வானம் கொட்டட்டும்



சென்டிமென்ட் மழை!

தமிழ் சினிமாவில் அரிதாகிவிட்ட குடும்பப் படங்களின் ஜானரில் வந்திருக்கிறது ‘வானம் கொட்டட்டும்’.பாலாஜி சக்திவேல், சரத்குமார் இருவரும் அண்ணன் தம்பி. சரத்குமாரின் மனைவி ராதிகா. இவர்களுக்கு விக்ரம் பிரபு மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் என இரு பிள்ளைகள்.
தன் அண்ணன் பாலாஜி சக்திவேலுக்காக ஒரு கொலை செய்துவிட்டு ஜெயிலுக்குச் செல்கிறார் சரத்குமார். தன் அப்பாவைப் போன்று பிள்ளைகளும் உருவாகிவிடக்கூடாது என்று நினைத்து பிள்ளைகளை அழைத்துக் கொண்டு சென்னைக்கு ஷிப்டாகிறார் ராதிகா. ஒரு அச்சகத்தில் வேலை செய்து பிள்ளைகளை வளர்க்கிறார்.

இந்த நிலையில் சிறையிலிருந்து சரத்குமார் வெளியே வருகிறார். அவரிடம் பிள்ளைகள் முகம் கொடுத்துப் பேச மறுக்கிறார்கள். இதனால் வெறுத்து மீண்டும் குடும்பத்தை விட்டுப் போகிறார் சரத். அந்த சமயத்தில் பழைய பகையை மனதில் வைத்து சரத்குமாரைக் கொலை செய்ய நந்தா வருகிறார். அதன்பின்னர் என்ன ஆனது? சரத்குமார் உயிர் பிழைத்தாரா? குடும்பம் ஒன்று சேர்ந்ததா? என்பதே படத்தின் மீதிக்கதை.

விக்ரம் பிரபுவின் நடிப்பு மெச்சுமளவுக்கு சிறப்பாக இருக்கிறது. ஆனால் அவருடைய கேரக்டரைத்தான் மெருகேற்றாமல் விட்டுள்ளார்கள். நாயகி மடோனா செபாஸ்டின் சில காட்சிகளுக்கு மட்டுமே வருகிறார். எந்த கேரக்டர் கொடுத்தாலும் அந்தக் கேரக்டராகவே மாறிவிடும் ஐஸ்வர்யா ராஜேஷ் இதிலும் கலக்கலான நடிப்பைக் கொடுத்துள்ளார்.

படத்தில் இளைய நடிகர்கள் நிறையப் பேர் இருந்தாலும் சரத்குமார்- ராதிகா  ஜோடிதான் மெயின் அட்ராக்‌ஷன். ஒருவேளை நிஜத் தம்பதிகள் என்பதால்தானோ என்னவோ அது நிறையவே ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது. தமிழ் சினிமாவுக்கு நல்ல குணச்சித்திர நடிகராக உருவாகி வருகிறார் இயக்குநர் பாலாஜி சக்திவேல். யதார்த்த மனிதராக வாழ்ந்திருக்கிறார். சாந்தனு, மதுசூதனன், நந்தா ஆகியோரின் நடிப்பு ஓ.கே.

ப்ரீத்தாவின் ஒளிப்பதிவு கதைக்கு பலம் சேர்த்துள்ளது. சித் ராம் இசையில் ‘கண்ணுத் தங்கம்’ பாடல் ரிப்பீட் ரகம் என்றாலும் அதையே படம் முழுக்க ரிப்பீட் பண்ணுவது டூ மச். பின்னணி இசையை நிரப்ப வேண்டிய இடத்தில் குரலை நிரப்பியிருப்பது ஏன் என்று தெரியவில்லை.

இயக்குநர் தனா அப்பா- பிள்ளைகள் உறவு, பழிவாங்கும் கதை என வழக்கமான குடும்பச் சித்திர டெம்ப்ளேட்டில் படம் எடுத்திருந்தாலும் அதை அனைத்து தரப்பும் ரசிக்கும்படியாகக் கொடுத்துள்ளார்.