மின்னிய மேனன்!



மின்னுவதெல்லாம் பொன்தான்-62

வாய்ப்பு கிடைக்காமல் சினிமாவை விட்டு விலகிச் செல்கிறவர்கள்தான் அதிகம். அத்தி பூத்த மாதிரி ஒரு சிலர் மட்டும் வாய்ப்புகளை மறுத்து ஒதுங்கி விடுகிறார்கள் அதற்கு பல காரணங்கள் இருக்கலாம். முக்கியமான காரணம் திருமணம். ஒரு கட்டத்தில் அவர்களுக்கு குடும்ப வாழ்க்கை பிடித்துவிடவே எல்லாவற்றையும் தூக்கிப் போட்டுவிட்டு திருமண பந்தத்திற்குள் தங்களை இணைத்துக் கொள்கிறார்கள். அவர்களில் ஒருவர்தான் ரேஷ்மி மேனன்.

கேரளத்து பெண் என்றாலும் படித்து, வளர்ந்தது எல்லாமே சென்னையில்தான். ‘ஜெயம்’, ‘ஆல்பம்’, ‘செல்லமே’ உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். கிறிஸ்தவ பெண்கள் கல்லூரியில் விஸ்காம் முடித்து விட்டு ஹீரோயின் ஆனார்.

பிரகாஷ்ராஜ், ‘இனிது இனிது’ படத்தை தயாரித்தபோது அந்தப் படத்தின் ஆடிசனில் 100 பெண்களில் ஒருவராக கலந்து கொண்டு நடிக்க தேர்வானார். அதிலும் நான்கைந்து நாயகிகள் அறிமுகமாகும் படத்தில் மெயின் கேரக்டரில் நடித்தார்.

பார்த்தவுடன் பளிச்சென்று வித்தியாசமாக தெரிகிற தோற்றம் ரேஷ்மி மேனனுடையது. சிரிப்புக்குள்ளும் சின்ன சோகம் ஒளிந்திருப்பது அவர் முகத்தின் ஸ்பெஷல். ‘இனிது இனிது’க்குப் பிறகு ‘பர்மா’, ‘தேனீர் விடுதி’, ‘உறுமீன்’, ‘நட்பதிகாரம்’ என சில படங்களில் நடித்தார். அவற்றில் சில வெற்றி பெற்றன. சில தோல்வி அடைந்தன. ஆனால் எல்லாவற்றிலும் ேரஷ்மியின் நடிப்பு பேசப்பட்டது.

‘உறுமீன்’ படத்தில் பாபி சிம்ஹாவின் மனைவியாக நடித்தவர் நடிக்கும்போதே காதலித்து 2016ம் ஆண்டில் திருமணமும் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு கையில் இருந்த படத்தை முடித்துக் கொடுத்தவர் புதிய படம் எதிலும் நடிக்கவில்லை.

2010ல் ஹீரோயினாக  அறிமுகமாகி 2018ல் தன் சினிமா பயணத்தை முடித்துக் கொண்டார். இந்த 8 ஆண்டு பயணத்தில் அவர் நடித்தது வெறும் 8 படங்கள்தான். ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு விதமாக நடித்திருந்தார். அவர் நடித்த படங்கள் அனைத்துமே தமிழ்ப் படங்கள் என்பது குறிப்பிடத்தக்க அம்சம், தாய்மொழியான மலையாளத்திலோ, பிற மொழிகளிலோ அவர் நடிக்கவில்லை.

தமிழ் சினிமாவில் மின்னிக் கொண்டிருந்திருக்க வேண்டிய ரேஷ்மி மேனன் இப்போது பாபி சிம்ஹா இல்லத்தில் நல்ல மனைவியாக மின்னிக் கொண்டிருக்கிறார். நல்ல குடும்ப வாழ்க்கையில் அவர் சந்தோஷமாக இருக்கலாம். ஆனால் நல்ல நடிகையை மிஸ் பண்ணிய வருத்தத்தில் இருக்கிறது தமிழ் சினிமா.

(மின்னும்)

●பைம்பொழில் மீரான்