சீறுசீறும் சிறுத்தை!

மயிலாடுதுறையில் கேபிள் டிவி நடத்தி வருகிறார் ஜீவா. ஊர் முழுக்க பிரபலம். இந்த டி.வி. சேவை மூலம் நிறைய சமூகப் பணிகளைச் செய்வதால் இவருக்கு நிறைய நண்பர்கள் கிடைக்கிறார்கள். யாராவது நண்பன் என்று அழைத்தால் அவர்களுக்காக எதையும் செய்யத் தயங்கமாட்டார். இவரின் நேர்மையால் அந்த ஊர் முக்கிய பிரமுகர் பாதிக்கப்படுகிறார்.

ஒரு கட்டத்தில் ஜீவாவைத் தீர்த்துக்கட்ட சென்னையில் உள்ள தாதா வருணை மயிலாடுதுறைக்கு வரவைக்கிறார். ஜீவாவைக் கொல்ல வரும் வருண் அப்போது ஜீவாவின் தங்கை பிரசவத்துக்கு முதலுதவி செய்து உதவுகிறார்.   அந்த சமயத்தில் வருணையும், ஜீவாவையும் பிரபல வக்கீல் நவ்தீப் கொலை செய்ய முயற்சிக்கிறார். அது ஏன்? நவ்தீப்பிடமிருந்து வருணும், ஜீவாவும் தப்பித்தார்களா, இல்லையா என்பது மீதிக் கதை.

‘தெனாவட்டு’,‘ரௌத்திரம்’ போன்று பழைய ஜீவாவாக இதில் வருகிறார் ஜீவா. ஸ்மார்ட்டாகவும் இருக்கிறார். தன்னைக் கொல்ல வரும் வில்லன்களிடம் ப்ளட் குரூப் கேட்பது, வில்லன்களை ஒன்றரை டன் எடையில் குத்துவது என்று ஆக்‌ஷனில் கெத்து காட்டியிருக்கிறார். தங்கை பாசத்துக்கு தனி மார்க் கொடுக்கலாம்.

நாயகி என்று ஒருவர் இருந்தாரா என்று கேட்டால்தான் நாயகியைப் பற்றித் தெரியும். அந்தளவுக்கு நாயகிக்கு முக்கியத்துவம் இல்லாத கேரக்டரில் வருகிறார் ரியா சுமன். பின்குறிப்பு: இவருக்கு டூயட்டும் உள்ளது.ஜீவாவின் தங்கையாக வரும் அபிராமி மற்றும் கிராமத்து சாதனை மாணவி சாந்தினி இருவரின் நடிப்பும் அமோகம்.

இதில் சாந்தினி ஒருபடி அதிகம். இவருடைய முடிவு பரிதாபமாக இருந்தாலும் அவருடைய தோழிகள் எடுக்கும் புரட்சிகரமான முடிவை வரவேற்கலாம். ரயில்வே ஸ்டேஷனில் ஒரு பெண்ணைத் தாக்கும்போது யாரும் அவளைக் காப்பாற்ற வரவில்லை. இங்கே பெண்களுக்கு எந்த பாதுகாப்பும் இல்லை என அவர்கள் பேசும் வசனங்கள் ஒவ்வொன்றும் நெத்தியடி.

காமெடி காட்சியில் சதீஷ்  இன்னும்கூட இன்புட் கொடுத்திருக்கலாம்.  மல்லி கேரக்டரில் மினி வில்லனாக வரும் வருண் நடிப்பில் கில்லியாக இருக்கிறார். இவருக்கு சிறப்பான எதிர்காலம் இருக்கிறது. ஸ்டைலீஷ் வில்லனாக நவ்தீப் மிரட்டியிருக்கிறார். ஆனால் வேலைதான் குறைவு.

இமானின் இசை நன்று. குருமூர்த்தி பாடியுள்ள ‘செவ்வந்தியே… மதுவந்தியே.. பாடல் நீண்ட நாட்களுக்கு மனதில் ரீங்காரமிடும்.

ஒளிப்பதிவாளர் பிரசன்னா கே.குமார் தன் வேலையை சரியாகச் செய்துள்ளார். இயக்குநர் ரத்னசிவா கதை சொல்லப்போகிறேன் என்று ரிஸ்க் எடுக்காமல் ஆக்‌ஷன், காதல், காமெடி, சென்டிமென்ட் என்று பக்கா கமர்ஷியல் சினிமா கொடுத்துள்ளார். மொத்தத்தில்... இந்த ‘சீறு’ சும்மா சீறுது..!