முகமறியா மனிதர்கள் மேல் வைத்த நம்பிக்கையே எனது தொழிலின் மூலதனம்!
கல்யாணமா, காதுகுத்தா, பிறந்த நாள் விழாவா, சடங்கா, உள்ளூரா, வெளியூரா, வெளிநாடா எதுவாயிருந்தா என்ன சங்கீதாவைக் கூப்பிடுங்க என்று சொல்லும் அளவிற்கு A to Z சர்வீஸ் செய்து அசத்துகிறார் ‘சரா ஃபேஷன்ஸ்’ நிறுவனத்தின் உரிமையாளர் சங்கீதா ராமசாமி. சரா ஃபேஷன்ஸ் ஆடைகளுக்கு மட்டுமில்ல அனைத்திற்கும் ஆனது என்பதைதான் இவரது தொழிலின் பொன்மொழியாக வைத்திருக்கிறார். சங்கீதாவை நம்பினோர் கைவிடப்படார் என்னுமளவிற்கு விரும்பிய பொருட்களை விரும்பிய நேரத்தில் விரும்பிய இடத்திற்கு அனுப்பி ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறார். இது எப்படி சாத்தியம் என அவரிடமே கேட்டோம். A to Z என்பது என்ன கான்செப்ட்? எப்படி இந்த ஐடியா வந்தது?
நாங்க ஆஸ்திரேலியாவில் இருந்தபோது எங்களுக்கு நம்ம ஊர் பொருட்கள் அங்கே கிடைக் காது. நானும் என் தோழிகளும் நம்மூரில் கிடைக்கக் கூடிய பொருட்களை ரொம்பவே மிஸ்செய்தோம். அப்ப தான் இந்த ஐடியாக்கான முதல் விதை எனக்குள் தோன்றியது. அதன் பிறகு தான் சரா ஃபேஷனுக்கான முழுவடிவம் எனக்கு கிடைத்தது. அந்த சமயத்தில் தான் கோவிட் தாக்கம் ஏற்பட்டது. லாக்டவுன் என்பதால், எல்லாரும் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
சின்னச் சின்ன விழாக்கள் கூட கொண்டாட முடியவில்லை. அவர்கள் ரொம்பவே திண்டாடிப் போனார்கள். உடைகள் முதல் அதற்கு தேவையான அணிகலன்களைக் கூட கடைகளில் சென்று வாங்க முடியாமல் தவித்தார்கள். அவர்களுக்கு உதவவே ஆன்லைன் முறையில் உடைகளை வாங்கி கொடுத்து வந்தேன். நான் ஏற்கனவே உடை அலங்காரம் குறித்து படித்திருந்ததால், எனக்கு அந்த நேரத்தில் நான் படிச்ச அந்த படிப்பு எனக்கு அந்த நேரத்தில் கைக்கொடுத்தது.
அப்போது சிலர் துணிகள் மட்டுமில்லாமல், வீட்டுக்கு தேவையான சமையல் மசாலா பொருட்களையும் அரைச்சி தர முடியுமான்னு கேட்டாங்க. அதனால் குழம்பு மிளகாய் பொடி தயார் செய்து கொடுத்தேன். அதை தொடர்ந்து கேக், சாக்லெட் என பல்வேறு விதமான வேண்டுகோள்கள் பலரிடமிருந்து வந்தது. அதில் மிகவும் முக்கியமாக நிலவேம்பு பவுடர் கேட்டவங்க பலர். இப்படி உடையில் ஆரம்பித்து நிலவேம்பு பொடி வரை நான் செய்து கொடுக்க ஆரம்பித்தேன். அப்ேபாது துவங்கிய பயணம் இன்று வரை தொய்வேயில்லாமல் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறது.
உங்களின் தனித்துவமான வாடிக்கையாளர்கள்?
உடைகள் பொறுத்தவரை நான் எதையுமே மொத்தமாக வாங்கி வைத்திருக்க மாட்டேன். காரணம், எல்லா டிசைன் உடைகளும் விற்பனையாகும்ன்னு சொல்ல முடியாது. சில சமயம் சில உடைகள் அப்படியே தங்கிடும். அதனால் வாடிக்கையாளர்களின் தேவையை அறிந்து தான் நான் அவர்களுக்கான உடைகளை தேர்வு செய்து தருவேன். சிலர் குறிப்பிட்ட நிறம், புடவையின் பார்டர் மற்றும் டிசைன் வேண்டும்ன்னு கேட்பாங்க. அவர்கள் விரும்பும் டிசைனை அவர்களுக்காக ப்ரத்யேகமாக அலைந்து திரிந்து வரவழைத்து தருவேன்.
சிலர் பூஜைகளுக்கான விலை உயர்ந்த வித்தியாசமான பொருட்கள், வாஸ்து சம்பந்தப்பட்ட பொருட்கள், வெள்ளியிலான பொருட்கள், தனித்துவமான ஆடைகள் என ஸ்பெஷலாக வரவழைத்து தர கேட்பார்கள். அவர்களுக்காக பல இடங்களில் அலசி ஆராய்ந்து வாங்கி அனுப்புவேன்.
குறிப்பாக வெளிநாட்டில் வசிப்பவர்கள் ஃபங்ஷன்களுக்கான ப்ரத்யேகமான ஆடைகள் மற்றும் பொருட்களை இந்தியாவிலிருந்து வாங்கி அனுப்ப சொல்வார்கள். சிலர் இங்கேயிருக்கும் சொந்தங்களுக்கு பரிசாகவோ அல்லது சீர்களோ தரச்சொல்லி பணம் அனுப்புவார்கள். எதுவானாலும் இல்லையென சொல்லாமல் கொஞ்சம் நேரமெடுத்தாவது முடித்து தருகிறேன். கஸ்டமர்களின் பிரத்யேகமான தேவைகள் என்னவாக இருக்கும்?
பிறந்த நாள் விழாக்களுக்கு தனித்துவமான சாக்லெட் பொக்கே வேண்டும் என்று கேட்பார்கள். அதை செய்து தருவேன். அதில் முழுக்க முழுக்க பயன்படுத்துவது என்னுடைய தயாரிப்பான ஹோம்மேட் சாக்லெட்கள் தான். அதேபோல் விதவிதமான கேக்குகளும் அனுப்பி வைக்கிறேன். காஞ்சிபுரம் பட்டுப் புடவைகளுக்காக சொஸைட்டியில் பிரத்யேக ஆர்டர்கள் மூலம் கஸ்டமர்களின் விழாக்கால ஆடை தேவைகளை பூர்த்தி செய்வேன்.
அதே போன்று வெளிநாட்டில் வசித்து வந்த இந்தியர் ஒருவர் தன் மகளின் மஞ்சள் நீராட்டு விழாவிற்கான சடங்கு குறித்த பொருட்கள் அனைத்தையும் கேட்டிருந்தார்கள். அவர்கள் கேட்டிருந்த பொருட்கள் மற்றும் விழாவிற்கான உடைகளை பிரத்யேகமாக நானே வடிவமைத்து தைத்து, உடைக்கு ஏற்ப மேட்சிங் அணிகலன்களையும் அனுப்பி வைத்தேன். அவர்கள் பாரம்பரிய முறைப்படி விழாவினை சிறப்பாக கொண்டாடியதாக மகிழ்வுடன் தெரிவித்தார்கள்.
மேலும் அந்த விழாவின் புகைப்படங்களையும் அனுப்பி வைத்திருந்தார்கள். அது எனது உழைப்பிற்கு கிடைத்த அங்கீகாரம் ப்ளஸ் மரியாதை என்பேன். அதே போன்று சவுதி அரேபியாவில் புதியதாக தொடங்கும் ஓட்டலில் வேலையாட்களுக்கான 150 செட் யூனிபார்ம்களை கேட்டிருந்தார்கள். பல ைசஸ்களில் வாங்கி அனுப்பினேன். மேலும் அவர் நிறுவன பெயர் பொறித்த 2000 பலூன்களையும் கேட்டிருந்தனர். அதனை திறன்பட செய்து அசத்தியதில் அதன் கிளையான மற்றொரு புதிய ஹோட்டலுக்கும் என்னிடம் ஆர்டர் வந்தது.
அரிய பொருட்களை தேடி சிரமப்பட்ட அனுபவங்கள் உண்டா?
சமீபத்தில் ஒரு வளைகாப்பு நிகழ்வுகளுக்காக மண்ணால் ஆன வளையல்கள் வேண்டும் என கேட்டிருந்தார்கள். அவர்களுக்காக அலைந்து திரிந்ததில் அந்த வளையல்கள் வடநாட்டில் ராஜஸ்தான் பகுதிகளில் கிடைக்கிறது என தெரிய வந்தது. அவர்களுக்காக ஸ்பெஷலாக தருவித்து கொடுத்தேன். அவர்களுக்கு மட்டுமல்ல அது எனக்கும் மனநிறைவையும் மகிழ்ச்சியையும் தந்தது. அதே போன்று வெளிநாட்டு வாழ் கஸ்டமரின் இந்திய உறவு பெண்ணுக்கு சீர் செய்யும் ஆர்டர் வந்தது.
அதற்காக புத்தகங்களுடன் சேர்த்து நட்ஸ் வகைகள் என வித்தியாசமான கான்செப்ட்டில் சீர் வைத்தது சிறப்பாக இருந்தது. வித்தியாசமான பூஜை மற்றும் கலை பொருட்கள், வாஸ்து சார்ந்த பொருட்கள் கிடைப்பது சற்று சிரமமாக இருக்கும். ஆனால் எப்படியாவது தேடி கண்டுபிடித்து வாங்கி கொடுத்து விடுவேன். ஒரு முறை கஸ்டமர் ஒருவர் வித்தியாசமான வெள்ளி விளக்கு ஒன்றினை கேட்டிருந்தார். அவர் கேட்ட டிசைன் எங்குமே கிடைக்கவில்லை. அதனால் அதை ஆர்டர் கொடுத்து செய்து அனுப்பினேன்.
உங்களுடைய கஸ்டமர்கள்?
முதன் முதலில் சமூக வலைத்தளங்களின் மூலமாகதான் எனது தொழிலை தொடங்கினேன். அதில் எனக்கான தனி பக்கங்கள் உண்டு. முதன் முதலில் எனக்கான கஸ்டமர்கள் அங்கிருந்து வந்தவர்கள்தான். அதன் பின் வாய்மொழியாக பரவியதில்தான் வியாபாரம் சூடுபிடிக்க துவங்கியது. எனது நண்பர்கள், உறவினர்கள் சமூகவலைத்தள நண்பர்கள் என எனது சேவைகளை பெற்று பாராட்டியதில் மேலும் அவர்களது நண்பர்களுக்கு நான் அறிமுகமானேன். இப்படி தான் எனது தொழிலை விரிவுபடுத்தினேனே தவிர விளம்பரங்கள் என ஏதும் தனியாக செய்ததில்லை. இன்று கடல்கடந்து இலங்கை, நியூஸிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா என எனது கஸ்டமர்கள் உலகெங்கும் உள்ளனர்.
உங்களிடம் இருக்கும் ஸ்பெஷாலிட்டி?
அமெரிக்காவில் வாழும் பஞ்சாபி நண்பர் கழுத்து மற்றும் காதில் அணியக்கூடிய அணிகலன் ஒன்றை கேட்டிருந்தார். அவரின் விருப்பக் கடவுளான ராதா கிருஷ்ணரை 3×3 அங்குல agate கல்லில் வெட்டி எடுத்து பாரம்பரிய வண்ணக் கலவைகளால் வரைந்து கண்ணாடியால் மேல் பூச்சு செய்து பதக்கத்தில் மஞ்சாடி விதைகளை கோர்த்து சரடால் இணைத்து Aabaranaa Creatives கலைஞர்கள் வடிவமைத்து தந்தார்கள்.
கழுத்தணிக்கு ஏற்ப காதணியும் தேவை என சொன்னதால் வாடிக்கையாளர் யோசனைப்படி ஆயத்தமாக கிடைத்த white metalலில் மஞ்சாடி விதைகளை கோர்த்திருக்கிறோம். மக்கும், மறுசுழற்சிக்கு உட்படும் பொருட்களால் செய்யப்படும் இது போன்ற பொருட்களை தேவைக்கேற்ற மாறுதல்களுடன் செய்து தருகிறோம். தொழிலின் சாதக பாதகங்கள்?
நான் வசிக்கும் ஊரில் பாக்கேஜிங் சிஸ்டம் சரியானதாக இல்லை. பல நாட்கள் கழித்து வெளிநாட்டுக்கு செல்லும் பொருட்கள் சேதாரமில்லாமல் செல்ல வேண்டும். அதனால் 200 கி.மீ தூரம் பயணித்து குறிப்பிட்ட ஊருக்கு சென்று முறையாக பேக் செய்து வெளிநாட்டுக்கு அனுப்புவேன். இதில் பல சிரமங்கள் இருந்தாலும் அதனை சேதாரமில்லாமல் பெற்றுக்கொண்டு வாடிக்கையாளர்கள் தரும் பாராட்டுகள் மற்றும் மனநிறைவு என் கஷ்டங்களை நீக்க ஒரு காரணம்.
அதே போல் இந்த தொழிலில் பரஸ்பர நம்பிக்கை தான் மூலதனம். சில சமயம் பொருட்களை பெற்றுக் கொண்டு பணம் அனுப்பாத சில கஸ்டமர்கள் உண்டு. தங்களது விருப்ப பொருட்கள் கிடைத்ததும் மகிழ்ச்சியில் நிறைவாய் அனுப்புபவர்களும் உண்டு. முகமறியா தொழிலில் மனிதர்கள் மேல் மாறா நம்பிக்கை ஒன்றினை வைத்தே தொழிலை தொடர்ந்து செய்கிறேன். கடவுள் புண்ணியத்தில் இதுவரை என்னிடம் கேட்டு இல்லை என்னால் முடியவில்லை என்னும் நிலை இதுவரை வரவில்லை என்பது எனது தொழில் பக்திக்கு கிடைத்த அதிர்ஷ்டம். சந்தோஷத்தில் அதிக சந்தோஷம் அடுத்தவர்களை சந்தோஷப்படுத்தி பார்ப்பது தானே... அதில் கொஞ்சம் லாபமும் மனநிறைவும் கிடைத்தா அதுவே போதும் என்கிறார் சங்கீதா.
தனுஜா
|