சினிமா விளம்பரங்கள் குறித்த சுருக்கமான வரலாறு
சினிமாவும், விளம்பரமும் கணவன் மனைவி மாதிரி ஒன்றையொன்று சார்ந்தே இருக்க வேண்டும். சினிமா பேசத் தொடங்கிய காலத்திலேயே விளம்பரமும் சினிமா குறித்து உரையாடத் தொடங்கி விட்டது. சினிமாவுக்கான முதல் விளம்பரத்தை பத்திரிகைகள்தான் ஆரம்பித்து வைத்தன.
தினசரி பத்திரிகையிலும், சில வார, மாத இதழ்களிலும் சினிமா விளம்பரங்கள் வெளிவந்தன. கருப்பு வெள்ளையில் கோட்டோவியங்களை கொண்டே இந்த விளம்பரங்கள் அமைந்தன. இதனை வரைந்து கொடுப்பதற்காகவே தனி ஓவியர்கள் இருந்தார்கள். அதன் பின்னர்தான் கருப்பு வெள்ளையில் படத்துடன் விளம்பரங்கள் வெளிவந்தன.
ஆனால், பத்திரிகை படிக்காத மக்களே சினிமாவை அதிகம் பார்ப்பவர்களாக இருந்தார்கள். இதற்காக கிராமப்புறங்கள் மற்றும் சிறு நகரங்களில் தண்டோரோ போடுபவர்கள் பயன்படுத்தப்பட்டனர். ‘மகா ஜனங்களே... உங்களுக்கு ஓர் நற்செய்தி... நம்ம பாகவதர் அபிநயம் பண்ணியிருக்குற படம், நம்ம ஊர் மீனாட்சி டெண்டு கொட்டகையில காட்டுறாங்க... நாற்பது பாட்டு இருக்கு, அத்தனையும் தேனா இனிக்கும், சாயங்காலம் 6 மணிக்கு ஆட்டம் தொடங்கும், டிக்கெட் கட்டணம் காலணா. மறக்காம வந்துடுங்கோ...’ என்று சொல்லி படத்தில் வரும் ஒரு பாட்டை பாடிக்கொண்டே போவார்.
தண்டோரா முறைக்கு பிறகு தள்ளுவண்டி வந்தது. ஒரு மாட்டு வண்டியில் இருபுறமும் பெரிய அளவு சுவரொட்டிகளை ஒரு தட்டியில் ஒட்டி, அதை கூம்பு வடிவில் அமைத்து, மேளம் அடித்துக் கொண்டே செல்வார்கள், பிட் நோட்டீஸ் வழங்குவார்கள். கொஞ்சம் பெரிய படமாகவோ, புதிய படமாகவோ இருந்தால் காரில் மைக்செட் கட்டி முழங்கிச் செல்வார்கள். இதற்காக ஒவ்வொரு திரையரங்கும் சொந்தமாக விளம்பர காரும், மாட்டு வண்டியும், தள்ளுவண்டியும் வைத்திருந்தன. சண்டைக் காட்சிகள் நிறைந்த படம், முத்தக் காட்சிகள் நிறைந்த படம், மாயாஜால மந்திர தந்திர காட்சிகள் நிறைந்த படம், வாள் சண்டை கத்தி சண்டை நிறைந்த படம், முழுநீள வண்ணப்படம்... என்று தங்கள் பங்கிற்கு சிறிய சுவரொட்டிகளை அச்சடித்து ஒட்டுவார்கள். தங்களுக்கு பிடித்த நடிகரின் படம் வரும்போது படப்பெட்டி யை சாமி ஊர்வலம் மாதிரி தியேட்டரில் கொண்டு சேர்த்த கதையும் உண்டு.
நகர்புறங்களில் தொலைக்காட்சி வரும்வரை பத்திரிகை விளம்பரங்களே பிரதானமாக இருந்தன. கால மாற்றத்திற்கு ஏற்பவும், தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்பவும் அது மாறிக்கொண்டே இருந்தது. திரைப்படத்துக்கென்று தனி இதழ்கள் வெளிவந்ததும் அதன் முக்கியத்துவம் இன்னும் உயர்ந்தது. சினிமா விளம்பரங்களை வெளியிட மாட்டோம் என்று வைராக்கியமாக இருந்த பத்திரிகைகள்கூட இறங்கி வந்தது காலத்தின் கட்டாயம்.
பத்திரிகை தவிர்த்து சுவர் விளம்பரம், சுவரொட்டி விளம்பரம் வழியாகவும் விளம்பரம் செய்தனர். சுவர் விளம்பரங்களை வரைவதற்கென்றே தனி தொழில்முறை ஓவியர்கள் இருந்தார்கள். சுவரொட்டிகள் சிவகாசி, மற்றும் சென்னையில் அச்சடிக்கப்பட்டு நாடு முழுவதும் விநியோகிக்கப்பட்டன.
பெரு நகரங்களில் கட்-அவுட் கலாசாரம் உதயமானது. சிறிய அளவில் இருந்த இதை பெரிதாக்கியவர் கலைப்புலி எஸ்.தாணு. ரஜினி நடித்த ‘பைரவி’ படத்துக்கு சூப்பர் ஸ்டார் என்று அவருக்கு அடைமொழி கொடுத்து 30 அடி உயரத்துக்கு கட்-அவுட் வைத்து மிரட்டினார். இதே கட்-அவுட்கள் 100 அடி உயரம் வரை வளர்ந்து நின்றது. ரசிகர்கள் அதற்கு பாலாபிஷேகம் செய்து மகிழ்ந்தார்கள். அரசாங்கம் கட்- அவுட்களுக்கு தடை விதித்ததும், அவை தியேட்டருக்குள் முடங்கிப்போனது.
ப்ளக்ஸ் போர்டுகளின் அசுர வளர்ச்சியால் சுவரொட்டிகளும், சுவர் விளம்பரங்களும் சுருங்கிப்போயின. ஓவியர்கள் வேலை இழந்தார்கள். பெருநகரங்களின் முக்கிய வீதிகளில் குறிப்பாக சென்னை அண்ணா சாலையில் புதுமுக நடிகர்கள்கூட ராட்சத உயரத்துக்கு சிரித்துக் கொண்டும், முறைத்துக் கொண்டும் இருந்தார்கள். அதற்கும் ஒருநாள் நீதி மன்றம் ஆப்பு அடிக்க இப்போது மீண்டும் சுவரொட்டிகளின் காலம். ஆனால், கண்ட இடத்தில் ஒட்ட முடியாது என்பதால் கிடைக்கிற இடத்தில் ஒட்டுகிறார்கள். ஒரு சுவரொட்டியின் ஆயுள் அதிக பட்சம் இரண்டு நாட்கள்தான். அதற்குள் அடுத்தது ஒட்டப்பட்டுவிடும்.
தொலைக்காட்சியின் வருகைக்குப் பிறகு திரைப்படங்கள் பெரிதும் நம்பி இருப்பது தொலைக்காட்சி விளம்பரங்களைத்தான். பத்திரிகை விளம்பரங்கள் படம் பற்றிய தகவலை மட்டுமே வழங்கும். ஆனால், தொலைக்காட்சி விளம்பரங்கள் ருசிக்கு சாம்பிள் வழங்கும் என்பதால் படம் வெளிவந்த முதல் வாரம், அல்லது முதல் பத்து நாட்களுக்கு தொலைக்காட்சி களையே சினிமா நம்பி இருக்கிறது.
இணையத்தில் ப்ளாக், டுவிட்டர், ஃபேஸ்புக் என்ற தளங்களும், செல்ஃபோன் எஸ்.எம்.எஸ் என்றும் விளம்பரங்களின் வீச்சு இப்போது விரிவடைந்திருக்கிறது.
சுருக்கமாக சொல்வதென்றால், விளம்பரத்தால் மட்டுமே வெற்றி பெற்ற மோசமான படங்களும் உண்டு. நல்ல படமாக இருந்தும் போதிய விளம்பரம் இல்லாமல் வீழ்ந்த படங்களும் உண்டு. மொத்தத்தில், விளம்பரம் இல்லாமல் சினிமா இல்லை.
- மீரான்
படங்கள்: வேணு