தமிழில் நடிக்கும் ஆப்கானிஸ்தான் அழகி





கோலிவுட்டில் கோலோச்சும் ‘கான்’கள் வரிசையில், புதிதாக சேர்ந்துள்ளார் மேகா கான். ஷாம் நடித்த ‘அகம் புறம்’ படத்தில் நடித்தார் என்றாலும், ‘கந்தா’ ரிலீசுக்குப் பிறகே ரசிகர்களால் கவனிக்கப்படுவோம் என்று நம்புகிறார்.

‘‘என் அப்பா அன்வர் கானுக்கு ஆப்கானிஸ்தான். அம்மா அன்சாருக்கு திருச்சி. இருவரும் எதிர்பாராமல் சந்தித்தபோது, காதல் மலர்ந்தது. பிறகு திருமணம். இப்போது என் அப்பா உயிருடன் இல்லை. சகோதரர் நியாமத் கான், தங்கை நூரி இருக்கின்றனர்...’’ என்கிறார்.

சகோதரரும் நடிக்கிறாராமே?
ஆமாம். பாரதிராஜா இயக்கிய ‘பொம்மலாட்டம்’ படத்தில் அறிமுகமானார். இப்போது ‘கந்தா’ படத்தில் வில்லனாக நடித்துள்ளார். தமிழில் நல்ல வாய்ப்புக்கு காத்திருக்கிறார்.

பஸ்து மொழியில் பேசுகிறீர்களே?
அது என் தாய்மொழி. ஆப்கானிஸ்தானில் வசித்தபோது, பஸ்து மொழியில் பேசினேன். இப்போது மும்பையில் குடியேறியுள்ளேன். தமிழில் பேசினால் புரிந்துகொள்வேன். ஆனால், பதிலளிக்க தெரியாது. விரைவில் தமிழ் கற்றுக்கொள்வேன். தவிர ஆங்கிலம், இந்தி மொழிகளில் சரளமாகப் பேசுவேன்.

‘அகம் புறம்’ எப்படி?
ஷாம், மீனாட்சி நடித்த அந்தப் படத்தை திருமலை இயக்கினார். மும்பை புதுமுகங்களை தேடியபோது, என் போட்டோவைப் பார்த்தவுடனே தேர்வு செய்துவிட்டார். இப்போது கரண், மித்ரா குரியன் நடிக்கும் ‘கந்தா’ படத்தில், இரண்டாவது ஹீரோயினாக நடித்துள்ளேன். வேலை தேடி மலேசியாவுக்கு வரும் கரணுக்கு நான் அறிமுகமாவேன். அவருக்கு உதவி செய்யும் கேரக்டர். எனது காட்சிகள் மலேசியாவில் படமானது.

இந்தியிலும் நடிக்கிறீர்களா?
ஓம்கார் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் பெயரிடப்படாத ஒரு படத்தில் ஹீரோயினாக நடிக்கிறேன். மனோஜ் பாண்டே ஹீரோ. ஆனால், என் கவனம் முழுவதும் தமிழில் மட்டுமே இருக்கிறது. அம்மாவுக்கு சொந்த ஊர் திருச்சி என்பதால், நான் தமிழ்ப் படங்களில் நடித்து சாதிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.

ஆல்பம் வெளியிட்டு இருக்கிறீர்களாமே?
முதலில் மாடலிங் செய்தேன். பிறகு மும்பையில் நடந்த பேஷன் ஷோக்களில் கலந்துகொண்டேன். இந்தியில் பத்து ஆல்பங்களில் என் பங்களிப்பு இருக்கிறது. இந்தி பாடல்களுக்கு நடனம் ஆடியிருக்கிறேன். மலையாளத்திலும் ஒரு ஆல்பம் வெளியானது. அதுபோல், தமிழில் ஆல்பம் உருவாக்க ஆசை.  

நீங்கள் தொழிலதிபராமே?
அப்பா விட்டுச் சென்ற பிசினஸ் அனைத்தையும் அம்மா கவனித்துக் கொள்கிறார். அவருக்கு நான் உதவி செய்கிறேன். என்றாலும், என் கவனம் முழுவதும் சினிமாவில் மட்டுமே இருக்கிறது. பேஷன் டிசைனிங் தெரியும் என்பதால், எங்கள் கார்மெண்ட்ஸ் கம்பெனியிலும் பணியாற்றுகிறேன். தவிர, மும்பையில் எங்களுக்கு மீன் பண்ணையும் இருக்கிறது.

முமைத்கான் உறவினரா?
இல்லை. அவரும், நானும் நல்ல தோழிகள்.

குத்துப்பாட்டுதான் இலக்கா?
அப்படி சொல்ல மாட்டேன். எந்த கேரக்டராக இருந்தாலும், படத்தில் அதற்கு ஒரு வடிவமும், முக்கியத்துவமும் இருக்க வேண்டும். அந்தமாதிரி கேரக்டரில் நடிக்க காத்திருக்கிறேன். ஒரு பாடலுக்கு கேட்டாலும், ஆடுவதற்கு தயார். ஒரு படத்திலாவது வில்லியாக நடிக்க ஆசைப்படுகிறேன்.




தவிர, சினிமாவில் நடித்து சம்பாதித்துதான் வாழ வேண்டும் என்ற அவசியம் எனக்கு இல்லை. காரணம், அடிப்படையிலேயே நான் பெரிய பணக்காரி. அம்மாவின் ஆசைக்காகவும், என் ஆத்ம திருப்திக்காகவும் மட்டுமே சினிமாவில் நடிக்கிறேன். எனவே, பணம் எனக்கு முக்கியம் இல்லை. நல்ல கேரக்டர்தான் முக்கியம்.

இன்ஸ்டிடியூட்டில் சேரப் போகிறீர்களாமே?
பிசினஸ், நடிப்பு, ஆல்பம் தவிர விளையாட்டிலும், இசையிலும் எனக்கு அதிக ஆர்வம் உண்டு. ஓய்வு நேரங்களில் ஏதாவது யோசித்துக் கொண்டிருப்பேன். அதை ஸ்கிரிப்ட்டாக எழுதுவேன். சினிமாவில் ஈடுபட்டுள்ளதால், டைரக்ஷன் மீது ஈடுபாடு உண்டு. அதைப்பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறேன். எனவே, விரைவில் புனே பிலிம் இன்ஸ்டிடியூட்டில் சேர்ந்து, டைரக்ஷன் கோர்ஸ் படிப்பேன்.
- தேவராஜ்