அழுத்தமான குடும்பக்கதை களை இயக்கிய ராசு மதுரவன், கலகலப்பான காமெடியுடன் ‘மைக் செட் பாண்டி’யை இயக்கி முடித்துள்ளார். இதையடுத்து லாரன்ஸ் நடிக்கும் ஆக்ஷன் படத்தை இயக்குகிறார். குழந்தைகளைக் கவரும் வகையில், அறிவியல் சார்ந்த கதை ஒன்றையும் வைத்துள்ளார். வேற்று கிரகத்தில் வசிக்கும் வித்தியாசமான மனிதர்களைப் பற்றிய இக்கதையை இயக்குவதே தன் லட்சியம் என்கிறார்.
உதவி இயக்குநர்களுக்கு உரிய சம்பளம் வந்து சேர வேண்டும், தங்கள் எதிர்காலத்தைப் பற்றி எப்போதுமே அவர்கள் கவலைப்படக் கூடாது என்பதில், அதிக கவனம் செலுத்தி வருகிறார் மிஷ்கின். இதனால், தன் உதவியாளர்கள் சிலருக்கு வங்கியில் கணக்கு தொடங்கியுள்ளார். இதனால், அவர்களால் சினிமாவில் கவனம் செலுத்த முடியும் என்று நம்புகிறார்.
ரவிதேஜாவை வைத்து வெங்கட் பிரபு இயக்குவதாக சொல்லப்படும் படத்தில், டாப்ஸி நடிப்பதாக செய்தி வெளியானது. இதில் துளியும் உண்மையில்லை என்று சொல்லும் டாப்ஸி, ‘இதுகுறித்து என்னிடம் யாரும் பேசவில்லை. இப்படியொரு புராஜெக்ட் இருப்பதும் எனக்கு தெரியாது. அதற்காக ரவிதேஜாவுக்கு ஜோடியாகவோ அல்லது வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க மாட்டேன் என்றோ பொருளில்லை...’ என்கிறார்.
மு.களஞ்சியம் ஹீரோவாக நடித்து இயக்கிய ‘கருங்காலி’, தெலுங்கில் ‘மா ஆய்னா ஒஸ்தாரு’ பெயரில் டப்பிங் ஆகிறது. அஞ்சலியை தெலுங்கு ரசிகர்களுக்கு ஓரளவு தெரியும் என்பதால், அடுத்த மாதம் ஆந்திராவில் ரிலீஸ் செய்யப்படுகிறது. தமிழில் சொந்தக்குரலில் பேசிய அஞ்சலியே தெலுங்கிற்கும் பேசியிருக்கிறார். களஞ்சியத்துக்கு வேறொருவர் குரல் கொடுத்துள்ளார்.
ஒரு பல்பொருள் அங்காடியின் விளம்பரப் படத்தில் நடிக்க 2 நாட்கள் கால்ஷீட் கொடுத்திருந்தார், சமந்தா. கூட்டி கழித்துப் பார்த்தால், இரண்டு நாட்களும் சேர்ந்து சில மணிநேரங்கள் மட்டுமே நடித்திருப்பார். ஆனால், இதற்காக அவர் வாங்கிய தொகை கிட்டத்தட்ட 50 லட்சம் ரூபாய் என்கிறார்கள்.
- தேவராஜ்