சக்தி!





‘‘பெண் சக்தி படைத்தவள். அதுவே கல்வி கற்ற பெண்ணாக இருந்தால் அதீத சக்தி பெற்றவள். தலிபான்கள் இந்தச் சக்தியைக் கண்டுதான் பயப்படுகிறார்கள். கல்வி  பெற்ற பெண்கள் மூலம் இந்தச் சமுதாயமே முன்னேறி விடும் என்ற அச்சத்தில்தான், ‘சமைத்துப் போடுவதும் குழந்தைகள் பெற்றுக்கொள்வதுமே பெண்ணின் கடமையாக இருக்க வேண்டும்’  என்று நினைக்கிறார்கள். தலிபான்கள் என்னைச் சுட்ட பிறகு பயம் என்னை விட்டு ஓடிவிட்டது... அவர்கள்தான் இப்போது பயப்படுகிறார்கள்!’’
 மலாலா யூசஃப்சாய்

பெண் கல்விக்காகப் போராடி வந்த மலாலா, 2012
அக்டோபர் 9 அன்று பள்ளியிலிருந்து திரும்பி வரும்போது தலிபான்களால் சுடப்பட்டார். இங்கிலாந்தில் சிகிச்சைப் பெற்று, இப்போது அங்கேயே கல்வி பயின்று வரும்  மலாலா, உலகம் முழுவதும் உள்ள இளைஞர்களின், பெண்களின், குழந்தைகளின் ரோல் மாடலாகத் திகழ்கிறார்.

பயங்கரவாதிகளின் குண்டு மலாலாவின் உருவத்தைச் சிறிது மாற்றியிருக்கிறதே தவிர, அவர் உள்ளத்தை மேலும் மேலும் வலுப்படுத்தியிருக்கிறது. தன்னுடைய அனுப வங்களை ஒரு புத்தகமாகவே எழுதிவிட்டார் மலாலா. ‘ஐ ஆம் மலாலா’ என்ற அந்தப் புத்தகம் உலகம் முழுவதும் பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது. அமெரிக்க  அதிபர் ஒபாமாவுக்கும் பிரிட்டிஷ் ராணி எலிஸபெத்துக்கும் தான் கையெழுத்திட்ட பிரதியைக் கொடுத்திருக்கிறார் மலாலா. அமெரிக்காவிலுள்ள ஜார்ஜ் வாஷிங்டன் பல்க லைக்கழகம் இந்நூலைப் பயன்படுத்தி புதிய பாடத்திட்டத்தை வடிவமைத்து வருகிறது.

இந்த ஓராண்டில் உலகம் முழுவதும் பல கோடி மக்களின் அன்பையும் ஆதரவையும் சம்பாதித்து இருக்கும் மலாலாவுக்கு ஏராளமான விருதுகள் குவிந்திருக்கின்றன. அமைதிக்கான நோபல் பரிசு வரை அவர் பெயர் பரிந்துரைக்கப்பட்டது. அவர் பிறந்த ஜூலை 12ம் தேதியை ‘கல்வியை  வலியுறுத்தும் மலாலா தின’மாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்திருக்கிறது.

‘‘பாகிஸ்தான் பிரதமராக வேண்டும். கல்வி, ஆரோக்கியம் போன்றவற்றுக்கு முக்கியத்துவம் அளித்து நாட்டை முன்னேற்ற வேண்டும். இந்தியாவுடன் நட்புறவைப் பேண  வேண்டும்’’ என்று தன் லட்சியம் சொல்கிற மலாலா, ‘இன்றும் நான் ஒரு சாதாரண மாணவிதான். பெண்
குழந்தைகளின் கல்விக்காக குரல் கொடுப்பதுதான் என் கடமை’’ என்கிறார்.



பாகிஸ்தானில் மலாலாவின் புத்தகத்துக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. மலாலாவை மீண்டும் தாக்கும் திட்டமிருப்பதாக பகிரங்கமாக  தலிபான் மிரட்டல் விடுத்திருக்கிறது.

பிற்போக்குத்தனமும் பழமைவாதமும் கொண்ட தலிபான்கள் அவசியம் அறிய வேண்டிய விஷயம் இதுதான்... இன்று மலாலா தனிப்பட்ட மனுஷி இல்லை. அவரை  ஆதரிக்கவும் அவரைப் பாதுகாக்கவும் பல கோடி மக்கள் இருக்கிறார்கள்!
 விஜயா ஆனந்த்

‘‘பிரதமராக வேண்டும்... கல்வி, ஆரோக்கியம் போன்றவற்றுக்கு முக்கியத்துவம் அளித்து நாட்டை முன்னேற்ற வேண்டும்!’’