இளம்பெண்களை திசைதிருப்பும் உலகப் பொருளாதாரம்!சமுத்திரக்கனி, சசிக்குமார் வரிசையில் இயக்குநராக இருந்து நடிகராக மாறியுள்ளார் ஜிப்ஸி ராஜ்குமார். இவர் பாக்யராஜ் நடித்த ‘அய்யனார் வீதி’ படத்தை இயக்கியவர்.
ஜிப்ஸி ராஜ்குமார் நாயகனாக நடிக்கும் படம் ‘பச்சைக்கிளி’. இதன் நாயகி ஹேமா. இந்தப் படத்தை எல்.கே.பாஷா  தயாரிக்கிறார். நெல்லை சிவா, முத்துக்காளை என்று வடிவேல் டீமில் நடித்த அனைத்து காமெடி நடிகர்களும் இதில் நடித்துள்ளார்கள்.

ஒளிப்பதிவு உதயஷங்கர். இசை செல்வநம்பி. இவர் ‘திட்டக்குடி’, ‘ரங்கராட்டினம்’, ‘கெளுத்தி’ போன்ற படங்களுக்கு இசையமைத்தவர்.  இந்தப் படத்தை சாய் ம.க.செல்வம் இயக்குகிறார்.

படம் பற்றி அவரிடம் கேட்டோம்.‘‘எனக்கு நாடகம்தான் அடிப்படை. ஏராளமன வீதி நாடகங்களில் நடித்துள்ளேன். இது   வில்லேஜ் பின்னணியில் நடக்கும் காதல் கதை. தாய்மாமனை மணக்கும் முறைப்பெண் சில பிரச்னைகளை சந்திக்கிறார். அந்த பிரச்னை என்ன? அந்த பிரச்னையிலிருந்து தம்பதியர் இணைந்தார்களா, இல்லையா என்பதை காதல், சென்டிமென்ட், காமெடி கலந்து சொல்லியிருக்கிறேன்.

இந்தப் படத்தை ஆரம்பத்தில் நான்தான் தயாரித்தேன். பிறகு சீனிவாசன், யோகா பாபு என்னுடன் தயாரிப்பில் இணைந்தார்கள். அப்போதும் நிதி நெருக்கடி ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் படம் மோசமான நிதி பிரச்னையை சந்தித்தபோது படத்தில் நாட்டாமையாக நடித்த பாஷா பாய் படத்தை தயாரிக்க முன் வந்தார். அவருடைய ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என்றால் இந்தப் படத்தை முடித்திருக்க முடியாது.

படத்தில் மொத்தம் ஐந்து பாடல்கள். அனைத்தும் பேசப்படும்விதமாக இருக்கும். கே.பாக்யராஜ் சார் பாடல்களை கேட்டுவிட்டு பாராட்டியது எங்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது. இந்தப் படம் தங்க கலசத்தின் மேல் வைர கிரீடம் வைத்ததுபோல் இருக்கும். இது படமாக இல்லாமல் பாடமாக இருக்கும்’’ என்றார்.

படத்தின் நாயகன் ஜிப்ஸி ராஜ்குமார் கூறியதாவது... ‘‘ நாடகம்தான் இந்தப் படத்தில் என்னை  இணைத்தது. நானும் இயக்குநரும் ஒரு நாடகம் நடத்தும்போது சந்தித்தோம். அப்படிதான் இந்தப் பட வாய்ப்பு கிடைத்தது.

இன்று உலக பொருளாதாரம் இளம் பெண்களின் வாழ்க்கையை எப்படியெல்லாம் திசை திருப்புகிறது என்பதுதான் படத்தின் மையக்கரு. அதனால் குடும்பங்கள் எப்படி பாதிக்கப்படுகிறது என்பதை இதில் ஆழமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

கலாச்சாரத்தை இழக்கும் நாடு பெரும் அழிவை சந்திக்கும். அதைதான் இந்தப் படத்தில் நாங்கள்  சொல்லியுள்ளோம். இது சமூக விழிப்புணர்வு படமாக இருப்பதால் எனக்கு சம்பளம் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். புது டீமாக இருந்தாலும் பக்கா பிளானிங்காக எல்லாமே நடந்தது’’ என்றார்.

தயாரிப்பாளர் பாஷா கூறியதாவது... ‘‘அடிப்படையில் நான் எம்.ஜி.ஆர்.ரசிகன். கெளரவமான வேலையில் இருக்கிறேன். பணம் சம்பாதிக்க சினிமாவுக்கு வரவில்லை. தரமான படங்கள் எடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன்தான் சினிமாவுக்கு வந்தேன். இந்தப் படத்துக்கு பிறகு தொடர்ந்து படங்கள் தயாரிக்க திட்டமிட்டுள்ளேன்’’ என்றார்.

- ரா