அடவி
காட்டைக் காப்போம்!
‘அடவி’ என்றால் காடு என்று படத்தின் ஆரம்பத்திலேயே சொல்லிவிடுவதால் கதை எத்தகையது என்பதைப் புரியவைத்துவிடுகிறார்கள். சமீபகாலமாக விவசாயம், காடு வளர்ப்பு என்று சமூகம் சார்ந்த கதைகள் தமிழ் சினிமாவில் வெளிவந்துகொண்டிருக்கும் சூழ்நிலையில் இந்தப் படமும் அப்படியொரு சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் படமாக வெளிவந்துள்ளது.

ஆனால், கதைக்களம்தான் அதே பழைய பார்முலாவில் இருக்கிறது. வழக்கமாக காடு பற்றிய கதை என்றால் அதில் என்னவெல்லாம் நடக்கும் என்று நினைக்கிறீர்களோ அதெல்லாம் இந்தப் படத்திலும் உண்டு.
நீலகிரி மலைப்பகுதியில் ஒரு ரிசார்ட் கட்ட முயற்சிக்கிறார் வில்லன் மனோகரன். இதற்காக அரசு இயந்திரங்களை தன் பண பலத்தால் வசியப்படுத்தி மலைவாழ் மக்களை அந்த மலையிலிருந்து விரட்டும் முயற்சியில் இறங்குகிறார். இயற்கையைப் பாதுகாக்கும் நோக்கத்தோடும் தங்கள் வாழ்வுரிமையை விட்டுக்கொடுக்காமலும், இவர்களின் திட்டம் அறிந்து நாயகன் வினோத்தும், நாயகி அம்மு அபிராமியும் மக்களை ஒன்றுசேர்த்து அந்தக் கும்பலை எதிர்த்துப் போராடுகிறார்கள். இந்த உரிமைப் போராட்டத்தில் வென்றது யார் என்பதே மீதிக் கதை.
‘நான் மகான் அல்ல’ படத்தில் வில்லனாக நடித்த வினோத் கிஷன் இதில் நாயகன். கிராமத்து நாயகனாக இயல்பான நடிப்பைக் கொடுத்துள்ளார். சண்டைக் காட்சிகளிலும் தூள் கிளப்புகிறார். குறிஞ்சி நிலப் பெண்ணாக வரும் அம்மு அபிராமி குறிஞ்சி மலர் போன்று அழகில் வசீகரிக்கிறார்.
கம்பு சுற்றுவது, வீர வசனம் பேசுவது என்று நடிப்பிலும் ஸ்கோர் பண்ணுகிறார். அம்மு அபிராமியின் தோழியாக நடித்துள்ள விஷ்ணுப்பிரியாவின் கேரக்டர் நெகிழ வைக்கிறது. சரத்ஜடாவின் இசையில் பாடல்கள் இனிமை. இயக்குநர் ரமேஷ்.ஜி அடிப்படையில் ஒளிப்பதிவாளர் என்பதால் அதில் எக்கச்சக்கமாக அப்ளாஸ் வாங்குகிறார். ஆரம்பத்தில் மலைவாழ் மக்களின் குலதெய்வம் காட்டுல இறங்கிட்டாள் என ஆரம்பித்து எதிர்பார்ப்பை எகிறச் செய்கிறார்கள். அதே வேகத்தோடும், அதே நடுக்கத்தோடும் படத்தைக் கொண்டு சென்றிருந்தால் அடவி அட போட வைத்திருக்கும்.
காட்டிலிருந்து கிடைக்கும் ஆக்சிஜன்தான் நம் வாழ்வின் ஆதாரம், ஆகாரம் எல்லாம். ஆனால் அந்தக் காட்டை அழித்து வாழ நினைக்கும் மனிதர்கள்தான் நிஜக் காட்டுமிராண்டிகள் என்பதையும், காட்டை அழித்தால் அது நம்மையே அழிப்பதற்கு சமம் என்பதையும் பசுமரத்தாணி போல எல்லோர் மனதிலும் பதியும்படி சொல்லியிருக்கிறார் இயக்குநர் ரமேஷ்.ஜி.
|