கன்னி மாடம் சூப்பர் குட் சுப்ரமணிடைட்டில்ஸ் டாக்-157

கன்னி மாடம் என்பது கன்னியரின் கோட்டை. அது போல் சினிமாவில் சாதனைப் படைக்க நினைப்பவர்களின் கோட்டையாக கோலிவுட் திகழ்கிறது. சமீபத்தில் வெளிவந்த ‘கன்னிமாடம்’ படத்தில் சினிமாவில் நடிக்க சான்ஸ் கேட்கும் ‘ஸ்கொயர் ஸ்டார்’ கேரக்டரில் நடித்தேன். அந்தக் கேரக்டருக்கும் என் நிஜ வாழ்க்கைக்கும் அதிக வேறுபாடியில்லை. இயக்குநராக வேண்டும் என்ற கனவுடன்தான் சென்னைக்கு வந்தேன்.

எனக்கு சொந்த ஊர் தஞ்சாவூர் பக்கமுள்ள அய்யம்பேட்டை. தஞ்சாவூர் சரபோஜி கல்லூரியில் டிகிரி முடித்தேன். கல்லூரி சமயத்தில் கதை எழுதுவதில் ஆர்வம் அதிகம். எங்கள் ஊரில் அம்பிகாபதி என்ற தமிழாசிரியர்  ஒருவர் இருந்தார். அவரிடம் சினிமாவுக்கு கதை எழுத வேண்டும் என்று என்னுடைய விருப்பத்தை சொன்னேன். அவர் சாருஹாசன் சாருக்கு சிபாரிசு கடிதம் கொடுத்தார்.

டைரக்‌ஷன் பண்ண வேண்டும் என்ற கனவுடன் சென்னைக்கு வந்தேன். வரும்போது ‘காது குத்தியாச்சி’, ‘மீசையன்’ என்று பல கதைகளுடன்
வந்தேன். சென்னையில் சாருஹாசன் சாரை சந்தித்தபோது என்னிடம் இருந்த ‘புதிய உலகம்’ என்ற கதையை சொன்னேன். ஒரு
கிராமத்தை நாயகன் எப்படி நகரமாக மாற்றுவதற்கு போராடுகிறார் என்பது அந்த கதையோட அவுட்லைன். சாருஹாசன் சாருக்கு கதை பிடித்திருந்தது. ஆனால் அவரிடம் உதவியாளராக சேர முடியாத சூழ்நிலை இருந்தது.

அப்போது சாருஹாசன் சார் ‘புதிய சங்கமம்’ என்ற படத்தை இயக்கியிருந்தார். அந்தப் படம் பெரிய வரவேற்பு பெறவில்லை. அதனால் சில இயக்குநர்களுக்கு சிபாரிசு கடிதம் கொடுத்தார். அந்த சமயத்தில் எங்கள் ஊர்க்காரர் துரைராஜ் என்ற கதாசிரியரின் தொடர்பு கிடைத்தது. அவர் ‘தாயா தாரமா’, ‘சொந்தம் 16’ போன்ற படங்களுக்கு கதை எழுதியவர். அவரிடம் உதவி இயக்குநராக வேலைக்கு சேர்ந்தேன்.

ஒரு கட்டத்தில் சூப்பர் குட் பிலிம்ஸ் செளத்ரி சாரிடம் ஒரு கதை சொன்னேன். அது பெரிய பட்ஜெட் படம். செளத்ரி சார், ‘இரு மொழிகளில் எடுக்கலாம் அதுவரை சூப்பர் குட் படங்களில் வேலை செய்’ என்றார். அப்படி ‘சேரன் பாண்டியன்’, ‘நாட்டாமை’, செங்கோட்டை’, கேப்டன்’, ‘அபிராமி’போன்ற படங்களில் வேலை செய்தேன். இதன் மூலம் செளத்ரி சார் சினிமா பயிற்சி எடுக்கவும், ஹீரோக்களை சந்தித்து கதை சொல்லும் வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுத்தார்.

‘சிட்டிசன்’ படத்தில் துணை இயக்குநராக வேலை பார்த்தபோது அஜித் சாருக்கு கதை சொல்லியிருக்கிறேன். செளத்ரி சாரிடம் ஆம்புலன்ஸை மையமாக வைத்து ஒரு கதை சொல்லியிருந்தேன். அந்த கதை அப்போது முன்னணியில் இருந்த அனைத்து ஹீரோக்களிடமும் சொல்லினேன். அந்த கதையை தெரியாத சினிமாக்காரர்கள் கிடையாது. செளத்ரி சார் தயாரித்த படங்களுக்கு நிறைய டைட்டில் சொல்லியிருக்கிறேன். ‘சேரன் பாண்டியன்’ டைட்டிலை சொன்னதும் நான்தான். அதனாலேயே என்னை ‘டைட்டில் மன்னன்’ என்று சொல்வார்.

ஒருமுறை செளத்ரி சார் தயாரிப்பில் டாக்டர் ராஜசேகரை வைத்து நான் இயக்குவதாக ஒரு படம் முடிவானது. ஆனால் அந்தப் படம் சில காரணங்களால் நடக்கவில்லை. அதனால் ராஜசேகர் இதே கதையை தெலுங்கில் எடுக்கலாம் என்று என்னை தெலுங்கு சினிமாவுக்கு அழைத்துச் சென்றார். அங்கும் எதுவும் நடக்கவில்லை.

அதன் பின்பு மீண்டும் சென்னைக்கு வந்தேன். ‘கர்த்தா’ என்ற படத்தை பார்த்திபன் சார் வைத்து எடுத்தேன். அந்தப் படமும் நிதி பிரச்னையில் நின்றுவிட்டது. புது இயக்குநரின் படம் வெளியாகி சரியாக ஓடவில்லை என்றால் அடுத்து வரும் புது இயக்குநரின் படத்தை வெயிட்டிங் மோடில் வைத்துவிடுவார்கள். அப்படி பல இடங்களில் நான் வெயிட்டிங் மோடில் இருந்துள்ளேன்.

கலைஞர் முதல்வராக இருக்கும்போது ‘பெண் சிங்கம்’ படத்தில் அவருடன் வேலை செய்யும் வாய்ப்பு கிடைத்தது. அந்தப் பட டிஸ்கஷனுக்காக இருபது, முப்பது முறையாவது கலைஞர் ஐயாவை சந்தித்திருப்பேன். சில சமயங்களில் நான் சொல்லும் ஐடியாவை நல்லா இருக்கு என்று ஏற்றுக் கொள்வார். அப்போது உடனிருக்கும் சில அமைச்சர்கள் ஐயாவுக்கு எப்படி ஆலோசனை சொல்லலாம் என்பதுபோல் பேச வருவார்கள். அப்போது கலைஞர் ஐயா குறுக்கிட்டு, கதை விவாதம் என்றால் அப்படிதான் இருக்கும்’ என்று சொல்லி என்னை சுதந்திரமாக வேலை செய்ய ஊக்கப்படுத்தினார். கலைஞர் முதல்வர்  பொறுப்பில் இருந்தாலும் ஒரு சக சினிமா கலைஞர் போன்று என்னிடம் பழகியது மறக்க முடியாதது.

ஒரு நாள் டிஸ்கஷனில் இருந்தபோது ‘சுப்பு நீங்க எந்த ஊர்’ என்று கேட்டார். நானும் அய்யம்பேட்டை ஆர்.எஸ்.முத்துவின் ஊர்க்காரர் என்று சொன்னேன். ஆர்.எஸ்.முத்து கழக பதவியில் இருந்தவர். ஆர்.எஸ்.முத்து என்ற பெயரை நான் சொன்னதும் ‘அவர் ஒரு விபத்தில் இறந்துவிட்டாரே’ என்று அவரைப் பற்றிய புள்ளி விவரங்களை சொல்ல ஆரம்பித்தார். எனக்கு அது  வியப்பாக இருந்தது. ஏனெனில், ஆர்.எஸ்.முத்து இறந்து முப்பது வருடங்களாவது கடந்திருக்கும். பல வருடங்கள் கடந்தும்  ஒரு குக்கிராமத்தில் உள்ள ஒரு உடன்பிறப்பை மறவாமல் ஞாபகம் வைத்திருக்கிறாரே என்று ஆச்சர்யப்பட்டேன்.

கலைஞர் ஐயாவிடம் நான் வியந்த விஷயம் என்றால் அவருடைய ஞாபகசக்தி. அவரிடம் ஞாபக சக்தி அதிகமாக இருக்கக் காரணம் கைப்பட எழுதும் பழக்கம். அப்படி எழுதும்போது மறதிக்கு வாய்ப்பு இல்லை என்று தெரிந்துகொண்டேன்.

சினிமாவில் நான் எப்போதோ இயக்குநராக அறிமுகமாகியிருக்க வேண்டும். நான் செய்த தவறு சின்ன பட்ஜெட்டில் ஸ்டோரி பண்ணியிருக்க வேண்டும். அதை செய்ய தவறிவிட்டேன். நான் போனதெல்லாம் பெரிய கம்பெனி, பெரிய கதை, பெரிய ஹீரோ, பெரிய பிரச்னைகள் என்று எல்லாமே பெரிய விஷயங்களாக இருந்தது. அதனால் பின்னடைவும் பெரியளவில் இருந்தது. சினிமாவில் என்னை வீழ்த்தியவர்கள் இருக்கிறார்கள்.நேரம் வரும்போது அதைச் சொல்வேன்.

ஏனெனில், என்னுடைய கண் எதிரே என்னுடைய கதைகள் படமாகியுள்ளது. அதை நான் இதுவரை சொல்லவில்லை. நான் டைரக்‌ஷன் பண்ண ஆரம்பித்திருந்தால் கே.எஸ்.ரவிக்குமார், ஹரி மாதிரி ஒரு கமர்ஷியல் இயக்குநராக வந்திருப்பேன். இயக்குநர்கள் சங்கத்தில் என் அடையாள அட்டை எண் 294. சினிமாவில் என்னுடைய அனுபவம் அதிகம். சிரஞ்சீவி சார் வரை கதை சொல்லியிருக்கிறேன். எம்.ஜி.ஆர்., சிவாஜி ஆகிய இரு ஜாம்பவான்களுக்கு மட்டும்தான் கதை சொல்லவில்லை. எனக்கென்று குடும்பம் உருவான பிறகு டைரக்‌ஷன் மீதுள்ள ஃபோகஸ் சற்று குறைந்தது.

சினிமாக்காரர்கள் என்னை கைவிட்டாலும் சினிமா என்னை கைவிடவில்லை. ‘முண்டாசுப்பட்டி’ படத்தில் இயக்குநர் ராம்குமார் அருமையான வாய்ப்பு கொடுத்தார். முண்டாசுப்பட்டி சாமியார் கேரக்டர் எனக்கு பட்டித்தொட்டி வரை புகழ் கொடுத்தது. மிஷ்கின் சார் ‘பிசாசு’ படத்தில் ஆட்டோ டிரைவர் கொடுத்தார். ‘ரஜினி முருகன்’ படத்தில் சிவகார்த்திகேயனுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து சிவகார்த்திகேயன் படங்களில் நடித்துவருகிறேன்.

விஜய்சேதுபதியின் ‘றெக்க’ படத்தில் நடித்துள்ளேன். ‘பரியேறும் பெருமாள்’, காலா’ என்று பா.ரஞ்சித் இரண்டு படங்களில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார். பா.ரஞ்சித் மனித நேயம் உள்ளவர். அவருடைய திறமையும் மனசும் தான் இளம் வயதில் இரண்டு ரஜினி படங்கள் பண்ண
காரணம்.

‘காலா’வில் ரஜினி சாரிடம் கற்றது ‘நேர நிர்வாகம்’. காலையில் ஏழு மணிக்கு செட்ல இருப்பார். தன்னுடைய போர்ஷன் முடிந்தாலும் கேரவனுக்குள் செல்லமாட்டார். இயக்குநர் எடுக்கும் காட்சிகள், டான்ஸ் ரிகர்சல் என்று படப்பிடிப்பு நிகழ்வுகளை கவனித்துக்கொண்டிருப்பார். மாஸ்டர், ‘சார் ரிகர்சல்’ போலாமா என்று கேட்டால் ‘அதான் பாத்துட்டேனே... டேக் போலாம்’ என்று சொல்வார்.

ஒரு நாள் ரஜினி சார் என்னை அழைத்து ‘முண்டாசுபட்டி’ படம் பார்த்தேன். நல்லா பண்ணியிருந்தீர்கள். செக்யூரிட்டியாக ஒரு படத்தில் நடிச்சிருந்தீங்க. அதிலும் உங்கள் நடிப்பு நல்லா இருந்தது’ என்றார். அவர் சொன்ன படம் லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘மாநகரம்’. சின்ன நடிகர்களுக்கும் மதிப்பளித்து பாராட்டும் குணம் ரஜினி சாரிடம் உண்டு என்பதற்காக இந்த விஷயத்தை சொல்கிறேன். ரஜினி சார் வேலையில் சின்சியராக இருப்பார். அதனால்தான் அவர் சூப்பர் ஸ்டார்.

‘கன்னிமாடம்’ எதிர்பார்க்காத வாய்ப்பு. அதில் போஸ் வெங்கட் ‘ஸ்கொயர் ஸ்டார்’ என்ற கேரக்டர் கொடுத்தார். போஸ் வெங்கட் சாரிடம் அதிகம் பழகியதில்லை. ஆனால் எனக்கு நல்ல கேரக்டர் கொடுத்ததோடு என்னை மதித்து முழு கதையையும் சொன்னார். அவர் கதை சொல்லும்போதே அழ ஆரம்பித்துவிட்டேன்.

அந்தப் படத்தில் ஸ்கொயர் ஸ்டார் நானும் ஒரு நாள் ரஜினி, கமல் மாதிரி பெரிய ஸ்டாராக வருவேன்’ என்று டயலாக் பேசுவார். அப்படித்தான் நானும் ஊரிலிருந்து வரும்போது பெரும் கனவுகளுடன் வந்தேன். வாழ்க்கையில் பல இடங்களில் அடிபட்டவன். அந்த வகையில் ‘ஸ்கொயர் ஸ்டார்’ கேரக்டர் என் மனதுக்கு நெருக்கமாக இருந்தது. அதனால் உணர்வுபூர்வமாக நடித்தேன். ‘ஸ்கொயர் ஸ்டார்’ சுப்ரமணி என்று அழைக்கும் ஆளவுக்கு புகழ் கொடுத்தது.

டைரக்‌ஷன் கனவு இப்போதும் உண்டு. அதே பழைய முகத்துடன் செல்லாமல் எனக்கென்று ஒரு புதிய முகத்தை உருவாக்கிக் கொண்டு டைரக்‌ஷன் பண்ணுவேன். சினிமாவில் டிரெண்ட் மாறிவிட்டது என்கிறார்கள். அப்படி அல்ல. ட்ரீட்மென்ட்தான் மாறியுள்ளது. சினிமாவில் கதை சொல்லும்விதம் முக்கியம். இளைஞர்கள் நிறையபேர் வருகிறார்கள். தொழில்நுட்பத்தை நம்பி வரவேண்டாம். அப்போது முறையான பயிற்சி இருந்தது. சினிமாவுக்கு வருகிறவர்கள் பயிற்சியுடன் வந்தால் நிற்க முடியும்.

தொழில்நுட்பத்துக்கும், ட்ரீட்மென்ட்டுக்கும் என்ன வித்தியாசம் என்றால் சமீபத்தில் சந்திராயன் விண்கலத்திலிருந்து ரோபோ ஃபெயிலரானது. அதைப்பற்றியும் மக்கள் மறந்துவிட்டார்கள். அது தொழில்நுட்பம். லேண்டர் உள்ளே ரோபோ பதிவுக்கு ஒரு மனிதன் இருந்தால் நெஞ்சம் பதைபதைக்கும்.

அந்தக் காட்சியை பார்க்கும் கிராமவாசி கூட மனம் பதறுவான். அது ட்ரீட். அப்படி வெளிவந்த படம்தான் ‘டைட்டானிக்’. ஹீரோவுக்கு லைஃப் ஜாக்கெட் கிடைக்குமா என்று ரசிகர்கள் பதைபதைத்தார்கள். அதுதான் ட்ரீட்மென்ட். சினிமாவில் யாரும் உதவி செய்யமாட்டார்கள். கோலிவுட் என்ற கன்னிமாடத்துக்கு விஷயத்துடன் வாருங்கள். அது உங்களை காப்பாற்றும்.

- சுரேஷ்ராஜா

(தொடரும்)