வாலியின் கடைசிப் பாட்டு



வாலியின் கடைசிப் பாட்டு என்று ஆளாளுக்கு ஒரு பாடலைச் சொல்லிக் கொண்டிருக்க, ‘அவர் கடைசியா எழுதின பாட்டு இதுதான்’ என்று ஆதாரத்தோடு சொல்கிறார் அறிமுக இயக்குனர் தம்பி செய்யது இப்ராகிம். ‘எனது வளர்ப்பு பிள்ளை’ என்று வாலியால் கூறப்பட்ட இவர், ‘புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். அ.செ.இப்ராகிம் ராவுத்தர் தயாரிக்கும் இந்தப் படத்தில் பாடகர் கிரீஷ், சிருஷ்டி டாங்கே நடிக்கின்றனர்.

‘கடந்த ஆண்டு ஜூன் 7ம் தேதி என்னை வீட்டுக்கு வரச் சொன்னார், வாலி அய்யா. ‘இதயத்தில் நிறைய வலி. நாளை மருத்துவமனைக்கு செல்கிறேன். திரும்பி வந்து மற்ற பாடல்களைத் தருகிறேன். இன்று வந்தால், உன் படத்துக்கு ஒரு பாட்டு தருகிறேன்’ என்றார். சென்றேன். எழுதிக் கொடுத்தார். அது ஒரு மரணப் பாட்டு.

 ‘அவன் அறிவான் எது நன்மை? அவன் அறிவான் எது தீமை? எவன் அறிவான் அவன் தீர்ப்பை? நம் வாழ்க்கை என்றும் அவன் கையில்தான்’ என்று எழுதினார். என் கண்களில் நீர் தளும்பியது. உலகை விட்டுச் செல்லப்போகிறேன் என்பதை சூசகமாகச் சொல்லிவிட்டார். இதுதான் வாலி அய்யா எழுதிய கடைசி பாட்டு.

 இடைவேளையில் இடம்பெறும் மழைக்காட்சி, மதுரையில் ஒரு வாரம் படமாக்கப்பட்டது. தன் தாயார் ரெஹானாவின் இசையில் ஜி.வி.பிரகாஷும், அவரது மனைவி சைந்தவியும் இணைந்து ஒரு பாடலைப் பாடியுள்ளனர். படம் சிறப்பாக வரவேண்டும் என்பதற்காகத்தான் சிரத்தை எடுத்துக்கொண்டு பணியாற்றுகிறோம்’ என்ற இயக்குனர் தம்பி செய்யது இப்ராகிம், ஒவ்வொரு காட்சியையும் செதுக்கி இருக்கிறாராம். வரும் 1ம் தேதி பாடல் வெளியீட்டு விழா நடக்கிறது. மே இறுதியில் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

-தே