மிக மிக அவசரம் ஈ.ராமதாஸ்டைட்டில்ஸ் டாக்-150

என்னுடைய வாழ்க்கையில் நான் எதற்கும் மிக மிக அவசரம் என்று நினைத்ததில்லை. சினிமாவுக்கு வருபவர்கள் படிப்பை நிறுத்திவிட்டு அல்லது படித்துக்கொண்டு வாய்ப்பு தேடுவது என்று பல்வேறு சூழ்நிலைகளில் வருவதுண்டு. ஆனால் என் விஷயத்தில் தெள்ளத் தெளிவாக இருந்தேன். எதற்கும் அவசரப்பட்டதில்லை. படிப்பை முடித்துவிட்டுத்தான் சென்னைக்கு வந்தேன்.

எனக்கு இளம் வயதிலிருந்து எழுதுவதில் அலாதி பிரியம்.  என் மனதில் உதிக்கும் நல்ல விஷயங்களை மக்களுக்குச் சொல்ல வேண்டும் என்ற ஆர்வம் சிறுவயதிலிருந்தே இருக்கிறது. பணம், சொத்து சம்பாதிக்க வேண்டும் என்ற விஷயம் இன்றுவரை என் புத்திக்கு எட்டாத காரியம் என்றுதான் சொல்ல வேண்டும்.

எழுதுவது, அது நல்லவைகளாக இருந்தால் மக்களுக்கு பயன் தரட்டும் என்பதுதான் என்னுடைய எண்ணம். பள்ளிக் காலத்தில் என் நண்பர்கள் சதாசிவம், பாஷா போன்றவர்கள் ‘நீ நல்லா எழுதறடா’ என்று என்னை ஊக்கப்படுத்தியதுண்டு.
வாழ்க்கைக்கு படிப்பு அவசியம் என்று வீட்டில் சொல்லிவிட்டதால் கல்லூரியில் சேர்ந்தேன். கவிக்கோ அப்துல்ரகுமான் ஐயா என்னுடைய தமிழ் ஆசிரியர். அவர்தான் என் எழுத்தாற்றலைப் பாராட்டி ‘நீ சினிமாவுக்குப் போ’ என்றார்.

படிப்பு முடிந்ததும் சினிமாவுக்கு வந்துவிட்டேன். அப்போது கண்ணைக் கட்டி காட்டில்விட்ட மாதிரி இருந்தது. ஏனெனில், ஒரு மனிதனை காட்டில் விட்டாலே கஷ்டம் அதிகமாக இருக்கும். இதில் கண்ணைக் கட்டி காட்டில் விட்டால் எப்படியிருக்குமோ அதுபோன்றுதான் என்னுடைய நிலைமை இருந்தது. அப்படி... மேடு, பள்ளங்கள் கடந்துதான் சினிமாவுக்கு வந்தேன்.

சினிமாவுக்கு வந்தால் எப்படிப்பட்ட கஷ்டங்களை அனுபவிக்க வேண்டியிருக்கும் என்று தெரியாமல் இல்லை. அவை அனைத்தும் தெரிந்துதான் சினிமாவுக்கு வந்தேன். அந்த வகையில் எதிர்பார்த்து வந்த விஷயங்களைவிட எதிர்பாராத விஷயங்கள்தான் அதிகமாக நடந்தன.

சில சமயம் நம்மை நாமே பொய் சமாதானம் சொல்லி ஏமாற்றிக் கொள்வோம். சும்மா... சின்ன ஊசி என்று சொல்வார்கள். ஆனால் அது அம்மை ஊசி மாதிரி நாணயம் சைஸுக்கு இடம்பிடித்து மாறாத வடுவாகிவிடும். அந்த மாதிரி பல சம்பவங்கள் என் வாழ்க்கையில் நடந்துள்ளன. அந்த அனுபவங்கள் எல்லாமே வாழ்க்கையில் போராடும் அனைவருக்கும் தவம் மாதிரி என்று சொல்லலாம்.

எழுத்தாளர்களில் சுந்தர ராமசாமியின் ‘ஒரு புளிய மரத்தின் கதை’, கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ உட்பட ஜெயகாந்தன், லா.ச.ரா. போன்றவர்களின் எழுத்துகளும் பிடிக்கும்.ஒளிப்பதிவாளர் நிவாஸ் சாரிடமிருந்துதான் என்னுடைய முதல் சினிமா பயணம் ஆரம்பித்தது. நிவாஸ் சார் மாபெரும் ஒளிப்பதிவு மேதை. ‘16 வயதினிலே’, ‘சிகப்பு ரோஜாக்கள்’ போன்ற சூப்பர் டூப்பர் படங்களுக்கு வேலை பார்த்தவர். ‘சிகப்பு ரோஜாக்கள்’ படத்தில் ரன்னிங் கார் ஷாட்டை மிக அற்புதமாக ஆர்வோ ஃபிலிமில் படமாக்கியிருந்தார்.

அவருடைய திறமையைக் கண்டு வியந்த ஆர்வோ ஃபிலிம் கம்பெனி அவருக்கு கார் வழங்கி கெளரவித்தது. ஏனெனில், அப்போது ஈஸ்ட்மேன் கலரில்தான் அதிக படங்கள் வெளிவரும்.நிவாஸ் சார் இயக்கி தயாரித்த ‘எனக்காக காத்திரு’ படத்துக்கு கதை, வசனம் எழுதினேன். அந்தப் படத்துக்காக என்னை காஷ்மீர், நேபாளம் போன்ற இடங்களுக்கு விமானத்தில் அழைத்துச் சென்றார்கள். அப்போது நான் அடைந்த பரவசத்துக்கு அளவேயில்லை. இனி வாழ்க்கை எங்கேயோ போய்விடும் என்று ஒரு கணம் நினைத்ததுண்டு. விமானம் தரையிறங்கிய மாதிரி அதன்பிறகு என் வாழ்க்கை தரையில் தத்தளித்தது.

ஆனாலும் நான் அவசரப்படவில்லை. என்னுடைய தாரக மந்திரமே  தினமும் இயங்க வேண்டும். எழுதுவதற்கு என்று எப்போது, யார், எங்கு அழைத்தாலும் உடனே சென்றுவிடுவேன்.இயக்குநர் மணிவண்ணன் சாரிடம் ஆறு படங்களில் வேலை செய்திருக்கிறேன். அவரிடமிருந்துதான் சினிமாவுக்கான எழுத்து நடையும், டைரக்‌ஷனும் கற்றுக்கொண்டேன். இயக்குநர் கே.ரங்கராஜ் சாரிடமும் சில காலம் வேலை செய்துள்ளேன்.

அதன் பிறகு நான் இயக்குநராகி இயக்கிய படம் ‘ஆயிரம் பூக்கள் மலரட்டும்’. இதுவரை ஐம்பத்தைந்து படங்களுக்கு வசனம் எழுதியும், ஆறு படங்களை இயக்கியும் உள்ளேன். தொடர்ந்து டைரக்‌ஷன் பண்ண நினைத்தாலும் உடல்நிலை ஒத்துழைக்கவில்லை. டைரக்‌ஷன் என்பது சாதாரண வேலை கிடையாது. அதற்கு என்று தனி எனர்ஜி வேண்டும். அதனால் டைரக்‌ஷனைத்  தொடரமுடியவில்லை. அன்றும் இன்றும் பந்து ஒன்றுதான். என்னால்தான் அடிக்க முடியவிலை.

ஆனால் என்னால் சும்மா இருக்க முடியாது. அதனால்தான் நடிக்க வந்தேன். என்னுடைய இயக்குநர் மணிவண்ணன் சார் பலமுறை என்னை நடிக்கச் சொல்லி வற்புறுத்தியிருக்கிறார். அப்போதெல்லாம் அவர் சொன்னதைத் தட்டிக் கழித்திருக்கிறேன்.

இயக்குநர் சரண் பிடிவாதமாக ‘வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்’ படத்தில் நடிக்க வைத்தார். நடிகராக கிட்டத்தட்ட ஐம்பது படங்களை நெருங்கிவிட்டேன்.
சினிமாவுக்கு இப்போது நிறைய இளைஞர்கள் வருகிறார்கள். அவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது... நிறைய படியுங்கள். படங்களைப் பார்ப்பதைவிட இலக்கியம், நாவல் என்று அனைத்தையும் படியுங்கள். மூச்சுப் பயிற்சிக்கு யோகா உதவுதுபோல் சினிமாவுக்கு படிப்பு மட்டுமே கற்பனை வளத்தை அதிகமாக்கும். புதிய சிந்தனைகள் தோன்றும்.

நம் சிந்தனை சரியா, தவறா என்று முடிவு எடுக்க உதவும். வாசிப்பு ஒரு படைப்பாளிக்கு ஆக்சிஜன் மாதிரி. நான் சொல்லும் விஷயத்தை உணர்ந்தால்தான் புரியும். புத்தகத்தை கையில் எடுத்து பக்கத்தை புரட்டும் பழக்கத்துக்கு ஈடு இணை எதுவுமில்லை. ஆண்ட்ராயிட் போனில் படிப்பது வேறு மாதிரி அனுபவம். கிளி ஜோசியர் தினமும் கிளி, சில நெல்மணிகளை எடுத்துக்கொண்டு தன்னம்பிக்கையுடன் கிளம்புவது மாதிரி நம்பிக்கையோடு தேடினால் சாதிக்கலாம்.

நாட்டில் சில தவறான பிரச்சாரங்களால் குழப்பங்கள் நிலவுகிறது. நம் நாடு அமைதியான நாடு. அப்படிப்பட்ட நாட்டின் மீது சிலர் கல்லெறிகிறார்கள். யாரையும் நான் குறை சொல்லவில்லை. ஆனால் சுயநலத்துக்காக ஆளாளுக்கு பேசி குழப்பத்தை ஏற்படுத்துகிறார்கள். இந்த நிலை மாறும் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஆனால் இப்போது இதை தேவையில்லாத ஒன்றாகவே பார்க்கிறேன்.

இப்போது நாட்டுக்கு மிக மிக அவசரம் எது என்றால் மத நல்லிணக்கம், அமைதி மட்டுமே. அவரவர் கடவுள்களை அவரவர் வணங்க வழிவிட வேண்டும். எல்லோரும் நம் சகோதரர்கள் என்பதை மறந்துவிடக் கூடாது. சக மனிதனிடம் பழகும்போது இவனும் என்னைப் போல் ஒருவன் என்ற உணர்வு வரவேண்டும்.

தொகுப்பு : சுரேஷ்ராஜா

(தொடரும்)