மகளை ஆட்டிப் படைக்கும் அம்மா





‘மைனா’ சுகுமார், விரைவில் ரிலீசாக உள்ள ‘கண்டுபிடி கண்டுபிடி’, ‘கும்கி’ படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்போது கன்னடத்தில் ரீமேக் ஆகும் ‘போராளி’க்கு ஒளிப்பதிவு செய்யும் அவர், தமிழில் சமுத்திரக்கனி இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் ‘நிமிர்ந்து நில்’லுக்கும் ஒளிப்பதிவு செய்கிறார். இவரது அண்ணன் ஜீவன், ‘அமரா’வை இயக்கி முடித்து, ‘சாட்டை’க்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.  

உதயநிதி ஸ்டாலின் மனைவி கிருத்திகா, விரைவில் இயக்குநர் ஆகிறார். இப்படத்தில் விஷ்ணுவின் மனைவி ரஜினி, உதவி இயக்குநராகப் பணிபுரிய உள்ளார். இப்போது இவர், ‘நீர்ப்பறவை’யில் சீனு ராமசாமியின் உதவியாளராகப் பணியாற்றி வருகிறார்.

வழக்கமாக இரட்டை வேடம் என்றால் தந்தை, மகன் என்றோ அல்லது அண்ணன், தம்பி என்றோ காட்டுவார்கள். ஆனால், இருவருக்கும் எந்த உறவுமுறையும் இல்லாத ஒரு படம் ‘நிமிர்ந்து நில்’ பெயரில் உருவாகிறது. இரு வேடத்தில் நடிக்கும் ஜெயம் ரவிக்கள், வெவ்வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். 26 வயது, 45 வயது கொண்ட இருவரும் சந்திக்கும் போது ஏற்படுகின்ற பிரச்னைகளை சொல்லும் இப்படத்தில் அமலா பால், மேக்னா ராஜ் ஹீரோயின்களாக நடிக்கின்றனர்.


ஷூட்டிங் ஸ்பாட்டில் தன்னுடன் இணைந்து நடிக்கும் நட்சத்திரங்களுக்கு கேரளாவின் மகிமையையும், அங்குள்ள ஆயுர்வேத மசாஜின் அருமை, பெருமைகளையும் சொல்வது ஸ்வேதா மேனனின் வழக்கம். தமிழில் ‘நான் அவன் இல்லை 2’ம் பாகம், ‘அரவான்’ படங்களில் நடித்த அவருக்கு மல்லுவுட் அமோகமாக கைகொடுத்துள்ளதாம். எனவே, கோலிவுட் பக்கம் அவரது பார்வை திரும்பவில்லை. இப்போது 7 மாத கர்ப்பிணியாக இருக்கும் அவருக்கு மலையாளத்தில் நிறைய புதுப்பட வாய்ப்புகள் கிடைத்து வருவது ஆச்சரியமாக இருக்கிறது.

பழைய ‘பில்லா’வைத் தொடர்ந்து ‘ரங்கா’வும் வந்து விட்டது. இரண்டுமே ரஜினி நடித்த பழைய படங்கள். இப்போது அவ்விரண்டு பெயர்களையும் இணைத்து தன் படத்துக்கு சூட்டியுள்ளார், இயக்குநர் பாண்டிராஜ். அவர் மதன் என்பவருடன் இணைந்து தயாரிக்கும் படத்துக்கு ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ என்று பெயரிட்டுள்ளார். ஏற்கனவே அவரது படங்களில் நடித்த விமல், சிவகார்த்திகேயன் ஆகியோர் முதல் முறையாக இப்படத்தில் இணைந்து நடிக்கின்றனர். கதைக்களம், திருச்சி.

எத்தனையோ படங்களில் வித்தியாசமான கிளைமாக்ஸ் பார்த்திருக்கிறோம். ‘ஜெயம்’ படத்தில், இடைவேளைக்குப் பிறகு படம் தொடங்கியதுமே கிளைமாக்ஸ் ஆரம்பித்து விடும். மலையாளத்தில் உருவாகும் ‘ரத்த ரக்ஷக்’ என்ற சைக்கோ த்ரில்லர் படத்தில், வெவ்வேறு கோணங்களில் 4 கிளைமாக்ஸ் காட்சிகள் இடம்பெறுகிறது. இதில் அனன்யா முதல்முறையாக இரு வேடங்களில் நடிக்கிறார். அதில் ஒன்று, பேய் வேடம்!

பிரபு சாலமனின் ‘கும்கி’ இன்னும் ரிலீசாகவில்லை. அதற்குள் இப்பட ஹீரோயின் லட்சுமி மேனன் பிஸியாகி விட்டார். மலையாள வரவு என்பதால், இவரை ஒப்பந்தம் செய்ய போட்டி போடுகிறார்கள். சசிகுமார் ஜோடியாக ‘சுந்தரபாண்டியன்’ படத்தில் நடிக்கும் அவர், ‘ரேனிகுண்டா’ பன்னீர்செல்வம் ‘18 வயசு’க்குப் பிறகு இயக்கும் ‘ரோமியோ ஜூலியட்’ படத்திலும் நடிக்கிறார்.



‘அவன் - இவன்’ அறிமுக நாயகி ஜனனி அய்யர், ‘பாகன்’ படத்தில் ஸ்ரீகாந்த் ஜோடியாக நடிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் வெளியூரில் நடந்தபோது, அவர் சைக்கிள் ஓட்டும் காட்சியை இயக்குநர் அஸ்லாம் படமாக்கினார். அப்போது எதிர்பாராவிதமாக சைக்கிளில் இருந்து கீழே விழுந்த ஜனனிக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டதாம். கடுமையான வலி காரணமாக ஓவென்று அழுத அவரை, ஹீரோ ஸ்ரீகாந்த் சமாதானப்படுத்தி, முதலுதவி சிகிச்சை அளித்தாராம்.

‘ரத்த சரித்திரம்’, ‘தோனி’ படங்களுக்குப் பிறகு ‘வெற்றிச்செல்வன்’ படத்தில் நடிக்கிறார் ராதிகா ஆப்தே. இவரது லண்டன் காதலர் பெனடிக் டெய்லர், திருமண நிச்சயதார்த்தம் முடிந்த நாளிலிருந்து ராதிகா எங்கெங்கு செல்கிறாரோ அங்கு துணைக்கு வருகிறாராம். சமீபத்தில் ராதிகாவுக்கு சென்னையில் ஷூட்டிங் நடந்தபோது, கேரவனுக்குள் அமர்ந்து கொண்டாராம். மீடியாக்களின் கண்களில் படக்கூடாது என்று காதலி சொன்ன ஆலோசனையைக் கடைபிடிக்கும் பெனடிக், ஹோட்டலில் ஒரே அறையில்தான் தங்குகிறாராம்.

மும்பை விமான பைலட் ரோஹித் ராமச்சந்திரனை திருமணம் செய்து, ஒரு மகனுக்கு அம்மா ஆனவர் ஸ்ரீதேவிகா. அவரது கணவருக்கு துபாய்க்கு டிரான்ஸ்பர் கிடைத்துள்ளது. எனவே, மும்பை வீட்டைக் காலி செய்துவிட்டு, அடுத்த மாதம் துபாயில் செட்டிலாகிறார். என்றாலும், சின்னத்திரை மெகா தொடரில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார். சினிமாவிலும் முக்கியமான கேரக்டர்கள் கிடைத்தால், துபாயிலிருந்து வந்து நடிப்பாராம்.

மீன் குஞ்சுக்கு நீந்தக் கற்றுக் கொடுக்க வேண்டுமா என்ன? ஏன், அப்படி கற்றுக் கொடுத்தால்தான் என்ன? அது இன்னும் கொஞ்சம் டெவலப் ஆகுமே. இந்த எண்ணத்துடன் தன் மகன் கவுதமை சக நண்பர் அர்ஜூனிடம் நடிப்பு மற்றும் சண்டைப்பயிற்சி பெற அனுப்பி வைத்தாராம் கார்த்திக். ‘கடல்’ படத்தில் கவுதமை ஹீரோவாக மணிரத்னம் அறிமுகம் செய்கிறார் என்பதாலேயே இவ்வளவு பொறுப்புணர்வுடன் நடந்து கொண்டாராம். அதுபோல், ஹீரோயினாக அறிமுகமாகும் ராதா மகளும், கார்த்திகாவின் தங்கையுமான துளசிக்கும் நடிப்புப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கும், தனக்கும் சம்பந்தம் இல்லை என்று சொல்லி விட்டார் கார்த்திகா.

ஸ்வப்னா, ஸ்வேதா என்ற பெயர்க் குழப்பத்துடன் நடிக்கும் ஸ்வேதா, ‘இதயம் திரையரங்கம்’ படத்தை பெரிதும் எதிர்பார்த்தார். அது புஸ்சாகி விட்டது. எனவே ‘கம்பன் கழகம்’, ‘பயணங்கள் தொடரும்’ உட்பட சில படங்களில் நடிக்கிறார். இப்போது ஜெயம் ரவி, த்ரிஷா நடிக்கும் ‘பூலோகம்’ படத்தில் ஒப்பந்தமாகி, கவர்ச்சியாக நடித்து வருகிறார். த்ரிஷாவுக்கும், அவருக்கும் யாருக்கு காஸ்ட்லியான காஸ்டியூம்ஸ் என்பதில் கடுமையான போட்டி நிலவுகிறதாம்.

பாரதிராஜாவின் ‘அன்னக்கொடியும் கொடிவீரனும்’ படத்தில் வித்தியாசமான கெட்டப்புகளில் நடிக்கும் கார்த்திகா, இரு படங்களை காவு கொடுத்து விட்டார். ‘சட்டம் ஒரு இருட்டறை’ ரீமேக்கில் இருந்து உஷாராக கழன்றுகொண்ட அவர், விஷாலின் ‘மத கஜ ராஜா’வில் இருந்தும் விலகி விட்டார். காரணம், தனி ஹீரோயினாக மட்டுமே அவர் நடிக்க வேண்டும் என்று ராதா விரும்புகிறாராம்.

டான்ஸ் மாஸ்டர் லலிதா, மணியின் மகன் ராகுல். இவரது ஜோடியாக, ‘கம்பீரம்’ சுரேஷ் இயக்கத்தில் ‘வவ்வால் பசங்க’ படத்தில் நடித்த உத்ரா உன்னி நடிக்கிறார். இந்த உத்ரா, ‘ஒரு நடிகையின் வாக்குமூலம்’ படத்தில் சோனியா அகர்வாலுக்கு அம்மாவாக நடித்த மலையாள நடிகை ஊர்மிளா உன்னியின் மகள். படிப்பதற்காக கேரளாவில் இருந்து சென்னை வந்து தங்கியுள்ள அவர், ஏ.வெங்கடேஷ் இயக்கும் ‘எனக்கு வாய்த்த நண்பர்கள் இப்படி’ படத்திலும் நடிக்கிறார். அடிப்படையில் நாட்டியக்காரி என்பதால், கவர்ச்சி காட்டாமல், தன் நடிப்புத் திறமையை வெளிப்படுத்த ஆசைப்படுகிறாராம்.
- தேவராஜ்