பாதசாரிகளுக்கு பாதுகாப்பு இருக்கிறதா?..





அதிக மக்கள்தொகை கொண்ட சீனாவில் மாதம் ஒரு நாள் வாகனங்களை இயக்க தடை கொண்டு வரப்பட்டிருக்கிறது. இதன் மூலம் எரிபொருளும் சேமிக்கப்படுகிறது... மாசும் குறைக்கப்படுகிறது.
ஏற்கெனவே சைக்கிள் போக்குவரத்தில் முன்னணியில் இருக்கிறது சீனா. ஜெர்மனி உள்பட ஐரோப்பாவின் பல பகுதிகளில் ஏராளமானோர் வயது வித்தியாசமின்றி சைக்கிளையே பயன்படுத்துகிறார்கள். இந்தியாவுக்கு வருவோம்... சமீபகாலமாக மத்திய அமைச்சர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ரயில் போன்ற பொதுமக்கள் பயன்படுத்தும் வாகனங்களில் பயணம் செய்து கவனம் ஈர்க்கிறார்கள். நல்ல விஷயம்தான்... இருக்கட்டும். ஆனால், இந்தியாவில் பாதசாரிகளுக்கோ, சைக்கிள் பயணிகளுக்கோ பாதுகாப்பு இருக்கிறதா?

இன்று உலகம் முழுவதும் எரிபொருள் தேவை அதிகரித்து வருகிறது... அதற்கேற்ப இருப்பு குறைந்து வருகிறது. இன்னொரு பக்கம் அளவுக்கு அதிக எரிபொருள் பயன்பாட்டால் சுற்றுச்சூழல் மாசு அடைந்து வருகிறது. இந்தப் பிரச்னைகளைச் சமாளிக்க பல்வேறு நாடுகளும் ஆர்வத்துடன் தீர்வுகளைத் தேடிக்கொண்டிருக்கின்றன.

சில ஆண்டுகளுக்கு முன் இருந்த நடை பாதைகள் எல்லாம் இன்று எங்கே போயின? முன்பை விட சாலைகள் அகலப்படுத்தப்பட்டிருக்கின்றன. ஆனால், நடந்து செல்வதற்கான வசதியை அழித்துவிட்டன. நடந்து செல்பவர்கள் தட்டுத்தடுமாறி, வாகனங்களுக்குப் பின்னால் நின்றோ, கெஞ்சியோதான் சாலையைக் கடக்க வேண்டியிருக்கிறது. இந்தியாவில் அதிக சாலை விபத்துகளில் பலியாகிறவர்கள் இந்தப் பாத சாரிகளும் சைக்கிள் ஓட்டிகளும்தான். பகலிலேயே சாலைகளைக் கடக்க அச்சமாக இருக்கிறது... இரவு நேரங்களில் சொல்லவே வேண்டியதில்லை.



சுனிதா நரைன்... இந்தியாவின் மிக முக்கியமான சுற்றுச்சூழல் ஆர்வலர். 1982ல் இருந்து அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தில் பணிபுரிந்து வருகிறார். இப்போது இந்த மையத்தின் டைரக்டர் ஜெனரலாகவும் ‘டவுன் டு எர்த்’ பத்திரிகையின் பதிப்பாளராகவும் எழுத்தாளராகவும் இருக்கிறார் சுனிதா. காற்று மாசு, மழைநீர் சேகரிப்பு, நீர் மற்றும் உணவு பாதுகாப்பு போன்ற பல்வேறு சூழலியல் பிரச்னைகளில் கவனம் செலுத்தி, போராடி வருகிறார். சுற்றுச்சூழல் விழிப்புணர்வுக்காக உலக நாடுகளின் பல்வேறு விருதுகளையும் பாராட்டு களையும் பெற்றிருக்கிறார். இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருதும் இவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

சுனிதா தான் சொல்வதையும் எழுதுவதையும் தன் வாழ்க்கையிலும் செயல்படுத்தக்கூடியவர். கடந்த முப்பதாண்டுகளுக்கும் மேலாக சைக்கிளிலும் கால்நடையாகவுமே பயணம் செய்துகொண்டிருந்தார்.
சமீபத்தில் டெல்லியில் அதி காலையில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது ஒரு கார் வேகமாக மோதியது... மோசமான விபத்து... முகம், தோள்பட்டைகளில் பலத்த காயங்கள். எட்டரை மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து, சுனிதாவைக் காப்பாற்றியிருக்கிறார்கள் எய்ம்ஸ் மருத்துவர்கள். ஆபத்து விலகினாலும் சுனிதா பழைய நிலையை அடைய இன்னும் காலம் பிடிக்கும்.

சுற்றுச்சூழலில் ஆர்வம் இருப்பதாகச் சொல்லிக்கொண்டு, சிலபல நடவடிக்கைகளில் இறங்கும் அரசாங்கம், உண்மையில் ஏழை, எளியவர்களையும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களையும் எந்த இடத்தில் வைத்திருக்கிறது?
ஐரோப்பிய நாடுகளில் அகலமான சாலைகள் மட்டுமல்ல... நடந்து செல்பவர்களுக்காக வசதியான நடைபாதைகளை அமைத்திருக்கிறார்கள். மரங்கள் சூழ்ந்த அப்பாதையில் நடப்பதே ஓர் இனிய அனுபவம். நீண்ட தூரம் நடந்து செல்லும்போது களைப்பு ஏற்பட்டால் ஆங்காங்கே அமர்ந்து இளைப்பாற, சாலை ஓர பெஞ்சுகளும் இருக்கின்றன. நமக்கோ நடக்கவே இடம் இல்லை. வாகனங்களில் செல்பவர்களுக்காகத்தான் சாலைகள் அகலப்படுத்தப்படுகின்றன... மேம்பாலங்கள் கட்டப் படுகின்றன. நடந்து செல்பவர்கள் பல படிகளை ஏறி நடை மேம்பாலங்களைக் கடக்க வேண்டியிருக்கிறது... மாற்றுப் பாதைகளை நாட வேண்டியிருக்கிறது. வயதானவர்களின் நிலை இன்னும் மோசம்.

ஒரு நாட்டின் முன்னேற்றம் என்பது பல தரப்பு மக்களுக்கும் பயன் அளிப்பதாக இருக்க வேண்டும். வசதி படைத்தவர்களுக்கு இன்னும் என்னென்ன வசதிகளைச் செய்து கொடுக்கலாம் என்று சிந்திக்கும் அரசாங்கம்தானே இங்கு இருக்கிறது?
நடப்பவர்களையும் சைக்கிளில் செல்பவர்களையும் மதிப்பதன் மூலமும், அவர்களுக்கு வசதியான சாலைகளை அமைப்பதன் வாயிலாகவும் இந்தியா வின் சுற்றுச்சூழலை நிச்சயம் காப்பாற்ற முடியும்... எரிபொருள் சிக்கனத்தையும் அடைய முடியும்!
இந்த சைக்கிளுக்கு யார் மணி அடிப்பது?   

சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது ஒரு கார் வேகமாக மோதியது...
மோசமான விபத்து... எட்டரை மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து, சுனிதாவைக் காப்பாற்றி
யிருக்கிறார்கள்...