ஒருவரை முதல்முறை பார்த்தவுடனே, அவரது எல்லா செயல்களையும் மனதில் பதிய வைத்துக்கொள்வார் பாவனா. பிறகு அவர் இல்லாத இடத்தில், அவரைப்போலவே ‘மிமிக்ரி’ மற்றும் ‘மோனோ ஆக்டிங்’ செய்து அசத்துவார்.
பாவனாவின் அப்பா ஒளிப்பதிவாளர் கம் போட்டோகிராபர். இதனால், போட்டோகிராபியில் அதிக ஆர்வமுள்ள பாவனா, இயற்கைக் காட்சிகளை பிரமாதமாகப் படமெடுப்பார். இப்போது ஆடை வடிவமைப்பு குறித்து படிக்கும் இவர், திருமணத்துக்குப் பிறகு புதியப் புதிய பேஷனை அறிமுகப்படுத்தி கலக்கப் போகிறாராம்.
நடிப்பு தவிர, ஓவியங்கள் வரைவதில் எக்ஸ்பர்ட். சின்ன வயதிலிருந்து, தான் வரைந்த ஓவியங்களை பீரோவில் பத்திரமாக பாதுகாத்து வருகிறார். இப்போதைக்கு அந்த ஓவியங்களை வைத்து கண்காட்சி நடத்தும் எண்ணம் இல்லை என்கிறார்.
மலையாளத்தில் சிறுகதை எழுதுவதை விட, கவிதைகள் எழுதுவது பாவனாவுக்கு கைவந்த கலை. கார்த்திகா என்ற ஒரிஜினல் பெயரில், அவரது புதுக்கவிதைகள் மலையாளப் பத்திரிகைகளில் பிரசுரமாகியுள்ளன. நிறைய பொன்மொழிகளை, ஸாரி, அனுபவ மொழிகளையும் சொந்தமாக எழுதி வைத்துள்ளார்.
தமிழில் ஓரிரு படத்துக்கு டப்பிங் பேசிய பாவனா, மலையாளத்தில் எல்லா படங்களுக்கும் சொந்தக் குரலில் பேசுகிறார். தவிர, இனிமையான குரல்வளம் கொண்டவர். நெருங்கிய நட்பு வட்டத்தில் மட்டுமே பாடுவார். இப்போது வயலின் கற்று வருகிறார்.
- தேவராஜ்