அதோ அந்த பறவை போல...





தீர்மானங்கள் அற்ற பயணங்கள் மிக இனிமையானவை. எந்த நோக்கமும் இல்லாமல்(?) பயணத்துக்காக ஒரு பயணம் அமைவது கொடுப்பினை. இந்த உலகத்தின் பெரும்பாலான கண்டுபிடிப்புகள் பயணத்தின் வழியாக நமக்குக் கிட்டிய பலன்களே. கடலோடும் விருப்பத்தில், போகுமிடம் வெகு தூரமில்லை என வாழ்வின் சுவாரஸ்யத்துக்காக புறப்பட்டுச் சென்ற கடலோடிகளே புதுப்புது நாடுகளைக் கண்டறிந்தார்கள்... மக்களைக் கண்டறிந்தார்கள்... பண்பாட்டைப் பகிர்ந்து கொண்டார்கள். ஏசு கிறிஸ்து நம்மை ரட்சிக்க வந்ததும், அல்லாவின் கிருபை நமக்குக் கிடைத்ததும், மகிழ்ச்சியான வாழ்வின் ரகசியத்தை புத்தர் கடல் கடந்து போய் சொல்லி வாழ்விப்பதும் பயணங்களால் நடந்தவையே.

பழங்காலத்தில் உலக நாடுகளை சுற்றக் கிளம்பிய பயணிகளின் பயணங்கள் இப்போது உள்ளதைப் போல பாதுகாப்பு நிரம்பியதும், அதிக சிக்கலில்லாததும், வசதியானதுமானதும் அல்ல. கப்பலில் கிளம்பும் யாரும் நிச்சயம் தங்கள் நாட்டிற்குத் திரும்புவோம் என்ற நம்பிக்கை அற்றே கப்பலில் கால் வைத்திருக்கக் கூடும். மரணம் நேரலாம் என்று தெரிந்த பிறகும் அவர்கள் எப்படி அவ்வளவு துணிச்சலாக நாடுகளைக் கடந்தார்கள்? அதுதான் பயணத்தின் சுவாரஸ்யமே!
சீனப் பயணி யுவான்சுவாங் தன் நாட்டிலிருந்து கிளம்பி, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் பயணித்து, மீண்டும் தன் நாட்டுக்குத் திரும்ப 17 ஆண்டுகள் ஆனது. பௌத்த மதத்தின் உண்மையான கோட்பாடுகளை அறிந்து கொள்ளவும், பௌத்த நூல்களின் மூலப்பிரதிகளைத் தேடியுமே அவரின் இப்பயணம் இருந்தது. பயணம் தொடங்கிய கணத்தில் இருந்து ஊர் திரும்பிய நாள் வரை அவர் உயிரோடு மீண்டு செல்வார் என்பதை அவரே நம்பியிருக்க மாட்டார். அக்காலச் சூழ்நிலை அவ்விதம். ஆனால், அறிவின் மீது கொண்ட தீராக் காதல் அவரைப் பயணம் செய்ய வைத்தது.

அறிவைத் தேடி பிற நாடுகளுக்குப் புறப்பட்டவர்கள், பின் செல்வம் தேடி புறப்பட்டார்கள். செல்வம் நிரம்பிய நாடுகள் பயணிகளுக்கு வியாபார ஆசையைத் தூண்டின. வியாபாரம் பல நாடோடிகளைக் கொள்ளைக்காரர்களாகவும், பல நாடோடிகளை நாடு பிடிக்கும் வன்முறையாளர்களாகவும் மாற்றியது. பயணம், ஆக்கவும் செய்தது; அழிக்கவும் செய்தது.

நவீன உலகில் பயணம் என்பது அதன் பல பரிமாணங்களில் அத்தியாவசியமான ஒன்றாகி விட்டது. அன்றாடத் தேவையாகிவிட்டதாலேயே பயணத்தின் அருமையையும் நாம் மறந்து போகிறோம். நவீன போக்குவரத்து வசதிகள் கண்டுபிடிக்கப்படாத காலத்தில் பயணம் என்பதே மிக ஆபத்தானது. ஆனால், அதைப் பொருட்படுத்தாமல் விதவிதமான காரணங்களுக்காக உலகம் முழுவதும் மனிதர்கள் தீவிரமாகப் பயணம் செய்திருக்கிறார்கள். இன்று அனைத்து வசதிகளுடனான பயணம் நமக்கு சாத்தியமாகி உள்ளது என்றாலும் நம் பயணங்களின் நோக்கங்கள் மிக எளிமையாகிவிட்டன.

பயணம், பயணம் செய்கிற எல்லா நேரத்திலும் நம் மனசை புதுசாக்கி விடக் கூடியது.
‘தினம் வேலைக்குச் செல்வதற்காக மாநகரப் பேருந்தில் பயணம் செய்து பாருங்கள்... பயணம் இனிமையானது என சாகும்வரை சொல்ல மாட்டீர்கள்...’
 படிக்கும் ஒவ்வொருவரும் இப்படி முனகுவது காதில் விழுகிறது. அதைப் பயண வகைமை யிலேயே நாம் சேர்த்துக்கொள்ள வேண்டாம். அந்தப் பயண நேரங்களில் நாம் நம்மை மனிதர்களாகக்கூட நினைத்துக் கொள்ள முடியாது.

நம் வாழ்வின் துரதிர்ஷ்டம்... நமக்கு இயந்திரத்தனமாகிவிட்ட பயணங்களே வாய்க்கின்றன. வரலாற்றுப் பயணங்களின் பெருமைகள் இருக்க, நம் சாதாரணப் பயணத்தின் கீழ்மையைப் பற்றி கொஞ்சம் பேசலாமா? தினம் கோடிக்கணக்கான மக்கள் பயணம் செய்யும் பேருந்துப் பயணத்தின் அவஸ்தைகள் சராசரி மக்களின் வாழ்வின் ஒரு அங்கமாகவே ஆகிவிட்டன.
பொதுவாகவே பொது இடங்களில் ஒவ்வொரு மனிதர்களுக்கான மரியாதையும் வெகுவாகவே குறைந்துவிட்டதாக நினைக்கிறேன். சாக்கடையில் கால் பதியாமல், அசிங்கம் எதையும் மிதித்துவிடாமல் வெகு எச்சரிக்கையாக நடந்து செல்வதைப்போல வெளியில் சென்று திரும்பும் வரை எந்த அவமரியாதையும் நமக்கு நேர்ந்துவிடக்கூடாது என்ற பதற்றம் எல்லாருக்குமே உள்ளது.

மக்களை மதித்தல் என்பது நம்முடைய சமூக நிறுவனங்களுக்கு அந்நியப்பட்ட ஒன்றாகிவிட்டது. பேருந்து நிறுத்தத்தில் காத்துக் கொண்டிருப்போம். பேருந்து மிகச்சரியாக 10 அடி, 20 அடி தள்ளி நிற்கும். தூசிகளுடன் சேர்ந்து பெருந்திரளான மக்களும் பேருந்து பின்னால் ஓடுவார்கள். இப்படி ஓடி ஓடி பழக்கப்பட்ட மக்கள் எச்சரிக்கையாக முன்கூட்டியே 20 அடி முன்னால் தள்ளி நிற்க பேருந்து இன்னும் முன்னால் தள்ளி நிற்கும். கடைசியில் நிறுத்தத்தில் நிழலுக்காக போடப்பட்ட தகரப் பலகையில் ஒதுங்குவதற்கு நாய்கள் கூட இருப்பதில்லை.

நின்ற பேருந்தை கையில் உள்ள மூட்டை முடிச்சுகள், குழந்தை எதுவும் விழுந்துவிடாமல் கெட்டிக்காரத்தனமாக விரட்டி அடித்து ஏறுவதே பெரும் சாதனை. இருக்கைக் கிடைத்து உட்கார்ந்துவிட்டால் பெரும் நரகத்திலிருந்து காப்பாற்றப்பட்ட அதிர்ஷ்டசாலிகளாவோம். நின்று கொண்டு பயணம் செய்யும் போது ஆண்களால் சூழப்பட்டிருந்தால்... அய்யோ... சொல்லவே முடியாது. அவமானத்தின் உச்சங்கள் அரங்கேறும்.

ஆண்கள் என்றால் முன்னால் நகருங்கள், பின்னால் நகருங்கள் என்ற தள்ளுமுள்ளுச்
சிக்கல்கள்தான். பெண்கள் என்றால்?
இப்பொழுதெல்லாம் ஆண், பெண் வித்தியாசம் இல்லாமல் எல்லாரும் முதுகில் சுரக்குடுவை போன்ற ஒரு பையை மாட்டிக் கொண்டிருக்கிறார்கள். அந்த பைக்குள் எல்ல்ல்ல்லாம் வைத்துக் கொள்ளலாம். பொருட்களின் அளவு கூடக் கூட ஒரு மலையேறியின் மூட்டை அளவுக்கு பெருத்துக் கொண்டே இருக்கும். மிக வசதியான பையே அது. சீனப்பயணி யுவான் சுவாங்கின் பின்புறம் தொங்கும் பையின் வடிவத்தை நினைவூட்டக் கூடியது.

இத்தனை சிறப்பம்சங்கள் இருந்தாலும் அந்தப் பையைக் கொண்டாட முடியவில்லை. காரணம் அதன் ராட்சஸத்தனமான தாக்குதலே. ஒவ்வொருவருக்கும் போதுமான இடைவெளியே இல்லாமல் பயணம் செய்ய நிர்பந்திக்கப்பட்டுள்ள இந்தியர்களாகிய நம்மை அது இரக்கமே இல்லாமல் எண்திசைகளில் இருந்தும் தாக்குகிறது. தன் முதுகில் வசதியாக மாட்டிக்கொண்டு பேருந்தில் ஏறும் பயணி அதன் நீள, அகல பரிமாணங்களைக் கணக்கில் கொண்டு முன்பின் நகர்வதில்லை.

அவருக்குப் பின்பக்கம் நிற்கும் எல்லாரையும் இரக்கமேயில்லாமல் முதுகில், கழுத்தில், வயிற்றில் என்று அந்தப் பை தாக்கிக்கொண்டு இருக்கும். அது குறித்த பிரக்ஞையே இல்லாமல் அவர் வேகமாக அங்கும் இங்கும் கடந்து, நம் முகத்தை கடுமையாகத் தாக்கிவிட்டு நின்று கொண்டிருப்பார். நாம் வலியில் அவர் முகத்தைப் பார்க்க, ஏன் இவ்வளவு கேவலமாகப் பொது இடத்தில் முகத்தைச் சுளித்துக் கொண்டு நிற்கிறார்கள் என்பதுபோல அவர் நம்மைப் பார்த்துக் கொண்டு நிற்பார்.

பெண்களுக்குப் பேருந்தில் இதுதான் பிரச்னை என்று வரையறுக்கவே முடியாது. வினாடிக்கு வினாடி இது மாறும். வேண்டுமென்றே உரசுகிறார்களா, பேருந்தின் சீரற்ற வேகத்தால் தெரியாமல் உரசுகிறார்களா, நம்மைப் பார்க்கிறார்களா, நம்மைப் பார்ப்பதுபோல வேறெங்கோ பார்க்கிறார்களா, பணத்தைப் பறிக்கப் போகிறார்களா, தன்மானத்தைப் பறிக்கப் போகிறார்களா என்று புரியாத குழப்பத்திலேயே சுற்றி நிற்கும் ஆண், பெண் எல்லாரையும் எதிரிகளாக்கி, மனசுக்குள் ஒரு பெரும் போராட்டம் நடக்கும். ஸ்நேகமாக ஒருவரையும் பார்த்து சிரித்துவிட முடியாது.

நம் காலின் மேல் யார் காலோ நிற்க, நம் புடவையையோ துப்பட்டாவையோ இறங்கும் ஒவ்வொருவரும் தன் கையோடு இழுத்துச் செல்ல பேருந்து பயணத்தில் ஒரு பயணப் பையை விட அதிகமாக மனிதர்கள் கேவலப்பட வேண்டியுள்ளது. பயணப்பைகளுக்குகூட பாதுகாப்பான இடம் கிடைத்துவிடும். எங்காவது இருக்கையின் அடியிலோ, இருக்கைக்கு மேலோ, இன்னும் அப்பிராணியாக இருக்கும் யாரோ ஒருவரின் மடியிலோ இடம் பிடித்து உட்கார்ந்து கொள்ளும்.

இந்தியா போன்ற மக்கள் தொகை மிகுந்த நாட்டில் இதையெல்லாம் அவமானம் என்று எடுத்துக்கொள்ள ஆரம்பித்தால் நமக்கு வாழ்வதற்கு தகுதியில்லை என்று ஆகிவிடும். ஆனால், அதிகமாக மூச்சுத்திணறும்போது சுவாசத்திற்காக தலையை மேலே தூக்கி லேசாக வாயைத் திறந்து சுவாசித்துக் கொள்ளும்போது பக்கத்தில் இன்னோவா போன்ற பெரிய வாகனத்தில் ஒரே ஒருவர் பயணம் செய்வதும், ஏசி பேருந்தில் காதில் ஹெட்போனுடன், தாங்களே இந்த நகரத்தின் மரியாதைக்குரிய பிரஜைகள் என்ற தோரணையுடன் செல்பவர்களையும் பார்த்துவிட நேரும். அப்போது மட்டும் கொஞ்சம் லேசாக வலிக்கும்.

இப்போதெல்லாம் பணம் இருந்தால்கூட எல்லாருக்கும் எல்லாமும் கிடைப்பதில்லை. பணம் மட்டுமே சமூக ஏற்றத்தாழ்வை உருவாக்கிக் கொண்டிருக்கவில்லை என்ற உண்மையை மார்க்ஸை கூப்பிட்டுச் சொல்லத் தோன்றுகிறது. இதற்கெல்லாம் பதிலும் தீர்வும் இருக்கிறதா என்று அவரை காபி ஷாப்பில் உட்கார வைத்துக் கேட்கலாம்போல
இருக்கிறது.

விழாக் காலங்களில் சாதாரணப் பேருந்துகளில் செல்வதைப் போல தண்டனை வேறொன்றுமே கிடையாது. தீபாவளி, பொங்கல் விடுமுறை நாட்கள், 34 நாட்கள் சேர்ந்தார் போல வரும் விடுமுறை நாட்கள், சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் குடும்பத்தோடு பயணம் செய்வது... ப்பா... அதை அனுபவிப்பவர்களுக்கே தெரியும். இன்னும் ஏன் நமக்கு இந்த அவலம்? இவை போன்ற அடிப்படை வசதிகளில் தன்னிறைவு பெறாமல் இருக்க என்ன காரணம்? ஏன் ஒரு மனிதருக்கான மரியாதையான இருப்பு சமூகத்தின் பொதுவெளியில் இன்னும் ஏற்படுத்தப்படாமல் இருக்கிறது?
நீண்ட தூர பயணப் பேருந்து என்றால் இந்த அவஸ்தைகளைப் பற்றி தனிப் புத்தகமே எழுதலாம். பேருந்துகளின் உள்கட்டமைப்புகள் இப்போது வெகுவாக நவீனப்படுத்தப்பட்டு விட்டன. முன்புபோல ஒழுகும் பேருந்துகள் நிறைய கிடையாது. பயண அவஸ்தைகள் மட்டும் அப்படியே. பயணத்துக்கு இடையில் ஆசுவாசப் படுத்திக் கொள்வதற்காக பயணவழி உணவகங்களில் நிறுத்துவார்கள். பயண வழியா, மரண வழியா என்று குழப்பமாக இருக்கும். உணவகம் வரப்போவதை அரை கிலோமீட்டருக்கு முன்பாகவே உணர்ந்து கொள்ளலாம்... அதன் சிறுநீர் வாடையை கொண்டு. உள்ளே நுழையும் முன் காதைக் கிழிக்கும் பாடல்கள் சிறுநீர் வாடையே தேவலாம் என நினைக்க வைக்கும்.

இந்த உணவகங்களுக்கு என்று யார்தான் பாடல்களை தேர்வு செய்து தருகிறார்களோ... காதில் ரத்தம் வரும். பசியில்லாதவர்களும் சாப்பிட விருப்பமில்லாதவர்களும் பேருந்துக்குள்ளே உட்கார்ந்திருப்பார்கள். ஆனால், பேருந்தின் இரண்டு பக்கத்திலும் பலம் கொண்ட மட்டும் ஒருவர் வேகமாக அறைந்து தட்டித்தட்டி, ‘டீ சாப்பிட்றவங்க சாப்பிடலாம், டிபன் சாப்பிட்றவங்க சாப்பிடலாம்...’ என கத்திக்கொண்டே இருப்பார். தூங்குபவர்களும் குழந்தைகளும் அலறி அடித்து விழிப்பார்கள்.

இந்த உணவகங்களை சுகாதார ஆய்வுக்கு உட்படுத்தினால் அங்குள்ள எந்த உணவுப் பொருளையும் நாம் சாப்பிட முடியாது. 5 விரல்களையும் உள்ளே விட்டு ஒரே நேரத்தில்
3 டம்ளர்களில் தண்ணீர் கொண்டு வருவார்கள். பெரும்பாலும் அங்கு கை, கால் சுத்தமாக உள்ளவர்களைப் பார்க்கவே முடியாது. நள்ளிரவுகளிலும், இடைவிடாத நீண்ட பகலிலும் வேலை பார்த்து ஓய்ந்த அவர்கள் உணவை அன்பாகப் பரிமாறுவார்கள் என்பதை எதிர்பார்க்கவே முடியாது. சட்டென மேசை மேல் வைக்கப்படும் தட்டுச் சத்தமும், கொஞ்சம் ஏமாந்தால் நம் உடையில் தெறித்து விடக்கூடிய உயரத்தில் இருந்து அவர்கள் சாம்பாரையும் சட்னியையும் ஊற்றும் விதத்திலும் அந்த உணவை கொலைப் பசி இல்லை என்றால் சத்தியமாக சாப்பிட முடியாது. பல நேரங்களில் சாம்பார் வாளியை பக்கத்தில் வைத்துவிட்டு தலையை சொறிந்து கொண்டு, வெளியில் நிற்பவர்களையும் உள்ளே வரும் புதிய பேருந்துகளையும் வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்து விடுவார்கள். காம்பு நுனி வரை சாம்பாராக இருக்கும் அந்த கரண்டியை எங்கு பிடிப்பது என்று பயந்துகொண்டே பல நேரங்களில் அப்படியே சாப்பிட்டு எழுந்துவிட வேண்டியதுதான்.

பயணவழி உணவகங்களுக்கு என்று விலை நிலவரங்களே வேறுதான். பிஸ்கெட் பாக்கெட்டுகளின் மேல் கூட்டி விற்கப்படும் குறைந்தபட்சம் 2 ரூபாயில் தொடங்கி 30 ரூபாய்க்கு விற்கப்படும் இளநீர் வரை அங்கு எல்லாமே அதிக விலைதான் (அங்கு குடித்த இளநீர் ஒருநாள்கூட இனிப்பாக இருந்ததாக எனக்கு நினைவே இல்லை). சிறுநீர் கழிக்கக்கூட ஒவ்வொரு உணவகத்தில் ஒவ்வொரு கட்டணம். 3 ரூபாய் தொடங்கி 5 ரூபாய்வரை தர வேண்டியுள்ளது.

எல்லாப் பயணங்களிலும் பெண்களை முறைத்துப் பார்ப்பதற்கு என்றே சிலர் கட்டாயம் வந்துவிடுகிறார்கள். வயது வரையறை கிடையாது. கல்வித் தகுதியை சொல்ல முடியாது. சமூக அந்தஸ்தை குறிப்பிட முடியாது. சாதிய வேறுபாடு கிடையாது. ஒரே தகுதி வக்கிரமான முகம் இருப்பதே. முறைத்துப் பார்த்துக் கொண்டிருப்பவர்களின் உடல் மொழியும் அசைவுகளும் ஆபாசத்தின் உச்சங்கள். பாலியல் வன்கொடுமையென வகைப்படுத்தப்படாத அத்துமீறல்கள்.

இவ்வளவு நொம்பலங்களுக்கு இடையில்தான் நாம் தீபாவளிக்கும் பொங்கலுக்கும் நம் பிறந்த வீடுகளுக்குப் பயணம் செய்கிறோம். வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்கிறோம். திருவிழாக்களுக்கு வேண்டுதல்கள் செய்துகொண்டு தயங்காது குடும்பத்துடன் கலந்து கொள்கிறோம். துக்க வீடுகளுக்குச் சென்று துக்கம் விசாரிக்கிறோம். வாழ்வின் நல்லது, கெட்டது எல்லாவற்றையும் அனுபவிக்கிறோம்.

பயணமும் வாழ்க்கைபோல ஆகிவிட்டது...
நல்லதும் கெட்டதுமாக...
(நிறைய பேசுவோம்...
நிறைவாக பேசுவோம்!)

பயணம், பயணம் செய்கிற எல்லா நேரத்திலும் நம் மனசை புதுசாக்கி விடக் கூடியது.

விழாக் காலங்களில் சாதாரணப் பேருந்துகளில் செல்வதைப் போல தண்டனை வேறொன்றுமே கிடையாது.