ஏரியல் கேமராமேன்!ரசிகர்களுக்கு சினிமாட்டோகிராஃபரை தெரியும். ஏரியல் சினிமாட்டோகிராபரை தெரியுமா என்றால் அதற்கு பதில் இருக்காது. இப்போது சினிமாவில் ஒளிப்பதிவாளருக்கு அடுத்து, அதே துறையில் கோலோச்சுகிறவர்கள்தான் இந்த ஏரியல் சினிமாட்டோகிராஃபர்ஸ். முன்பு கழுகு பார்வையில் ஒரு காட்சியை பதிவு செய்ய வேண்டுமானால் ஹெலிகாப்டர், பாராகிளைடிங் உதவியை நாட வேண்டும்.

அதன் பிறகு ஜிம்மி ஜிப், அகேலா போன்ற கருவிகள் ஒளிப்பதிவை சற்று எளிதாக்கியது. இப்போது ஒளிப்பதிவை மேலும் எளிதாக்கும் விதமாக வந்துள்ள நவீன வசதி எலிகேம் என்று சொல்லப்படும் ட்ரோன் கேமரா. இதன் மூலம் குமரியில் நடுக்கடலில் இருக்கும் வள்ளுவனின் சிலையையும் துல்லியமாக படமாக்கலாம். காஷ்மீர் பள்ளத்தாக்கையும் துல்லியமாக படமாக்க முடியும்.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் ஏரியல் சினிமாட்டோகிராபராக முன்னணியில் இருப்பவர் அன்பு பிரபு. சமீபத்தில் வெளியான ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தில் இவருடைய பங்களிப்பு பெரியளவில் உதவியாக இருந்தது என்று பொதுமேடையிலேயே தெரிவித்தார் அதன் இயக்குநர் தேசிங் பெரியசாமி. ட்ரோன் கேமராக்களை இயக்குவதில் ஸ்பெஷலிஸ்ட்டான அன்பு பிரபுவை சந்தித்தோம்.

“ட்ரோன் கேமராக்கள் மீது உங்களுக்கு அப்படி என்ன ஆர்வம்?”

“எனக்கு சொந்த ஊர் மாயவரம். டிகிரி முடித்ததும் வேலைக்காக சென்னை வந்தேன். நான் படிச்சது வரலாறு. ஆனால் சம்பந்தமே இல்லாமல் ஒரு கேமரா கடையில் வேலை பார்த்தேன். 2014ம் ஆண்டு ட்ரோன் கேமரா பயன்பாடு சினிமாவில் அதிகமானது. அதை சொல்லிக்கொடுக்கும் டிரைனராகதான் படப்பிடிப்புகளில் கலந்துகொண்டேன். ‘பட்சி’ என்ற படம்தான் நான் வேலை செய்த முதல் படம். அந்தப் படம் இன்னும் வெளியாகவில்லை. அதன் பிறகு ‘மிஸ்டர் சந்திரமெளலி’, ‘காளி’, ‘கொலைக்காரன்’, ‘மாரி-2’, ‘இமைக்கா நொடிகள்’. இப்போது ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ என்று ஏராளமான படங்கள் வெளிவந்துள்ளது.

‘கொலைக்காரன்’ படத்தில் ‘ஏரியல் ஒளிப்பதிவாளர்’ என்ற டைட்டில் கொடுத்து என்னுடைய புரபஷனுக்கு கெளவரம் அளித்தார்கள். ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தில் ‘ஏரியல் போட்டோகிராபி’ என்று டைட்டில் கொடுத்தார்கள். இந்த அடையாளத்தை நானாக எடுத்துகொள்ளவில்லை. இயக்குநர்கள்தான் கொடுக்கிறார்கள்.”

“பொதுவாக ட்ரோன் கேமராமேனுக்கு என்ன சவால் இருக்கும்?”

“ஒவ்வொருப் படத்திலும் ஒவ்வொரு விதமான சவால் இருக்கும். ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தில் சவால் அதிகம் என்றே சொல்ல வேண்டும். அதுமட்டுமல்ல, அந்தப் படம் எனக்கு ஸ்பெஷல் என்றும் சொல்லலாம். அதில் எனக்கான ஸ்பேஸ் அதிகம் இருந்தது. கிட்டத்தட்ட 40 சதவீதம் ட்ரோன் ஷாட்ஸ் இடம்பிடித்திருக்கும். அந்தப் படத்தில் இயக்குநர், ஒளிப்பதிவாளர் கேட்ட அவுட்புட்டைவிட ஒரு மடங்கு அதிகம் கொடுத்திருக்கிறேன்.

படத்தில் ஒரு இடத்தில் துல்கர் வேகமாக மாடிப்படி ஏறும் காட்சி, மேம்பாலம் காட்சி, ரோல்ஸ் ராய்ஸ் கார் ஒரு பங்களாவில் நுழைவது போன்ற காட்சிகள் ட்ரோன் கேமராவில் படமாக்கியதோடு மட்டுமில்லாமல் சிங்கிள் டேக்கில் எடுக்கப்பட்ட காட்சிகள். குறிப்பாக ரோல்ஸ்ராய் கார் பங்களாவில் நுழைந்ததும் கேட் ஆட்டோமெடிக்காக மூடிக்கொள்ளும். டைமிங் கொஞ்சம் மிஸ்ஸானாலும் கேமராவுக்கு கொரோனா வந்தமாதிரிதான். அந்த கேமரா விலை பதினைந்து லட்சம். அதே மாதிரி ஆர்டிஸ்ட் மீது மோதினாலும் கேமரா ஸ்வாகா.”

“ட்ரோன் கேமராவில் படமாக்குவதில் உள்ள சாதகம், பாதகம் என்ன?”

“தொழில் நுட்பம் தெரிந்து வைத்திருந்தால் சாதகம் என்று சொல்லலாம். ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தில் பயன்படுத்திய ட்ரோன் மதிப்பு சுமார் பதினைந்து லட்சம். வாடகை சராசரியாக முப்பதாயிரம் செலவாகும். ஆனால் பாராகிளைட் பயன்படுத்தும் போதோ, ஹெலிகாப்டர் பயன்படுத்தும்போதோ அதன் செலவு பல லட்சங்களை தாண்டிவிடும். அந்த உபகரணங்களை பயன்படுத்த அரசு அனுமதி, பட்ஜெட் என்று பல நடைமுறை சிக்கல்கள் இருக்கும்.

பாராகிளைடிங் ஷாட் கம்போஸிங் கஷ்டமாக இருக்கும். ஹெலிகாப்டரில் படமாக்க குறைந்தது ஐந்து லட்சமாவது செலவு பிடிக்கும். இது முப்பதாயிரத்தில் முடிந்துவிடும். ஹெலிகாப்டர் பயன்படுத்தும்போது நாம் நினைத்ததை படமாக்குவது கடினம். ஏனெனில், ஹெலிகாப்டரில் படமாக்கும்போது நடிகர்கள் ஆக்‌ஷன் பண்ணிகொண்டே இருக்க வேண்டும். இதில் அப்படி அல்ல, பொசிஷனில் கேமராவை நிறுத்த முடியும். அதன் பிறகு நடிகர்கள் ஆக்‌ஷன் பண்ணால் போதும்.

இந்தப் படத்தில் முப்பது நாட்கள் ட்ரோன் பயன்படுத்தினோம். ஒரு படத்தில் பத்து ட்ரோன் ஷாட் தான் இருக்கும். ஆனால் இதில் அதன் தேவை அதிகமாக இருந்தது. ட்ரோன் பட்ஜெட்டை குறைப்பதோடு மட்டுமில்லாமல் நேர்த்தியாக படமாக்கவும் வசதியாக
இருக்கும்.”

“ட்ரோன் ஆபரேட்டருக்கு கேமராமேனுக்குரிய நாலேஜ் தேவைப்படுகிறதா?”

“கண்டிப்பாக. போட்டோகிராபி, கிரியேட்டிவிட்டி என்று சில விஷயங்கள் ட்ரோன் இயக்குபவர்களுக்கு தெரிந்து இருக்க வேண்டும். கேமராமேன் சொல்லும் கட்டளையை உடனே செய்து கொடுக்க வேண்டும். அதே சமயம் கேரக்டரோட மூட் கெடாமல் படமாக்க வேண்டும். ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் சில பகுதிகளை மேகலாயா மலையில் படமாக்கினோம். அப்போது கடும் பனிப்பொழிவு இருந்தது. சூரிய ஒளி எப்போது வரும் என்று காத்திருந்தோம். கேமராமேன் சொல்லும் அந்த நொடியில் ட்ரோன் இயக்க தயாராக இருக்க வேண்டும். அந்த
வகையில் கேமராமேனின் கட்டளையை புரிந்து வேலை செய்ய கேமரா நாலெட்ஜ் தேவை.

‘ஹீரோ’ படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு காட்சியில் இருபது கிலோ மீட்டர் வேகத்தில் ஆரம்பித்து நூறு கிலோ மீட்டர் வேகத்தில் வண்டி ஓட்டுவார். அந்த காட்சியை அதே வேகத்தில் எந்தவித ஜெர்க் இல்லாமல் படமாக்க வேண்டும்.ட்ரோன் ஒளிப்பதிவு நிஜ ஒளிப்பதிவுடன் மேட்ச் ஆக வேண்டும். அந்தப் படத்தில் கலர் கரெக்‌ஷன் எதுவும் பண்ணாமல் நான் எடுத்துக்கொடுத்த ‘ரா’ புட்டேஜை அப்படியே பயன்படுத்தினார்கள்.

சில படங்களில் என்னுடைய வேலையை பார்த்துவிட்டு எனக்கு சுதந்திரம் கொடுத்துள்ளார்கள். சில இயக்குநர்கள் காட்சி எப்படி வரவேண்டும் என்று சொல்லி ட்ரோன் போர்ஷனை மட்டும் சொல்லி எடுத்துத்தரச் சொல்வார்கள். சில படங்களில் என்னுடைய ஆலோசனையையும்
கேட்பார்கள்.”“தமிழ் சினிமாவில் ட்ரோன் பயன்பாடு எந்தளவுக்கு இருக்கிறது?”

“ட்ரோன் பயன்பாடு தமிழ் சினிமாவில் அதிகமாக இருக்கிறது என்று சொல்லலாம். சிட்டி, வில்லேஜ் என்று எல்லா கதைக் களங்களுக்கும் ட்ரோன் பயன்படுத்துகிறார்கள். பொதுவாக ட்ரோன் கேமராவில் கிரவுண்ட் ஷாட்டை எளிதாக எடுத்துக் கொடுத்துவிடுவார்கள். கடலில் எடுக்க தயங்குவதுண்டு.

என்னிடம் வரும்போது கடலில் இரண்டு கிலோ மீட்டர் உள்ளே போய் எடுத்து கொடுத்திருக்கிறேன். ‘மாகமுனி’யில் ஆற்றுக்கு மேலே ட்ரோன் பறக்கவிட்டு எடுத்து கொடுத்தேன். சமீபத்தில் வெளிவந்த ‘வால்டர்’ க்ளைமாக்ஸ் பகுதியில் கடல் போர்ஷனை அப்படிதான் எடுத்து
கொடுத்தேன். அந்த வகையில் ட்ரோன் கேமராவை ஐநூறு மீட்டர் உயரத்தில் ஏழு கிலோ மீட்டர் தூரம் வரை கடலுக்குள் அனுப்பி படமாக்க
முடியும்.”“உங்கள் வேலைக்கு பாராட்டு கிடைக்குதா?”

“இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் சார் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படம் பார்த்துவிட்டு ‘வழக்கமாக ட்ரோன் ஷாட்ஸ் சில சமயம் எரிச்சலை உண்டாக்கும். ஆனால் நீங்கள் அழகாக படமாக்கியிருக்கிறீர்கள்’ என்று பாராட்டினார். இயக்குநர்கள் சசிக்குமார், பாண்டிராஜ் உடபட கோலிவுட் இயக்குநர்கள் பலர் பாராட்டியுள்ளார்கள்.”

“உங்களுக்கு ஒளிப்பதிவாளராக வரணும்னு ஆசை இருக்கிறதா?”

“எனக்கு அப்படி ஒரு ஆசை இல்லை. ட்ரோன் போட்டோகிராபிதான் எனக்கு பிடிக்கும். படப்பிடிப்பு இல்லாத நாட்களில் ட்ரோன் கேமரா சர்வீஸ் பண்ணுகிறேன். தமிழ்நாடு முழுவதும் உள்ள ட்ரோன் கேமரா சர்வீஸ் என்னிடம்தான் வருகிறது. சினிமா தவிர பிரபல தனியார் நிறுவனங்களின் புரெமோஷனுக்கும் ஷூட் பண்ணி தருகிறேன். சமீபத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் சாரின் வீடியோ ஆல்பத்துக்கு ஒர்க் பண்ணினேன்.”
“உங்க ஃபீல்டில் போட்டி எப்படி?”

“போட்டி இல்லாத தொழில் எதுவும் இல்லை. நாம் யார் என்பதை வேலையில் காண்பித்தால் போட்டியை கண்டு பயப்படவேண்டிய அவசியமில்லை
என்பது என்னுடைய கருத்து.”“அடுத்து யாருடன் இணைந்து வேலை செய்ய ஆர்வமாக இருக்கிறீர்கள்?”“எனக்கு யார் டாஸ்ட்க் கொடுக்கிறார்களோ அவர்களுடன் இணைந்து வேலை செய்ய ஆர்வமாக இருக்கிறேன்.”

- ராஜா