சாண்டல்வுட் சாண்ட்விச்



எலெக்ஷன் டூட்டியில் சென்சார் அதிகாரி தவிப்பில் தயாரிப்புகள்

கன்னடப் பட சென்சார் அதிகாரியான எம்.நரேந்திர சாமி எலெக்ஷன் டூட்டிக்குச் சென்றுவிட்டதால் கடுப்பாகி இருக்கிறது கன்னட திரைப்பட உலகம். 'நான் திரும்பி வர்ற வரை வெயிட் பண்ணுங்க. பத்து, பன்னிரெண்டு நாள்ல வந்துருவேன்' என்று சொல்லிவிட்டு சென்றிருக்கிறார் சாமி.

அவர் சொன்ன நாட்கள் கடந்த 5-ம் தேதியில் இருந்து ஆரம்பிக்கிறது. ரிலீஸ் தேதியை நெருங்கிவிட்டு பெரிய பட்ஜெட் படங்கள் பல காத்திருக்க, இவர் இப்படிச் சென்றுவிட்டதால் தயாரிப்பாளர்கள் அப்செட். 'ஒவ்வொரு படத்துக்கும் பல கோடி ரூபாயை வட்டிக்கு வாங்கி தயாரிச்சிருக்கோம். பத்து நாள், பன்னிரெண்டு நாள்னு இவங்க பாட்டுக்குப் போனா எங்களால வட்டி கொடுக்க முடியுமா? கோர்ட்டுக்குப் போகப் போறோம்' என்று கொதிக்கிறார்கள் சாண்டல்வுட் தயாரிப்புகள்.
சரிதானே!

நண்பர்களான எதிரிகள்

‘நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை' என்ற வார்த்தையை சினிமாவிலும் அரசியலிலும் அடிக்கடி கேள்விப்பட்டிருக்கலாம். விஷ்ணுவர்தன்- துவாரகீஷ், ரவிச்சந்திரன் - டி. ராஜேந்திரபாபு, ரவிச்சந்திரன் - அம்சலேகா என கன்னடத் திரையுல கில் முதலில் மோதி பிறகு சேர்ந்தவர்கள் ஏராளம். அந்த வரிசையில் சேர்ந்திருக்கிறார்கள் கன்னட ஹீரோ 'துனியா' விஜய்யும், இயக்குனர் எஸ்.நாராயணும்.

'சண்டா' படத் தயாரிப்பின் போது இருவரும் மோதிக்கொண்டதைப் பார்த்தவர்கள், நேரில் பார்த்தால் கடித்து துப்பிவிடுவார்களோ என்று பயந்தார்கள். 'செலுவினா சித்தாரா' என்ற படத்தின் நூறாவது நாள் விழாவில் விஜய்யின் பெயரைக் குறிப்பிடாமல், ஹீரோ ஒருவரின் அட்ராசிட்டியைப் பற்றி நாராயண் பேச, எல்லோருக்குமே அது விஜய் என்று புரிந்துவிட்டது. பிறகு பிரச்னை பூதாகரமாகி பிலிம்சேம்பர் வரை சென்றது. சேம்பர், ஒருங்கிணைப்புக் குழு ஒன்றை அமைத்து இருவரையும் சமரசம் செய்து வைத்தது எல்லாம் பழைய கதை.

இதன் காரணமாக இருவரும் சேர்ந்து படம் பண்ண மாட்டார்கள் என்று கன்னட திரையுலகம் நம்பிக்கொண்டிருக்க, அந்த நம்பிக்கையைப் பொய்யாக்கி இருக்கிறார்கள் இருவரும். விஜய் நடிப்பில் 'தக்ஷா' என்ற படத்தை இயக்குகிறார் நாராயண். இது ஒரே டேக்கில் எடுக்கப்படும் படமாம். போங்கப்பா நீங்களும் உங்க சண்டையும்.

தர்ஷன் ஜோடி அனுஷ்கா இல்லை

பெங்களூரைச் சேர்ந்தவராக இருந்தாலும் இதுவரை கன்னடப் படம் எதிலும் நடிக்கவில்லை அனுஷ்கா. அவரை எப்படியாவது நடிக்க வைத்துவிட வேண்டும் என்று கன்னடத் திரையுலகம் முயற்சித்துக்கொண்டிருக்கிறது. ஆனாலும் கால்ஷீட் பிரச்னை காட்டி நழுவுகிறாராம் அனுஷ்கா. இது இப்படியிருக்க, தர்ஷன் நடிக்கும் 'ஜக்கு தாடா' படத்தில் அவர் ஜோடியாக அனுஷ்கா நடிப்பதாக ஊரெல்லாம் பேச்சு.

'ஐயையோ அப்படியெல் லாம் இல்லைங்க. என் ஜோடியாக அனுஷ்கா நடிக்கவே இல்லை. யார்தான் இப்படியெல்லாம் பொய்த் தகவலை பரப்புறாங்களோ! ஹீரோயின் முடிவானதும் நாங்களே சொல்றோம். ஆனா கண்டிப்பா அனுஷ்கா இல்லை' என்று சொல்லியிருக்கிறார் தர்ஷன். நம்புவோமாக!