அன்று பெட்ரோல் பங்க் ஊழியர்; இன்று சினிமா தயாரிப்பாளர்!



‘‘என்னுடைய அம்மா கேன்சர் நோயினால் பாதிக்கப்பட்டு படுக்கையில் இருந்தபோது உறவினர்கள் எங்களை அலட்சியப்படுத்தினார்கள். அப்போது என்னுடைய அம்மா ஒரு வார்த்தை சொன்னார்... ‘எல்லோரும் மதிக்கணும்னா நம்மிடம் பணம் இருக்கணும் அல்லது புகழ் இருக்கணும். வாழ்க்கையில் அதை நீ அடைய வேண்டும்’ என்று சொன்னார்.

அம்மாவின் அந்த வார்த்தையை வேதவாக்காக எடுத்துக்கொண்டு இரவு, பகல் பார்க்காமல் உழைத்தேன். இப்போது இரண்டு படங்களை தயாரித்ததுடன் மூன்றாவது படத்தையும் ஆரம்பித்துவிட்டேன்’’ என்கிறார் தயாரிப்பாளரும் நடிகருமான ஜே.எஸ்.பி.சதீஷ். இவர் சமீபத்தில் வெளிவந்த ‘அசுரகுரு’ படத்தின் தயாரிப்பாளர். தொழிலதிபரான இவருக்கு ஏ.ஆர்.ரஹ்மானின் சமீபத்திய இசைக் கச்சேரியை ஆர்கனைஸ் பண்ணிய பெருமை உண்டு.

“தொழிலதிபரான நீங்கள் தயாரிப்பாளராக மாறியது எப்படி?”

“எனக்கு சொந்த ஊர் செங்கல்பட்டு. படிச்சது டிப்ளமோ. அப்பா ஜோதி சித்தவைத்தியர். அம்மா கெளரி ஹோம் மேக்கர். அக்கா, தம்பி, தங்கை இருக்கிறார்கள். நாங்கள் கூட்டுக் குடும்பமாக வசித்தோம். அந்தவகையில் இருபது பேருக்காவது அம்மா தினமும் சமைப்பார். அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை என்றதும் உறவினர்கள் எங்களிடம் பொருளாதாரத்தை காரணம் காண்பித்து வேறு மாதிரி பழக ஆரம்பித்தார்கள். அப்போது அம்மா, ‘எல்லோரும் மதிக்கிற மாதிரி வாழ்க்கையில் நீ உயரணும்’ என்று சொன்னார். அம்மாவின் கடைசி ஆசை நிறைவேறுமா, நிறைவேறாதா என்று நான் யோசிக்கவில்லை. ஆனால் கிடைத்த வேலையில் சின்சியராக இருந்தேன். அதுதான் என்னை பிற்காலத்தில் உயர்த்தியது.

பாலிடெக்னிக் முடித்ததும் செங்கல்பட்டு அருகில் உள்ள சர்க்கரை ஆலையில் வேலை கிடைத்தது. அங்கிருக்கும் பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போடும் வேலை. நான் சேர்ந்த சமயம் அங்கிருந்த ஊழியர் லீவு எடுத்ததால் நானே தொடர்ந்து வேலை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஓய்வின்றி, உணவின்றி நான் வேலை செய்ததைத் தெரிந்துகொண்ட முதலாளி நேரடியாக ஆலைக்கே வந்து ‘இனிமே நீதான் இந்த பங்க் மேனேஜர்’ என்று சொன்னார். அப்படி சில காலம் அந்த வேலையில் இருந்தேன்.

பிறகு சென்னையில் ஒரு லாரி கம்பெனியில் வேலைக்குப் போனேன். அந்த வேலை என்னுடைய திறமைக்கு குறைவான தீனியாக இருந்ததால் பார்ட் டைமாக சொந்தமாக தொழில் தொடங்கினேன். ஒரு டூ விலரில் பன்னாட்டு நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு பேக்கிங் மெட்டீரியல் சப்ளை செய்ய ஆரம்பித்தேன். முதலில் எனக்கு யாரும் ஆர்டர் கொடுக்கவில்லை. பிறகு அந்தத் துறையின் நுட்பம் அறிந்து ஆர்டர் கேட்க ஆரம்பித்தேன். என் முயற்சிக்குப் பிறகு பிரபல மூன்றெழுத்து நிறுவனத்தின் ஆர்டர் கிடைத்தது.

 அந்த ஆர்டர் எனக்கு லாபம் தரவில்லை என்றாலும் அந்தக் கம்பெனியின் முகவரி எனக்கு மேலும் பல ஆர்டர்கள் பெறுவதற்குக் காரணமாக இருந்தது. தொடர்ந்து தொழிலில் வியக்கத்தக்க முன்னேற்றம் அடைந்தேன். கம்பெனி ஆரம்பித்த சில வருடங்களில் வீடு, கார் என்று லைஃபில் செட்டில் ஆனேன். அந்த சமயத்தில் அம்மா ஞாபகத்துக்கு வந்தார். அம்மா சொன்னதில் பாதி அடைந்துவிட்டோம். மீதி இருக்கும் புகழுக்காக சினிமாவில் இறங்கலாம் என்று ‘ஜே.எஸ்.பி. பிலிம் ஸ்டூடியோ’ என்ற தயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்தேன்.

முதல் தயாரிப்பாக ‘மெர்லின்’ என்ற படத்தைத் தயாரித்தேன். அந்தப் படம் எதிர்பார்த்தளவுக்கு ஓடாததால் சில கோடிகள் நஷ்டமடைந்தேன். சினிமாவில் இழந்ததை சினிமாவில்தான்  மீட்க முடியும் என்ற முடிவுடன் அடுத்த படத்தைத் தயாரித்தேன். அதுதான் ‘அசுரகுரு’. அந்தப் படம் எனக்கு சினிமாவில் ஒரு அங்கீகாரத்தைக் கொடுத்துள்ளது.”

“விக்ரம் பிரபு?”

“ஆக்சுவலா ‘அசுரகுரு’கதையை முதலில் ஜி.வி.பிரகாஷை வைத்து தயாரிக்க திட்டமிட்டோம். அப்போது இரண்டு இடத்தில் திருடுவது மாதிரிதான் சீன் இருக்கும். தவிர, அந்த சமயத்தில் ஜி.வி.பிரகாஷ் பிஸியாக இருந்தார். மேலும் கதையும் மேன்லியாக ஆக்‌ஷன் கதையாக இருந்தது. அப்போது இயக்குநர் ராஜ்தீப்பை அழைத்து விக்ரம் பிரபுவுக்காக மாத்தி எழுதச் சொன்னேன். ஹீரோ ஐந்து இடத்தில் திருடுவது மாதிரி ஆக்‌ஷன் கதை என்று படத்துக்கு வேறு வடிவம் கிடைத்தது.

விக்ரம் பிரபு பெரிய இடத்துப் பிள்ளையாக இருந்தாலும் கமிட்மென்ட்டுடன் வேலை செய்தார். அவர் உதவி இயக்குநராக வேலை பார்த்தவர் என்பதால் நடிப்பையும் தாண்டி எல்லா விஷயங்களிலும் கவனம் செலுத்தினார். படம் பார்த்துவிட்டு பிரபு சார் பாராட்டினார்.”
“உங்களுக்கு நடிக்கும் ஆசை இருக்கிறதா?”

“படத்தில் மகிமாவின் பாஸ் ஆக நடிச்சேன். அதைப்பார்த்துவிட்டு எனக்கு நடிப்பாசை இருக்குமோ என்று நினைக்கிறார்கள். அந்தப் படத்தில் நான் நடித்தேன் என்று சொல்வதை விட வந்து போனேன் என்று சொல்லலாம். ஒரு அனுபவத்துக்காகவும், அங்கீகாரத்துக்காகவும் நடித்தேன். பத்து படங்கள் தயாரித்தவர் என்றாலும் அவரைப் பற்றி வெளி உலகில் மட்டுமல்ல, சினிமா உலகிலேயே யாருக்கும் தெரிவதில்லை. அதற்காக என்னை அடையாளப்படுத்தும் வகையில் நடிக்க ஆரம்பித்தேன். இந்தப் படத்தில் நான் நடிப்பதற்கு சில வலுவான கதாபாத்திரங்கள் இருந்தது. பிசினஸை மனதில் வைத்து அந்த வேடங்களில் பிரபலமானவர்களை நடிக்க வைத்தோம்.”

“ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியை நடத்த பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் தவம் கிடக்கும் நிலையில் உங்களுக்கு எப்படி வாய்ப்பு கிடைத்தது?”
“மக்கள் தொடர்பாளர் டைமண்ட் பாபு சார் மூலம் அந்த வாய்ப்பு கிடைத்தது. ரஹ்மான் சாருடன் இணைந்து வேலை செய்ததை வாழ்நாளில் மறக்கமுடியாது. அந்த ஷோவை நடத்தும்போது ஏராளமான சவால்களை சந்தித்தேன். எல்லாவற்றையும் மீறி அந்த ஷோவை வெற்றிகரமாக நடத்தினேன். ஏ.ஆர்.ரஹ்மான் சார் மேடை என்பது அவருக்கானது. அந்த மேடையில் என்னை ஏற்றி பாராட்டியதோடு நில்லாமல் என்னையும் பேச வைத்தார். அந்த மொமண்ட் மறக்க முடியாதது.

நிகழ்ச்சி முடிந்து மாதங்கள் பல கடந்தாலும் தொடர்ந்து ரஹ்மான் சார் என்னுடன் நட்பு பாராட்டி வருகிறார். சமீபத்தில் அவருடைய திருமண நாள் வந்தது. அதற்கு வாழ்த்து தெரிவித்தேன். உடனே நன்றி மெசேஜ் அனுப்பினார். உலகமே பாராட்டும் ஒரு இசைக்கலைஞன் எனக்கு தரும் அந்த முக்கியத்துவம் அவர் சக மனிதர்களிடம் வைத்துள்ள மனித நேயத்தின் வெளிப்பாடு. பொதுவாக ரஹ்மான் சாரை தொடர்பு கொள்வதுதான் கடினம். அவருடன் பழக ஆரம்பித்தால் அவருடைய குழந்தை மனம் தெரிய வரும்.”

“அடுத்து?”

“கே.பாக்யராஜ் சார் கதை, திரைக்கதை, வசனம் எழுதும் படத்தை தயாரிக்கிறேன். நாயகனாக முன்னணி ஹீரோ நடிக்கிறார். கொரோனா ஃபீவர் முடிந்ததும் அறிவிப்பு வெளியாகும்.”

“சினிமா தவிர?”

“நான் சிறு வயதாக இருக்கும்போதே என்னுடைய அப்பா ‘மதர் தெரசா சித்தா எய்ட்ஸ் ஃபவுண்டேஷன்’ என்ற அமைப்பைத் தொடங்கினார். அப்போது அப்பாவுக்கு போதிய பண வசதி இல்லாததால் தொடர்ந்து நடத்த முடியவில்லை. அப்பாவும் இப்போது இல்லை. அப்பாவின்
கனவுக்கு உயிர் கொடுக்கும் வகையில் எதிர்காலத்தில் தன்னார்வ ஃபவுண்டேஷன் துவங்கும் திட்டம் உள்ளது. தவிர, கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், ஆதரவற்ற பெண்களுக்கான ஒரு என்.ஜி.ஓ. துவங்கும் திட்டமும் உள்ளது.

இந்தத் திட்டத்தின் மூலம் அவர்களுக்கு இரு சக்கர வாகனம் கொடுத்து சமையல், ஹவுஸ் கீப்பிங் என்று வேலை வாய்ப்பை உருவாக்கித் தருவது நோக்கம். இது ஒரு ஐடியாவாகச் சொல்கிறேன். இதன் மூலம் அவர்களுக்கு வருமானம் மட்டுமின்றி சொந்தக் காலில் நிற்கும் சூழலையும் உருவாக்க முடியும். இந்தத் திட்டத்தை நான் மட்டுமல்ல, சேவை மனப்பான்மை உள்ள யார் வேண்டுமானாலும் துவங்கலாம்.”

“சமூக வலைத்தளங்களால் தயாரிப்பாளர்கள் சந்திக்கும் பிரச்னைகள்...?”

“முன்பு போல் இப்போது தியேட்டரில் படம் பார்க்கும் கூட்டம் குறைந்துவிட்டது. சினிமா உள்ளங்கையில் வந்துவிட்டது. தியேட்டரில் படம் வெளியாவதற்கு முன்பே வெப் சைட்டில் படம் வெளியாகிவிடுகிறது. எங்கள் படத்துக்காக  பைரஸியை கண்காணிக்க இரண்டு விஜிலன்ஸ் டீம் நியமித்தோம். அப்படியிருந்தும் 140 வெப் சைட்களில் படம் வெளிவந்துள்ளன. முடிந்தவரை படத்தை அதிலிருந்து தூக்கிவிட்டோம். அப்படியிருந்தும் ஒரு சில வெப் சைட்கள் படத்தை வெளியிட்டு என்னைப் போன்ற தயாரிப்பாளர்களின் பணத்துக்கு வேட்டு வைக்கின்றன.

முன்பு போல் சினிமா தயாரிப்பது எளிதல்ல. தயாரிப்பாளரின் நிலை என்னவென்றால் முதலீடு வருமா, வராதா என்று கத்தி மேல் நிற்கும் நிலையில்தான் இருக்கிறது. என்னுடைய படம் கொரோனா பாதிப்பால் நிறுத்தப்பட்டுவிட்டது. இதற்காக ஏராளமாக செலவு செய்துள்ளேன். பேப்பர் விளம்பரங்கள் கொடுத்தேன்.

இன்னும் சில நாட்கள் ஓடியிருந்தால் தப்பித்திருப்பேன். கொரோனா முடிந்து மீண்டும் படம் ரிலீஸ் பண்ண வேண்டுமானால் மறுபடியும் ஆரம்பத்திலிருந்து செலவு பண்ண வேண்டும். அப்படி பண்ணினாலும் ரசிகர்கள் தியேட்டருக்கு வருவார்களா என்று தெரியாது.

இப்போது உள்ள நிலையில் தயாரிப்பாளர் என்ற பெயரைத் தூக்கிவிட்டு ‘சேவை வழங்குநர்’ என்று மாற்றிவிடலாம். அதுதான் இன்றைய தயாரிப்பாளரின் நிலை. என்னுடைய பிசினஸில் நான் ஜெயித்திருக்கிறேன். அதுபோன்று சினிமாவைக் கற்று அதிலும் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது.”

- சுரேஷ்ராஜா