போன்லயே எல்லா வேலையையும் முடிச்சிடறாங்க. ஆனா, எப்போ பார்த்தாலும் டச் ஸ்கிரீனையே தட்டிக்கிட்டு முறைச்சு பார்த்துட்டு இருக்கிறது எரிச்சலா இருக்கு. நம்மள போய் ஆராய்ச்சியாளர் ரேஞ்சுக்கு பில்டப் கேரக்டர்ல மாட்டிவிட்டுட்டார் இயக்குனர் பிஸ்டர்’ என்று அலுத்துக் கொள்கிறார் டெப்.
இன்னும் ஒரே வாரத்தில் இந்தியா முழுவதும் வெளியாக இருக்கிறது ‘டிரான்செண்டன்ஸ்’. கோமாளித்தனம் கலந்த சாகசக் கொள்ளையன் ஜாக் ஸ்பேரோவாக தூள் கிளப்பியவர், டாக்டர் வில் காஸ்ட்டராக இந்த சயன்ஸ் பிக்ஷன் படத்தில் எப்படி கலக்கப் போகிறார் என்பதை பார்க்க, ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.

‘ரியோ 2’க்கு குரல் கொடுத்த சோனாக்ஷி  ஹாலிவுட் பிரமாண்டம் ‘ரியோ 2’ அனிமேஷன் படத்தின் இந்தி பதிப்பில் முக்கியமான கேரக்டர்களுக்கு குரல் கொடுத்த முன்னணி ஹீரோ
இம்ரான் கான், ஹீரோயின் சோனாக்ஷி சின்ஹா இருவரும் உற்சாகமாக இருக்கிறார்கள். புளூ, ஜுவல் பஞ்சவர்ணக்கிளி தம்பதிக்குத் தான் இம்ரான், சோனாக்ஷியின் டப்பிங் வாய்ஸ். ‘இது ரொம்பவே வித்தியாசமான அனுபவமா இருந்தது. கார்ட்டூன் கேரக்டருக்கு குரல் கொடுக்கும்போது, ஒரு நடிகரா செய்ய முடியாத பல விஷயங்கள முயற்சி செய்து பார்க்க முடிந்தது. கேலியும் கிண்டலுமாக வித்தியாசமான குரல், வித்தியாசமான ஒலிகள் என்று செம ஜாலியாக இருந்தது’ என சிலிர்க்கிறார் இம்ரான்.

‘டப்பிங்கின்போது என்னால சிரிப்ப அடக்கவே முடியல. பேசி முடிச்சதும் சிரிக்கறதுக்காகவே சின்னச் சின்ன பிரேக் தேவையா இருந்தது. எல்லாம் முடிஞ்சு முழு படத்தையும் போட்டுப் பார்த்தபோது அப்படியே பிரமிச்சுப் போயிட்டேன். வாவ். மறக்க முடியாத அனுபவம்’ என்று கண்களால் சிரிக்கிறார் சோனாக்ஷி. இந்த முப்பரிமாண அனிமேஷன் படம், குழந்தைகளுக்கு கோடை விருந்தாக விரைவில் வருகிறது.

படமாகும் இணையதள ஊடுருவல் தனது ‘பிளான் பி’ தயாரிப்பு நிறுவனம் சார்பில் உருவான ‘12 இயர்ஸ் எ ஸ்லேவ்’ படம் ஆஸ்கர் விருதை அள்ளியதில் உற்சாகமாக இருக்கிறார் பிரபல நடிகர் பிராட் பிட். அடுத்தும் ஓர் உண்மைக் கதையை வெள்ளித் திரையில் வெளிச்சமிட திட்ட மிட்டிருக்கிறார்கள்.

ஹேக்கிங் எனப்படும் இணையதள ஊடுருவலில் நிபுணரான இளைஞன் ஒருவன், 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இரண்டு பிரபல கால்பந்து வீரர்கள் பற்றிய விவரங்களை போலீஸ் வெப்சைட்டில் இருந்து திருடி உலகுக்கு அம்பலப்படுத்தியதால் எதிர்கொண்ட பிரச்னைகளை அலசப் போகிறதாம் படம். நல்ல இயக்குனராக தேடிக் கொண்டிருக்கிறது பிளான் பி தரப்பு.

பா.சங்கர்