ஒரு கன்னியும் மூணு களவாணிகளும்



ஒவ்வொரு நிமிடத்துக்குள்ளும் ஒரு வாழ்க்கை இருக்கிறது என்கிற கருத்தை அடிப்படையாகக் கொண்டு கதை சொல்லியிருக்கிறார்கள். ஒரு செயலை 8.59 மணிக்குத் தொடங்கினால் என்ன நடக்கும்? 9.00 மணிக்குத் தொடங்கினால் என்ன நடக்கும்? 9.01க்குத் தொடங்கினால் எப்படி நடக்கும் என்பதுதான் கதையின் அடித்தளம். அருள்நிதியும், அர்ஷிதாவும் காதலர்கள். ஆனால், வழக்கம் போல் நாயகியின் அப்பா, காதலுக்கு குறுக்கே வருகிறார். அந்த நேரத்தில்தான் அந்த செயலை  மூன்று முறை அரங்கேற்றம் செய்கிறார். முடிவு சுபமா, சோகமா என்பது மீதிக்கதை.

நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த இளைஞன் வேடத்துக்கு அருள்நிதி கச்சிதமாகப் பொருந்துகிறார். டயலாக் டெலிவரி, பாடி லேங்வேஜ் உட்பட நிறைய ஏரியாக்களில் சர்வ சாதாரணமாக ஸ்கோர் பண்ணுகிறார். பிந்துமாதவி வழக்கம் போல் தன் குண்டு விழிகளால் ரசிகர்களைக் கட்டிப் போடுகிறார். அர்ஷிதாவுக்கு வேலை கம்மி என்றாலும் நடிப்பில் குறை இல்லை. ஹீரோவுக்கு அடுத்தபடியாக பகவதி பெருமாள் ஸ்கோர் பண்ணுகிறார். அவர் வந்து போகும் இடமெல்லாம் காமெடிக்கு கியாரண்டி தரலாம்.

நாசர், பாண்டு, எம்.எஸ்.பாஸ்கர் கூட்டணியும் தங்கள் பங்குக்கு சிரிக்க வைக்கிறார்கள். ஒவ்வொரு எபிசோடிலும் புதுமையைக் காண்பித்திருக்கிறார்கள். ஒரே கடத்தல் சம்பவத்தை ஒரே லொகேஷனில் மூன்று முறை அரங்கேற்றம் செய்திருப்பதை தவிர்த்திருக்கலாம். விதியை வைத்து ஒரு பெண்ணை கடத்தும் சதியை சுவாரஸ்யமாகச் சொல்லியிருக்கிறார் இயக்குனர் சிம்புதேவன்.