காமக்கொடூரர்களின் பார்வையில் சிக்கும் நீச்சல் வீராங்கனை!



‘அட்டு’ படத்தை இயக்கிய ரத்தன்  லிங்கா இயக்கும் படம் ‘லாக்’. இந்தப் படத்தின் நாயகன் சுதிர். நாயகியாக மது நடிக்கிறார். இரண்டாவது நாயகியாக ஹரிணி நடிக்கிறார். இவர்கள் தவிர நடன இயக்குநர் பாரதி, சீனிவாச வரதன் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். ஒளிப்பதிவு கே.டி.விமல். இசை விக்ரம் செல்வா. பாம்பூ ட்ரீஸ் சினிமாஸ், சக்திவேல் பிக்சர்ஸ்  ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கின்றன.

‘‘இது சைக்கோ த்ரில்லர் ஜானர்ல உருவாகும் படம். படம் பார்க்கும் ரசிகர்களை இருக்கை நுனியில் லாக் செய்து விடும் அளவுக்கு திகிலும் திருப்பங்களும் கொண்ட கதை. இந்த உலகில் வாழும் ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு கனவு உண்டு. அதை நோக்கிய பயணத்தையே அவர்கள் வாழ்க்கையாக வாழ்கிறார்கள். சிலருக்கு அந்த கனவுகள் பலிக்கின்றன. சிலருக்கு பாதிதான் நிறைவேறுகின்றன. சிலருக்கு கனவுகள் தொடக்கத்திலேயே கருகிப் போய் விடுகின்றன.

இந்த சமுதாயத்தில் நாம் பழகும் மனிதர்கள் நல்லவர்களா? கெட்டவர்களா? என்பதை நாம்தான் கண்டறிய வேண்டும். ஏனெனில் இந்த உலகில் உன்னை நீயேதான் காப்பாற்றிக் கொள்ள முடியும். அதை சரிவர நாம் செய்யாவிட்டால்அதற்குண்டான விளைவுகளை நாம் அனுபவித்தே தீர வேண்டும். இதுதான் படத்தின் கரு. சமூக விரோதிகளும் தீயசக்திகளும் மனிதர்களின் கனவில் கனலை மூட்டி விடுகிறார்கள். கனவு பூவாக மலரும் முன்பே மிதித்து சிதைத்து விடுகிறார்கள்.

நீச்சல் போட்டியில் ஒலிம்பிக்கில் விருது வாங்கும் கனவோடு இருப்பவர் நாயகி. ஒரு நீச்சல் வீராங்கனையாக பரிமளிக்க அடுத்தடுத்து படியேறிக்கொண்டிருக்கிறார். தொடர்ந்து பயிற்சியில் ஈடுபடுகிறார். இப்படி இருக்கும்போது அந்த நகரத்தில் சைக்கோ காமக் கொடூர கொலைகாரர்கள் ஐந்து பேர் ஊடுருவுகிறார்கள்.

அடுத்து தங்கள் காமப் பசிக்காக நாயகி மீது கண் வைக்கிறார்கள். மனித மிருகங்களின் கொடூரங்களிலிருந்து நாயகி எப்படி தப்பிக்கிறார் என்பதையும் சைக்கோ கொலையாளிகள் என்ன ஆனார்கள் என்பதையும் பரபர திரைக்கதையில் சொல்லியுள்ளேன். அன்புக்கும் பாசத்துக்கும் இடையில் நடக்கும் போராட்டத்தில் அடுத்தடுத்து முடிச்சுகள், திருப்பங்கள் என விறுவிறுப்புக்கும் பஞ்சமிருக்காது’’ என்றார் இயக்குநர் ரத்தன் லிங்கா.

- எஸ்