அழகும், அறிவும், திறமையுமாக மின்னிய வசுந்தரா!மின்னுவதெல்லாம் பொன்தான்-65

1999ம் ஆண்டு தமிழ்நாட்டையே ஒரு கலக்கு கலக்கிய பாடல், ‘முதல்வன்’ படத்தில் இடம்பெற்ற ‘ஷக்கலக்க பேபி… ஷக்கலக்க பேவி லுக்கு விடத் தோணலையா…’ மேடைக்கு மேடை பாடியும், ஆடியும்  தீர்த்தார்கள் ரசிகர்கள். ஏ.ஆர்.ரகுமானின் சூப்பர் ஹிட் பாடல்களின் பட்டியலில் ஷக்கலக்க பேபிக்கு தனி இடம் உண்டு. அந்தப் பாடல் வெளிவந்த ேபாது அந்த பாட்டை பாடியவர் யார் என்றுதான் எல்லோரும் ஒருவருக்கு ஒருவர் கேட்டுக் கொண்டு இருந்தார்கள். ‘வசுந்தரா தாஸ்’ என்கிற பெங்களூரு பொண்ணு என்கிற தகவல் மட்டும் வந்தது.

அடுத்த ஆண்டே ‘ஹே ராம்’ படத்தின் மூலம் வசுந்தரா தாஸை திரையில் கொண்டு வந்து நிறுத்தினார் கமல்ஹாசன். வயலெட் கண்ணும், வாளிப்பு உடம்புமாக வந்து நின்றார் வசுந்தரா தாஸ். அழகும், நடிப்புமாக ‘ஹேராம்’ படத்தில் பெர்ஃபாமன்ஸில் பின்னியவர், அடுத்த ஐந்து ஆண்டுக்காவது தமிழ்நாட்டின் கனவுக்கன்னி என்றே விமர்சகர்கள் யூகித்தார்கள்.

சூட்டோடு சூடாக அடுத்தப் படமே அஜீத்துடன் ‘சிட்டிஸன்’. அது எதிர்ப்பார்ப்பை ஏகத்துக்கும் எகிற வைத்தது. ஆனால், எதிர்ப்பார்த்த எதுமே நடக்கவில்லை. ‘சிட்டிஸன்’ படத்தின் தோல்வி, வசுந்தாராவை தமிழ் சினிமாவை விட்டே தூக்கி எறிந்தது யாருமே எதிர்பாராத டுவிஸ்ட். அதன் பிறகு அவரது குரல் மட்டுமே பாடலாக வந்து கொண்டிருந்தது. நடிகை என்ற முறையில் ‘ராவண பிரபு’ என்கிற மலையாள படம், ‘லங்கேஷ் பத்திரிகா’ என்ற கன்னடப் படம், சில இந்திப் படங்கள் என கச்சிதமாக முடிந்தது அவரது நடிப்பு பயணம்.

நடிப்பு கைவிட்டதால் இசையை கெட்டியாக பிடித்துக் கொண்டார். காரணம் ஆறு வயதில் இஸ்துஸ்தானி கற்றவர், மேற்கத்திய இசையை கரைத்து குடித்தவர். தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஆங்கிலம், ஸ்பானிஷ் என பல மொழிகள் அறிந்தவர்.

தன் குழுவில் டிரம் இசை கலைஞராக இருந்த ராபர்ட் நரேனை திருமணம் செய்து  கொண்டு அவரோடு தனது இசைப் பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறார். ஒரு நடிகையாக வசுந்தரா தாஸ் பெரிய அளவில் ஜெயிக்கவில்லை என்றாலும் ஒரு இசைக்கலைஞராக தன் இருப்பை அவர் தக்க வைத்துக் கொண்டார்.

(மின்னும்)

●பைம்பொழில் மீரான்