பொல்லாத உலகில் பயங்கர கேம் ஆடும் அனித்ரா!வண்ண தாவணியில் வசீகரிக்கிறார் அனித்ரா நாயர். ‘தாதா 87’ என்ற வெற்றிப் படத்தை இயக்கிய விஜய்ஸ்ரீ  ஜி இயக்கும் ‘பொல்லாத உலகில் பயங்கர கேம்’ படத்தின் நாயகி. தாய்மொழி மலையாளமாக இருந்தாலும் முத்துப்பல் முப்பத்திரண்டும் வெளிப்பட தித்திக்கும் செந்தமிழில் பேச ஆரம்பித்தார்.
“உங்க கேரியர் எப்படி ஸ்டார்ட் ஆனது?”

“சொந்த ஊர் கொல்லம். இப்போது குடும்பத்துடன் கொச்சியில் செட்டிலாகிவிட்டோம். அப்பா ராஜீவ். ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி. அம்மா சந்திரமதி. இல்லத்தரசி. தங்கை அஞ்சலி. படிச்சது எம்.ஏ.ஆங்கிலம்.பொண்ணுங்கன்னா கண்ணாடி  முன்னாடி நின்னு  அவங்க அழகை ரசிப்பதுண்டு. அந்த மாதிரி என் முகத்தை கண்ணாடி முன்னாடி நின்னு அழகை ரசித்தபோது ஏன் சினிமாவில் நடிக்கக்கூடாது என்று எனக்குள் தோன்றியது.

அப்படி எனக்குள் திடீர்னு வந்ததுதான் சினிமா ஆசை. வீட்டில் நான் அரசு வேலைக்கு செல்ல வேண்டும் என்று விரும்பினார்கள். எனக்கு சினிமாவில் நடிக்கணும். ஒருவழியாக என்னுடைய ஆசைக்கு குடும்பத்தினர் குறுக்கே நிற்கவில்லை.என்னுடைய சினிமா கேரியர் மலையாளத்தில்தான் ஸ்டார்ட் ஆனது. அந்தப் படம் விரைவில் வெளிவரவுள்ளது. தமிழில் விஜய் ஜி இயக்கும் ‘பொல்லாத உலகில் பயங்கர கேம்’ (பப்ஜி) என்னுடைய முதல் படம்.”

“இவ்வளவு நல்லா தமிழ் பேசுறீங்க. யாரிடம் தமிழ் கத்துக்கிட்டீங்க?”

“கேரளாவில் இருப்பவர்களுக்கு பெரும்பாலும் தமிழ் பரிச்சயமான மொழி. எங்கள் ஊரில் தமிழ் சேனல் பார்க்கும் ரசிகர்கள்தான் அதிகம். ஆரம்பத்தில் தமிழில் பேசும் போது அதன் அர்த்தம் புரியாமல் பதிலளிக்க கஷ்டமாக இருக்கும். கொஞ்ச நாளைக்கு பிறகு தமிழ் பழகிவிட்டது.”

“நீங்க நடிக்கிற ‘பப்ஜி’யில் ஏகப்பட்ட ஹீரோயின்ஸ் இருக்கிறார்களே?”

“கதை அப்படி. தமிழில் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் ஆசை. ஆடிஷன்  மூலம் தான் இந்தப் பட வாய்ப்பு கிடைத்தது. படத்துல எனக்கு என்ன கேரக்டர்னு இப்போதே சொல்ல முடியாது. ஆனால் துணிச்சலான வேடம் பண்ணியிருக்கிறேன். படத்துல எனக்கான ஸ்பேஸ் நிறைய இருக்கும். படத்தில் என்னுடன் சேர்ந்து மொத்தம் ஐந்து நாயகிகள்.

ஆனாலும் என்னுடைய கேரக்டர் படம் முழுக்க வருமளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். எனக்கு மட்டுமில்ல,இந்தப் படத்தில் சின்ன சின்ன கேரக்டரில் நடிப்பவர்களுக்கும் முக்கியத்துவம் இருக்கும். இயக்குநர் விஜய் சார் அந்தளவுக்கு படத்தில் நடிக்கும் அனைத்து கேரக்டருக்கும் முக்கியத்துவம் கொடுத்திருப்பார்.”

“சினிமாவில் உங்களுக்கு இன்ஸ்பிரேஷன் யார்?”

“ரேவதி, ஊர்வசி, ஷோபனா ஆகியோரை பிடிக்கும். அவர்களுடைய நடிப்பு நேச்சுரலா இருக்கும். நடிப்பு மாதிரி தெரியாது. எந்த ரோல் கொடுத்தாலும் மிக நேர்த்தியாக பண்ணக்கூடியவர்கள். எனக்கு கொஞ்சம் பரதம் தெரியும் என்பதால் ஷோபனா மேடம் கொஞ்சம் ஸ்பெஷல்.”
“உங்கள் பதிலில் கிளாமர் ரோல் பண்ணுவதில் உடன்பாடு கிடையாது மாதிரி தெரிகிறதே?”

“யெஸ். எனக்கு கிளாமர் ரோல் பண்ண பெரிதாக ஆர்வமில்லை. ஃபேமிலி ஓரியண்ட்டட்டாக நடிக்கதான் பிடிக்கும். ரசிகர்கள் என்னை எப்படி பார்க்க வேண்டும் என்று மனதில் ஸ்கெட்ச் போட்டு வைத்திருக்கிறேன். அதன்படிதான் நடிப்பேன். இதுவரை அந்த பாலிஸிபடிதான் நடித்து வருகிறேன். இனிமேல் எப்படி என்று தெரியவில்லை. தற்போது என்னை ரசிகர்கள் ஹோம்லி நடிகையாக பார்க்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை.”

“இயக்குநர் விஜய்ஜி?”

“சாரிடம் அர்ப்பணிப்பு அதிகம் இருக்கும். அவர் எது செய்தாலும் நடிகர், நடிகைகளின் நன்மைக்காக மட்டுமே இருக்கும். சின்ன சின்ன விஷயங்களையும் நுட்பமாக சொல்லிக்கொடுப்பார். அவருக்கு என்ன வேண்டுமோ அதை நடித்துக்காட்டுவார். சில சமயம் மாடுலேஷனுடன் டயலாக் பேசி காண்பிப்பார். அப்படி... சொன்னபடி ஆர்டிஸ்ட் செய்யவில்லை என்றால் அது கிடைக்கும்வரை ‘டேக்’ போய் கொண்டே இருக்கும். நாயகன், நாயகிக்குதான் இந்த முக்கியத்துவம் என்றில்லை. ஒவ்வொரு ஆர்டிஸ்ட்டுக்கும் இவ்வித முக்கியத்துவம் கொடுப்பார்.”

“படப்பிடிப்பில் மறக்க முடியாத அனுபவம்?”

“எனக்கு மொட்டை ராஜேந்திரன் சார் காமெடி பிடிக்கும். படப்பிடிப்பில் முதன் முறையாக அவரை சந்தித்தது மறக்க முடியாதது. அவருடைய காமெடியை திரைப்படங்களில் பார்த்து ரசித்துள்ளேன். சமயோசிதமாக அவர் அடிக்கும் காமெடி ஒட்டு மொத்த டீமையும் சிரிக்க வைத்துவிடும். படத்தில் இன்னும் சில சுவாரஸ்யங்கள் இருக்கிறது. அதை சொல்லிவிட்டால் படம் பார்க்கும்போது ‘பெப்’ இல்லாமல் போய்விடும்.”

“நிஜத்தில் உங்கள் கேரக்டர் எப்படி?”

“நான் கொஞ்சம் சாஃப்ட் நேச்சர். ஆனால் ஜாலி டைப். அதுக்காக ஓவராக அரட்டையடிப்பேன் என்று நினைக்க வேண்டாம். நாம் உண்டு என் வேலை உண்டு என்று இருப்பேன். தேவையில்லாத விஷயங்களில் மூக்கை நுழைக்கமாட்டேன்.”

“உங்களின் முதல் கிரஷ் யார்?”

“அதை காதல், கிரஷ் என்று சொல்ல மாட்டேன். பள்ளியில் படிக்கும்போது பருவ வயதுக்குரியவர்களிடம் தோன்றும் இனக்கவர்ச்சி எனக்கும் இருந்தது. அது காதல் கிடையாது. ஒண்ணு, ரெண்டு பசங்க எனக்கு லவ் லெட்டர்ஸ் கொடுத்திருக்கிறார்கள். நான் சோஷியல் மீடியாவில் அதிகம் ஆர்வம் காட்டமாட்டேன். அதனால் ‘லைக் பண்ணுங்க’, ‘ஃப்ரெண்ட் ரெக்வஸ்ட்  கொடுங்க’ போன்ற அன்பு தொல்லைகளிலிருந்து நிம்மதியாக இருக்க முடிந்தது.”

“அனித்ராவுக்கு சினிமா தவிர வேறு என்ன தெரியும்?”

“பேப்பர் கிராஃப்ட், கிளாஸ் பெயிண்டிங் போன்ற கலைகளில் ஆர்வம் அதிகம். வீட்ல இருக்கும் போது மூவீஸ் பார்ப்பேன். சமையல் தெரியும். ஆனால் நான் செய்தால் யாரும் சாப்பிடமாட்டார்கள்.”“நிர்பயா குற்றவாளிகளுக்கு மரண தண்டனை, பெண் சுதந் திரம் பற்றி...?”

“நிர்பயா குற்றவாளிகளுக்கு கொடுத்த தூக்குத் தண்டனையை வரவேற்கிறேன். இது எப்போதோ அளித்திருக்க வேண்டிய தண்டனை. சற்று காலதாமதமாகிவிட்டது. இந்த தூக்குத் தண்டனை பெண்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்துவது போல் இருக்கிறது. சட்டம் தன் கடமையை செய்துள்ளது. இந்த தீர்ப்பு பெண்கள் இரவு நேரத்தில்  தனியாக பயணம் செய்ய முடியும் என்ற புதிய நம்பிக்கையை கொடுத்திருக்கிறது. ‘பப்ஜி’ படமும் பெண்களுக்காக குரல் கொடுக்கும் படம்தான். பெண்கள் சுயமாக நிற்க வேண்டிய அவசியத்தைதான் படம் பேசவுள்ளது.”

“தமிழ் சினிமா?”

“இங்கு பெண்களை மையமாக வைத்து கதை எழுதுகிறார்கள். பெண்களை கண்ணியமாக நடத்துகிறார்கள். தமிழ் சினிமாவில் எல்லோரும் சுறுசுறுப்பாக வேலை செய்கிறார்கள்.”“உங்கள் விஷ் லிஸ்ட்டில் எந்தெந்த நடிகர்கள் இருக்கிறார்கள்?”“சவால் நிறைந்த எந்த வேடமாக இருந்தாலும் ஏற்று நடிக்க ஆர்வமாக இருக்கிறேன். யாருமே இல்லை என்றாலும் நான் மட்டு மே நடிப்பேன். கதை தான் என்னுடைய ஹீரோ.”

- சுரேஷ் ராஜா