பாரதிராஜாவின் லட்சியப் படைப்பான ‘அன்னக்கொடியும் கொடிவீரனும்’ படத்தில் அமீருடன் நடிக்கிறார்... இல்லை இல்லை அப்படத்திலிருந்து விலகி விட்டார்... என இரண்டு விதமான செய்திகளும் மாறி மாறி அடிபட ஆரம்பித்தவுடன், தமிழ் நாட்டின் இன்றைய விலைவாசியைப் போல இனியா குறித்த தகவல்களும் இறக்கை கட்டி பறக்க ஆரம்பித்து விட்டன. கேரளாவில் இருக்கும் வீட்டில், பி.பி.ஏ தேர்வுக்காக விழுந்து, விழுந்து படித்துக் கொண்டிருந்த இனியாவை செல்போனில் பிடித்தோம்.
ஸ்ருதிக்கு இனியாவைப் பிடிக்குமா?ரொம்பவே பிடிக்கும். ‘வாகை சூட வா’ படத்துக்காக, என் சொந்தப் பெயர் ஸ்ருதியை, இனியா என்று டைரக்டர் சற்குணம் மாற்றினார். இனிக்க, இனிக்கப் பேசுபவள் என்ற அர்த்தத்தில் வைத்தாரோ என்னவோ, ஸ்ருதிக்கு இந்தப் பெயர் ரொம்ப பிடித்து விட்டது.
‘மௌன குரு’ பேசப்படும் என்று எதிர்பார்த்தீர்களா?நான் எந்தப் படத்தில் நடித்தாலும் சரி... இந்தப் படம் ஹிட் ஆகும், ஆகாது என்று யோசித்துக் குழம்ப மாட்டேன். எனக்கு அளித்த கேரக்டரை முழுமையாக உள்வாங்கி நடிப்பேன். நூறு சதவீதம் என் உழைப்பைத் தருவேன். ‘மௌன குரு’வில் நடித்தபோது, இது ரொம்ப வித்தியாசமான படமாக அமையும் என்று யூனிட் நம்பியது. அதற்கு ரசிகர்கள் ஆதரவு கொடுத்தார்கள்.
நன்றாகப் பாடுகிறீர்களே... ஸாரி... பேசுகிறீர்களே! டப்பிங் தானா?‘வாகை சூட வா’வில் தஞ்சை வட்டாரத்தில் பேசுவதைப் போல பேச வேண்டும் என்றபோது, நடுக்கம் ஏற்பட்டது. உடனே சற்குணம், வேறொருவரை எனக்கு டப்பிங் பேச வைத்தார். ‘மௌன குரு’வில் சராசரிப் பெண் வேடம். எனவே, நான் சொந்தக்குரலில் பேசினால் நன்றாக இருக்கும் என்று டைரக்டர் சாந்தகுமார் சொன்னார். உடனே பேசினேன்.
பாரதிராஜா பட வாய்ப்பு பற்றி?தமிழ்த் திரையுலகில் பல சாதனைகள் படைத்த அவரது படத்தில் நடிப்பது, பல விருதுகள் வாங்கியதற்குச் சமம். ‘வாகை சூட வா’ ஆடியோ விழாவில் ‘கண்களாலேயே நடிக்கிறே. இந்தமாதிரி பெண்ணை தமிழ் சினிமாவுல பார்த்து ரொம்ப நாளாச்சு. உன்னை பார்க்கிறப்ப, ஆரம்பகால ராதிகாவை பார்த்த மாதிரி இருந்தது’ என்று அவர் பாராட்டினார். வெள்ளை உடையணிந்து, ஒரு தேவதை வானத்தில் றெக்கை கட்டிப் பறப்பது போலிருந்தது. பிறகு அவரது ஆபீசிலிருந்து அழைப்பு வந்தது. போய்ப் பார்த்தேன். ‘அன்னக்கொடியும் கொடிவீரனும்’ படத்தில் நடிக்க ஒப்பந்தமானேன்.
அந்தப் படத்தில் நீங்கள் இல்லை என்று...கேள்விப்பட்டீர்கள்தானே? உண்மையில் அந்தமாதிரி எந்த விஷயமும் நடக்கவில்லை. அந்தப் படத்தில் நான் நடிக்கிறேன். இதற்காக, எந்த மொழியிலும் புதுப்படம் ஒப்புக்கொள்ளவில்லை.
திருமணம்?இப்போது திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை.
- தேவராஜ்.