நியூஸ் பைட்ஸ்



ஆட்டோ தோட்டம்

சென்னையைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் குபேந்திரனைப் பற்றித்தான் இணையத்தில் ஹாட் டாக். தனது ஆட்டோவையே மினி தோட்டமாக மாற்றி  அசத்தியிருக்கிறார் குபேந்திரன். இதற்கு முன்பே சில பேர் இந்த  மாதிரி ஆட்டோவில் புதுமைகளை செய்திருக்கின்றனர். அவர்களிலிருந்து முற்றிலும் வித்தியாசம் காட்டியிருக்கிறார் குபேந்திரன். ஆம்; ஆட்டோவில் விதவிதமான செடி, கொடிகளை வைத்திருப்பது மட்டுமல்லாமல், வாடிக்கையாளர்களின் தாகம் தணிக்க குடிநீரையும் வைத்திருக்கிறார்.

தவிர, பயணத்தின் போது வாடிக்கையாளர்கள் படிப்பதற்காக சில தன்னம்பிக்கை நூல்களையும் காட்சிக்கு வைத்துள்ளார். உடல் உறுப்பு தானம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான வாசகங்களையும் ஆங்காங்கே ஒட்டியுள்ளார். இந்த ஆட்டோவில் பயணம் செய்த ஒரு வாடிக்கையாளர், தனது பயண அனுபவத்தை வீடியோவாக்கி இணையத்தில் தட்டிவிட, வைரலாகிவிட்டார் குபேந்திரன்.

வைரல் வீடு

பிரமாண்டமான வீடுகளை வைத்திருக்கும் இணைய பிரபலங்கள், தங்களது வீட்டின் ஒவ்வொரு அறையையும் வீடியோவாக்கி சமூக வலைத்தளங்களில் தட்டிவிடுவது வாடிக்கை. இந்த வீடியோக்கள் வீட்டுச் சுற்றுலா என்ற பெயரில் லைக்குகளை அள்ளி, வைரல் ஆகும். பொதுவாக மாளிகை போல வீடுகளை வைத்திருப்பவர்கள்தான் வீட்டுச் சுற்றுலா வீடியோக்களைப் பகிர்வார்கள். இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பிரபலமான ஸ்மிட் பால்வ் பகிர்ந்த வீட்டுச் சுற்றுலா வீடியோ ஒன்று செம வைரலாகிவிட்டது.

இத்தனைக்கு அது பிரமாண்ட வீடு இல்லை. மும்பையில் உள்ள மிகச் சிறிய அடுக்குமாடி குடியிருப்பு அது. அதிகபட்சமாக அந்த வீட்டின் பரப்பளவு 200 சதுர அடி இருக்கும். ஒருவருக்கு மேல் அதில் வசிக்க முடியாது. அந்த வீட்டுக்குள் இருக்கும் படுக்கை, கழிவறை, சமையலறை, டிவி பார்க்கும் இடம் என சகலத்தையும் வீடியோவாக்கி தனது பக்கத்தில் கசிய விட்டிருக்கிறார் ஸ்மிட். ஒரு சில மணி நேரங்களில் லட்சக்கணக்கான பார்வைகளை அள்ளிவிட்டது அந்தக் குட்டி வீடு.

கின்னஸ் சாதனை

அமெரிக்காவைச் சேர்ந்த சினிமா காதலர், ஜாக் ஸ்வோப். கடந்த ஜூலை 2022-ம் வருடத்திலிருந்து ஜூலை 2023-ம் வருடம் வரையிலான ஒரு வருடத்தில் 777 திரைப்படங்
களை பார்த்து கின்னஸ் சாதனை புரிந்துள்ளார் ஜாக். இவ்வளவு படங்களையும் அவர் திரையரங்குகளில் பார்த்துள்ளார் என்பதுதான் ஹைலைட். வார நாட்களில் தினமும் மூன்று படங்களைப் பார்ப்பார். வார இறுதியில் நான்கு அல்லது ஐந்து படங்களைப் பார்த்துவிடுவார்.

பார்த்த படங்களையே திரும்பத் திரும்ப திரையரங்குகளில் பார்ப்பார். ‘புஸ் இன் பூட்ஸ் : த லாஸ்ட் விஸ்’’ எனும் அனிமேஷன் படத்தை 47 முறை பார்த்திருக்கிறார் ஜாக். திரைப்
படம் பார்க்கும்போது போனை தொடவே மாட்டார். சில நொடிகள் கூட அசந்து தூங்க மாட்டார். படம் ஓடும்போது தண்ணீரைக் கூட குடிக்க மாட்டார். 2018-ம் வருடம் பிரான்ஸைச் சேர்ந்த வின்சென்ட் க்ரோன் என்பவர் ஒரு வருடத்தில் 715 படங்களை பார்த்திருந்ததே கின்னஸ் சாதனையாக இருந்தது. அதை முறியடித்திருக்கிறார் ஜாக்.

இளம் பஞ்சாயத்து உறுப்பினர்

கேரளாவின் இளம் பஞ்சாயத்து உறுப்பினர் என்ற பெருமையைத் தன்வசமாக்கியுள்ளார், நிகிதா. அவரது வயது 21. கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில் அமைந்துள்ளது வடக்கேகரா பஞ்சாயத்து. இந்தப் பஞ்சாயத்தில் உள்ள முரவாந்துரூத் வார்டின் உறுப்பினராகத் தேர்வாகியுள்ளார் நிகிதா. இதற்கு முன்பு இந்த வார்டின் உறுப்பினராக இருந்தார் நிகிதாவின் தந்தையான ஜோபி. ஒரு விபத்தில் ஜோபி இறந்துவிட, அவர் இடத்தை நிரப்புவதற்கான தேர்தல் நடந்தது. அந்த தேர்தலில் போட்டியிட்டு பெரும்வாரியான வாக்குகளைப் பெற்று பஞ்சாயத்து உறுப்பினராகியுள்ளார் நிகிதா. அவருக்கு வாழ்த்துகள் குவிகின்றன.

அதிகரிக்கும் மார்பக புற்றுநோய்

முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மார்பக புற்றுநோய் அதிகரித்து வருவதாகச் சொல்கிறது உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வு. இந்நிறுவனம் 2020-ம் ஆண்டு ஓர் ஆய்வைச் செய்தது. அதன்படி உலகமெங்கும் 20 லட்சத்துக்கும் அதிகமான பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதில் சுமார் 6 லட்சம் பேர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்துவிட்டனர். அதே ஆண்டில் இந்தியாவில் மட்டுமே 2 லட்சத்துக்கும் அதிகமான பெண்களுக்கு மார்பக புற்றுநோய் இருப்பது தெரியவந்தது.

இவர்களில் 76 ஆயிரம் பேர் இறந்திருக்கலாம். 2025ல் இந்தியாவில் மட்டும் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை 2.3 லட்சமாக உயரலாம் என்று அதிர்ச்சியளிக்கிறது அந்த ஆய்வு.

த.சக்திவேல்